பொட்டு அம்மான் மறைந்து வாழ்வதாக, திவயின பத்திரிகை தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளராக கடமையாற்றி வந்த சண்முகலிங்கம் சிவசங்கர் எனப்படும் பொட்டு அம்மான் தமிழகத்தில் மறைந்து வாழ்ந்து வருவதாக திவயினவில் கீர்த்தி வர்ணகுல சூரிய தகவல் வெளியிட்டுள்ளார்.
மனைவி, பிள்ளையுடன் தமிழகத்தில் பொட்டு அம்மான் மறைந்து வாழ்ந்து வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொட்டு அம்மான், 'குருட்டீ' என்ற பெயரில் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது நந்திக்கடல் மோதலில் பொட்டு அம்மான் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்ட போதிலும் அவரது சடலம் மீட்கப்படவில்லை.
வன்னி யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பது பற்றிய தகவல்களை திவயின வெளியிட்டுள்ளது.
பொட்டு அம்மான் உயிரிழந்தார் என்பது பற்றிய உறுதியாள சாட்சியங்களை கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினால் இந்திய அதிகாரிகளுக்கு வழங்க முடியாத நிலைமை காணப்பட்டதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் மற்றும் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான பொட்டு அம்மான் உயிருடன் இருப்பது தொடர்பில் காலத்திற்கு காலம் சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.
எனினும் உறுதியான சான்றுகளின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2009ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொட்டு அம்மான் உயிரிழந்தார் என்பதனை அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உறுதிப்படுத்தியிருந்தார்.
சடலம் கிடைக்காத போதிலும், பொட்டு அம்மான் உயிரிழந்தமை நூறு வீதம் உறுதி செய்ய முடியும் என சர்வதேச ஊடகங்களுக்கும் கோதபாய தெரிவித்திருந்தார்.
எனினும் பொட்டு அம்மானை படையினர் ஹொங்கொங்கில் கைது செய்ததாகவும், கானா நாட்டில் வாழ்ந்து வருவதாகவும் கடந்த காலங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறெனினும், கொழும்பு ஊடகத்தின் பொட்டு அம்மான் பற்றிய தகவல்களை பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதி செய்யவில்லை.
இதேவேளை, திவயன குறித்தும் கீர்த்தி வர்ணகுலசூரியவின் பதிவுகள் குறித்தும் அண்மையில் பிரதமர் றணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment