Header Ads



இஸ்லாமிய மார்க்கம், பறந்து விரியக் காரணமென்ன..?

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)     

இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கழைக் கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில் 2011 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தில் வேற்று மதத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஓடோடி வந்தவர்கள் 1,00,000 (ஒரு லட்சம்) பேர்கள் என்று கூறுகிறது. அதில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் இஸ்லாமிய மார்க்கத்தினைத் தழுவியர்கள் என்று பட்டியல் போட்டுக் காட்டுகின்றது.

உங்களுக்கெல்லாம் தெரியும் அபாண்டமாக பழிசுமத்தி ஈராக் ஜனாதிபதி மாவீரன் சதாம் ஹுசைனை தூக்கு மேடைக்கு ஏற்றும் அளவிற்கும், இன்றும் ஈராக்கில் அமைதி வரமுடியாமல் செய்த முக்கியமானவர் என்று கருதப் படும் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயரும் ஒருவர் என்று. அவருடைய மனைவியின் சகோதரி சசெக்ஸ் ஏ வீவர் கூட இஸ்லாத்தினை தழுவியிருக்கின்றார் என்றால் பாருங்களேன். அவர் இஸ்லாத்திற்கு வந்த காரணத்தினை கீழ்கண்டவாறு கூறுகிறார்.

1) இஸ்லாமிய மாணவர்களிடையே சகோதர பாசம் இருக்கின்றது.

2) அவர் மேற்காசிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது முஸ்லிம்கள் சொல்ல முடியா துன்பம் போர்களால் அனுபவித்தாலும் வாழ்க்கையில் பிடிப்புடன் அமைதியாக வாழ்கின்றனர். கடுமையான கட்டுப் பாடுடன் நோன்பு பிடித்தும், ஏழைகளுக்கு உதவியும், ஒழுக்க சிந்தனையுடன் வாழ்கின்றனர்.

3) மனித இனம் முழுவதும் மீட்கும் கோட்பாடு, பரந்த மனப் பான்மை, உதவிக்கு மூன்றாம் நபர் மூலம் கையேந்தாது, ஏக இறைவனிடம் நேராக உதவி கோரும் வழிபாடு.

4) எந்த விதத்திலும் இணக்கம் கொள்ளாத உணவு, உடை, சமூதாய, பாலின கட்டுப்பாடு ஆகியவைகள் ஆகும்

12.1.2016 இல் யாகூ இணைய தளத்தின் அல்குர்ஆன், கிருத்துவர்கள் பழைய-புதிய கட்டளைகள் ஆய்வுப் படி கிருத்துவ வேதங்களில் சொல்வதினை விட இஸ்லாமிய மார்க்கம் வன்முறைக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறுகிறது.

அகிலம் போற்றும் இறுதி நபி எம்பெருமானார் ரசூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வால் வழங்கப் பட்ட வஹியினை தனி மனிதராக களத்தில் பல எதிர்ப்புக்கிடையே மக்களுக்கு எடுத்துச் சொன்னதினால் இன்று இஸ்லாமிய மார்க்கம் கிருத்துவமதத்திற்கு அடுத்த படியாக 162 கோடி மக்களை தன்னிடையே ஈர்த்துள்ளது என்று வேற்று மதத்தினவரும் போற்றுகின்றனர். அதற்கு மூல காரணம் என்னென்ன என்று சற்றே காணலாம்:

1) நீங்கள் எந்த மத வழிபாடுத் தலங்களுக்கும் போங்கள், எங்காவது ஆரவாரம், அமளி, ஒலி பெருக்கி சத்தம் இல்லாமல் வழிபாடு நடக்கின்றதா அல்லது எந்த சடங்கும் இல்லாமல் நடக்கின்றதா அல்லது எந்த காணிக்கையும் இல்லாமல் தரிசனம் கிடைக்கின்றதா என்று பாருங்கள் கிடைக்காது. ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் உடுத்திய துணியுடன் தொழ வரும் நிலையினை காணுகின்றோம்.

4.3.2016 அன்று சென்னை செம்புதாஸ் தெரு பள்ளிக்கு ஜும்மா தோழா சென்றிருந்தேன். என் பக்கத்தில் அமர ஒரு தோழர் வந்தார். அவர் அப்போதுதான் ஒழு செய்த முகத்தில் தண்ணீர் வழிய வந்து அமர்ந்தார். கையில் கைத்துண்டு இல்லை. மாறாக தனது கைலியின் முனையினைப் பிடித்து துடைத்துவிட்டு அமர்ந்தார். இதனை எதற்காகச் சொல்கின்றேன் என்றால் எந்த மாற்று வழிபாடு தளத்திற்காவது வெறும் கையோடு போகமுடியுமா? வெள்ளிகிழமை பயானில் எழுப்பப் படும் சத்தத்தினை விடவும், தொழுகைக்காக அழைப்பு விடுவதினைத் தவிர எந்த ஒலி பரப்பும் செய்வதில்லை.

2) எந்த மதத்திலாவது இறைவனால் அளிக்கப் பட்ட வேதத்தினை முழு மனனம் செய்தது உண்டா? ஆனால் இஸ்லாத்தில் அல் குரான் அத்தனை ஆயத்துக்களையும் மனனம் செய்து ஒரு வரி பிழையில்லாமல் அப்படியே ஒப்புவிக்கும் மார்க்கம் இஸ்லாம்.

3) பல்வேறு கடவுள்களை தெய்வங்களாக வழிப் பட்டு வந்த காலக்கட்டத்தில் அல்லாஹ் ஒருவனே இறைவன், மற்றவைக்கு எந்த சக்தியும் இல்லை என்று பல்வேறு எதிர்ப்புக்கிடையே சொன்னது ரசூலல்லாஹ் தான் என்று உலகமே ஒப்புக்கொள்கிறது. அது மட்டுமல்ல அந்தக் காலக்கட்டத்தில் தனக்கு என்று எந்த பலமும், பரிவர்த்தமும் கூடாது, நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான் என்று தன்னை ஒரு சாமானியன் என்று சொல்லி மற்ற மதங்களின் போதகர்களை விட தனித்து நின்று வளர்க்கப் பட்ட மார்க்கம்.

4) பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்களை நல்வழிப் படுத்த மண்ணில் பிறந்த 1,70,000 நபிமார்களில் நானும் ஒருவன், அதில் கடைசி நபியும் நானே என்று அனைத்து நபிமார்களையும் அங்கீகரித்தது இஸ்லாம்.

5) நீங்கள் ஒரு பள்ளிக் கூடத்திற்கு சென்றீர்கள் என்றால் முதலில் மாணவர்களுக்குச் சொல்லித் தருவது, 'எப்படி ஒழுக்கத்தினை கடைப் பிடிக்க வேண்டும்' (கோட் ஆப் காண்டக்ட்) என்பது தான் என்று அறிவீர்கள். அதே போன்று அல் குரானில் வருகின்ற அத்தனை ஆயத்துக்களும், மக்களிடையே ஒழுக்க சிந்தனைகளைத் தூண்டுவையாகத் தான் இருக்கின்றது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.

6) கலிமா: ஏக இறைவனுக்கும், இறுதி நபிக்கும் ஈமான் கொள்வது.

7) தொழுகை: காசுகொடுத்து பயிற்சிபெறாது, மனித மனதினை மனம் போன போக்கில் அலைய விடாது டென்சனை குறைக்கக் கூடிய சிறந்த யோகா.

8) நோன்பு: மின்சார ஆபீசில் சில சமயம் கரண்ட் வினியோகத்தினை நிறுத்தி விடுவார்கள், கேட்டால் பழு பார்க்கும் ‘மைன்டனன்ஸ்’ என்று பதில் வரும். சாதாரண எந்திரங்களுக்கே ஓய்வு தேவைப்படும் போது, வருடம் முழுவது உண்ணுவது மூலம் களைத்திருக்கும் உடல் உறுப்புகளுக்குத் தேவைப்படாதா? ஆகவே தான் மனிதன் நோன்பு மூலம் புத்துணர்வு பெற வழியிறுத்தப் பட்டது. நோன்பு மூலம் புற்று நோய் போன்ற கொடிய நோய்களையும் தடுத்து விடுகிறது.

9) ஜக்காத்: பொருள் மலை போன்று ஒருவரிடமே குவியாது, கடல் போன்று, 'பகிர்ந்துண்டால் பால் மணக்கும்' என்று சொல்லும் பழமொழிக்கேற்ப ஈகை பழக்கத்தினை சிறு வயதிலேயே போதிக்கும் மார்க்கம்.

10) ஹஜ்: வசதி, வாய்ப்புள்ளவர் எல்லாம் வல்ல அல்லாஹிவினை முதன் முதல் வழிபாட்டுத் தளம், மற்றும் நபிமார்கள் வாழ்ந்த வரலாற்று சிறப்பு மிக்க நகர்களைக் காணுவது.

அது சரி சார், ஏன் இஸ்லாமிய உலகில் சண்டை, சச்சரவு, போர் என்று கேட்கலாம். காரணம் நாம் பல்வேறு விதத்தில் பிரிந்து நிற்பதினால், பலமற்று இருக்கின்றோம். நான் கேட்கின்றேன், இறைவனால் கொடுக்கப்பட்ட செல்வக் கொழிப்பு இஸ்லாமிய நாடுகளில் இல்லையா, இஸ்லாமியருக்கு உடல் வலிமை இல்லையா, இஸ்லாமியருக்கு அறிவு இல்லையா, அத்தனையும் இருந்தாலும் மேலை நாடுகள் இஸ்லாமிய உலகம் பிரிந்து இருந்தால் தான் தாங்கள் ஆயுத கடைகள் நடத்தமுடியும், இஸ்லாமிய உலகில் உள்ள செல்வங்களை சுரண்ட முடியும் என்று நினைத்து இஸ்லாமியரை பிரித்தாளும் கொள்கைகளுக்கு பலிகிடாவாக்கி விடுகிறார்கள் என்றே சொல்லலாம்.

அராபிய, ஆப்ரிக்கா, ஆசிய முஸ்லிம் நாடுகள் மேலை நாடுகளின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடு பட்டாலும், மேலை நாடுகளின் ஆதிக்கத்திலேயே இன்னும் முஸ்லிம் நாடுகள் உள்ளன. வட கொரியா நாட்டினைப் பாருங்கள், மேலை நாடுகளிடம் இருந்து பல மிரட்டல்கள் வந்தாலும் தனது நாட்டின் இறையாமையினை விட்டுத் தர மறுக்கின்றது.

ஆனால் இஸ்லாமிய நாடுகள் மேலை நாடுகளுக்கு காவடி தூக்குவதால், தங்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாததால் இஸ்லாமிய மக்கள் அகதிகளாக ஒவ்வொரு நாடுகளுக்கும் ஓடுகின்றனர் செல்வமிருந்தும்.

முஸ்லிம் நாடுகளில் அரசாட்சி செய்பவர்கள் தங்களுடைய ஈகோவினை தூக்கி எறிந்து, மக்கள் நலமே மன்னர் நலம் என்று மக்களின் நல வாழ்விற்கு வழி வகுக்க வேண்டும். அதே போன்று பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களும் ஒற்றுமையினை ஒரு முழக்கமாக வீதி, முகல்லா தோறும் எழுப்ப வேண்டும்.

எம்பெருமானார் ரசூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கள் தலைவராக இருந்தாலும் பேரீத்த மர ஓலைக் கீற்றில் படுத்துத் தூங்கி எளிமைக்கு உதாரணமாக இருந்தார்கள். கலிபா உமர் போன்ற ஆட்சியினை மகாத்மா காந்தி இந்தியாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்று கனவு காணும் அளவிற்கு இஸ்லாமிய ஆட்சி செய்த மக்கள் இன்று ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளால் இஸ்லாமிய உலகமே அனாதையாக உள்ளது உங்களுக்கெல்லாம் பரிதாபமாக தோணவில்லையா?

ஆகவே இஸ்லாமிய உலகம் மக்கள் நலம் கொண்டதாக இருக்க வேண்டும், மன்னர் ஆடம்பரத்திற்கும், பிரித்தாளும் கொள்கைகளுக்கும் வழிவகுத்து இஸ்லாமியரை பலிகிடாவாக்கிவிடக்கூடாது.

முதியோர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் கண்ணின் மணிபோல பாதுகாத்து, சமூதாய ஒற்றுமை குழையாது பார்த்துக் கொண்டால் 162 கோடி மக்கள் வளர் பிறை போல மேலும் வளர வாய்ப்பும், மற்ற மத மக்கள் கடலை நோக்கி ஓடி வரும் ஆறுகள் போல ஓடி வருவருவார்கள் என்பது சரியாகுமா சகோதர, சகோதரிகளே!

1 comment:

  1. Islam has its'own protocols to become alive,attracts people inside and spread all over the world.
    It's never want anyone to arbitrarily force someone to accept it.

    ReplyDelete

Powered by Blogger.