Header Ads



பணச்சலவை மோசடி அம்பலம், இன்டர்போலின் உதவியை நாடும் இலங்கை

பெருந்தொகை பணச்சலவை மோசடி ஒன்றுக்கு இலங்கையில் உள்ள அரசசார்பற்ற அமைப்பு ஒன்று மத்திய நிலையமாக இருந்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அரசசார்பற்ற அமைப்பு சாலிகா நிதியம் என்ற பெயரில் இலங்கையின் கம்பனி சட்டத்தின்கீழ் 2014ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதன் முக்கிய அதிகாரியாக ஹம்பாந்தோட்டையை சேர்ந்த ஒருவர் உள்ளார். எனினும் அவர் தற்போது ஜப்பானில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பணிப்பாளர்கள் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று கம்பனி பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவர்களின் தொலைபேசிகளுக்கு பதில் வழங்கப்படுவது தவிர்க்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஜப்பானில் இருப்பதாக கூறப்படும் முக்கியஸ்தரை கைதுசெய்ய சர்வதேச பொலிஸின் உதவி ஏற்கனவே இலங்கை அதிகாரிகளால் கோரப்பட்டுள்ளது.

ஏற்கனவே சீனாவை சேர்ந்தவர்கள் 81 மில்லியன் டொலர் பணக்கொடுக்கல் ஒன்றை பிலிப்பைன்ஸ் வங்கியின் ஊடாக அனுப்பியுள்ளனர்.

எனினும் 20 மில்லியன் டொலர்களை பங்களாதேஸ் மத்திய வங்கியின் ஊடாக அனுப்ப முயற்சித்தபோது அது தோல்வி கண்டுள்ளது.

ஏற்கனவே இலங்கையில் உள்ள அரச சார்பற்ற நிறுவனம் நலன்புரி நடவடிக்கைகளுக்கு என இரண்டு பாரிய கொடுப்பனவுகளை இலங்கையின் உள்ளூர் வங்கியின் ஊடாக குறித்த பிலிப்பைன்ஸ், பங்களாதேஸ் போன்ற வங்கிகளின் ஊடாக பெற்றுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

எனினும் அதன் தொகை தெரியவரவில்லை.

இந்த நிலையில் குறித்த பணக்கொடுக்கல்கள் தமது மத்திய வங்கியின் ஊடாக பரிமாற்றப்பட்டமைக்கு பொறுப்பேற்று, பங்களாதேஸ் மத்திய வங்கியின் ஆளுநர் கடந்த வாரம் பதவி விலகியுள்ளார். அவருடன் இணைந்து சில வங்கி அதிகாரிகளும் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.