அரசை வீழ்த்தும் சதித் திட்டமும், அதற்கான பல்முனைத் தாக்குதலும்..!!
-நஜீப் பின் கபூர்-
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டில் இராணுவப் புரட்சியொன்று பற்றி ஆங்கில, சிங்கள ஊடகங்கள், மற்றும் இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்தக் கருத்து அடிப்படையிலே நடைமுறைச் சாத்தியம் இல்லாதது என்று நமது வார ஏட்டில் சில தினங்களுக்கு முன்னர் சொல்லி இருந்தோம். எமது அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றங்களும் இல்லை என்று மீண்டும் உறுதியாகச் சொல்லி, புதியதோர் சதி பற்றி நமது வாசகர்களுக்குச் சில தகவல்களை இந்த வாரம் சொல்லி வைக்கலாம் என்று எண்ணுகின்றோம்.
முன்னைய இராணுவச்சதி சாத்தியம் இல்லாத ஒரு விடயம் என்று சொல்கின்ற நாம், ஜனநாயக வழியிலான இந்த சதி நடவடிக்கை சாத்தியமானது - யதார்த்தமானது என்று கூறுகின்றோம். ஜனநாயக வழியில் ஆட்சி மாற்றம் ஒன்றை நிகழ்த்துவதற்கு எவருக்கும் உரிமை இருக்கின்றது. இதற்காக நாம் என்ன நியாயங்களை இப்போது முன்வைக்கின்றோம் என்று பார்ப்போம்.
ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் துணையால் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்தவர்தான் தற்போதய ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன. அதே போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தனிப்பட்ட அரசியல் நகர்வுகளினால் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்தவர்தான் தற்போதய பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ. இப்படி ஒருவர் துனையில் ஒருவர் அதிகார ஆசனத்தில் அமர்ந்தாலும் இந்த இரு கட்சி அரசியல் வாதிகளிடத்தில் இது தொடர்பான புரிந்துணர்வு எந்தளவு இருக்கின்றது என்ற விடயத்தில் நிறையவே கேள்விகள் இருந்து வருகின்றன.
இது பற்றி நிறையவே பேச-எழுத வேண்டி இருந்தாலும் அண்மையில் இந்தக் கட்சிகளின் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் விசுவாசமில்லாத விதத்தில் வெளியிட்ட கருத்துக்களை இங்கு பார்க்கலாம். இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது எமக்கு மிகுந்த அதிருப்தி நிலை இருந்து வருகின்றது என்ற குறிப்பிடுகின்றார் அமைச்சர் திலான் பெரேரா.
அதேபோன்று அண்மையில் நடைபெற்ற ஒரு மரண வீட்டிற்குச் சென்ற தற்போதய ரணில் தலைமை நல்லாட்சி அரசாங்கத்தில் பதவி வகிக்கின்ற மைத்திரி தரப்பு அமைச்சர் ஒருவர், மஹிந்த சொல்லித்தான் நாங்கள் இந்த அமைச்சுப் பதவிகளை ஏற்றிருக்கின்றோம். அவர் அரசாங்கத்தை அமைக்கின்ற நேரம் வரும் போது நாங்கள் அவருடன் போய் விடுவோம் என்று 'அது' தலைக்கேறி சொன்ன கதை ஜனாதிபதி மைத்திரிக்கு எட்டி இருக்கின்றது.
கண்டி மாவட்ட ஜனரஞ்சக அரசியல் வாதி இதனை மைத்திரியிடம் கூற அவர் மட்டுமல்ல இன்னும் பலபேர் இப்படி எங்களுடன் இருக்கின்றார்கள் என்ற விடயத்தை நான் தெரிந்து கொண்டுதான் இந்த அரசாங்கத்தை நகர்த்திக் கொண்டிருக்கின்றேன் என்று அவரிடத்தில் கூறி இருக்கின்றார் ஜனாதிபதி மைத்திரி.
ஹேவாஹெற்ற தேர்தல் தொகுதியில் புதிய அமைப்பாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க மாரஸ்ஸன என்ற இடத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசும் போது, எங்களுக்குத் தொடர்ந்தும் இப்படி ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டிக் கொண்டு பயணம் போக முடியாது. அப்படிப் போவதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. நாங்கள் தனித்து அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் போட்ட கூட்டு தற்காலிகமானது என்று அதிரடியாக அறிவித்திருக்கின்றார்.
அதே போன்று இந்த அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சிகாரர்களுடைய அரசாங்கம் என்றுதான் கிராமத்து சுதந்திரக் கட்சிக்காரர்கள் கருதுகின்றார்கள் என்றார் அவர்.
இந்தப் பின்னணியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐந்து அமைச்சர்களும் மூன்று பிரதி அமைச்சர்களும் திடீரென மஹிந்த அணிக்குத் தாவி மைத்திரிக்கு அதிர்ச்சி வைத்தியம் பார்க்க இருக்கின்றார்கள் என்ற கதை அடிபடுகின்றது. இவர்கள் உள்ளுராட்சி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பின்னர்தான் மஹிந்த தரப்புக்குத் தாவுவதாக முன்பு திட்டம் இருந்தது. என்றாலும் அந்த உள்ளுராட்சித் தேர்தல்கள் இப்போதைக்கு இல்லை என்ற காரணத்தால் அவசரமாக இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவைக்கும் முயற்சிகள் தற்போது அரங்கேறி வருகின்றது. இதன் மூலம் அரசு கவிழப்போகின்ற என்ற ஒரு குழப்ப நிலையை நாட்டில் ஏற்படுத்தும் திட்டமும் இதில் அடங்குகின்றது.
பல சிறுபான்மைக் கட்சிகளுடன் தற்போது புதிய அரசு பற்றியும் அதற்கான ஒத்துழைப்புப் பெறுவது பற்றியும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கான சந்திப்புக்களும் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. மலை மேட்டில் அரசியல் செய்கின்ற ஒரு தலைவர் இரு கைகளையும் தூக்கிக் கொண்டு எப்போது அந்த நாள் வரும் என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றார். பொலிஸ், சட்டம் மற்றும் நீதித்துறைகளை முன்னெடுக்கின்ற அதிகாரிகளை அச்சத்திற்குட்படுத்தி கடந்த காலக் குற்றச் செயல்களில் நடக்கின்ற விசாரணைகளையும் மந்தகெதியில் வைத்திருப்பதும் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.
அரசு கவிழப்போகின்றது மஹிந்த பிரதமராகப் போகின்றார் என்ற நிலையை அரச அதிகாரிகள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் ஏற்படுத்துவதற்கான பிரச்சார நடவடிக்கைகளும் தற்போது முன்வைக்கப்பட்டு வருக்கின்றது. கோத்தாவுக்கு சுதந்திரக் கட்சியில் முக்கிய பதவி என்ற கதையும் இதன் ஒர் அங்கம். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி நேரடியாகவே தனக்கும் மைத்திரிக்குமிடையே எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்று கூறியதுடன், சமரசப் பேச்சுவார்த்தைக்குதான் வருவதாக இருந்தால் முதலில் பிரதமர் பதவி தனக்குத் தந்தாக வேண்டும் என்று அவர் கேட்டிருக்கின்றார் என்று சிங்கள ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
எனவே பாராளுமன்றத்தில் அவர் தனக்குத் தேவையான பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளும் நிலையில் தற்போது இருக்கின்றார் என்பது இதிலிருந்து புலனாகின்றது.
ஹைட்பார்க் கூட்டத்தைத் தொடர்ந்து தொடர்ச்சியான கூட்டங்களை நாடு பூராவும் நடத்த மஹிந்த தரப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றது. வருகின்ற மே தினக் கூட்டத்தை தனித்து பாரியளவில் நடத்தி தொழிலாளர்களும் தன்னுடனே இருப்பதாக உறுதி செய்ய மஹிந்த அணி ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றது. இது மைத்திரிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும். கடந்த மே தினத்தில் இப்படி ஒரு நிலை இருக்க வில்லை. இதனை மைத்திரி எப்படிச் சமாளிக்கப் போகின்றார் என்று தெரியவில்லை. எனவே ஜனநாயக வழியில் இப்படி ஆட்சிக் கவிழ்ப்புக்கான நகர்வுகளை மஹிந்த அணி முன்னெடுத்துச் செல்கின்ற அதே நேரத்தில் பல பௌத்த தேரர்கள் வன்முறை கலந்த நடவடிக்கைகளுடன் சில பிரச்சாரங்களை மேற் கொண்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
சோபித்த தேரர் மரணமாகி ஐந்து மாதங்களுக்குப் பின்னர் இப்போது அவர்கள் இது பற்றி பிரச்சினைகளை ஏற்படுத்தி அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த முனைவதுடன், பெரும் மஹிந்த விரோதியாக கடந்த காலங்களில் செயல்பட்ட சோபித்த தேரர் உடலை மீண்டும் தோண்டி எடுத்து மரணித்துப் போன தேரரை நோவினை செய்து தேரரை பலிவாங்க முனைகின்றார்களோ என்னவோ தெரிய வில்லை.
தற்போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமாக இதனை ராஜபக்ஷ அணியினர் காட்டிக் கொண்டாலும் எமது கருத்துப்படி அதன் உண்மையான இலக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களே! அதிகாரத்தைக் கைப்பற்ற முனையும் மஹிந்த அணியினர் அந்த முயற்சியில் வெற்றி பெற்றால் சோல்பரி அரசியல் யாப்பில் இருந்த தேசாதிபதி நிலைக்கு மைத்திரியை கொண்டு வந்து நிறுத்தவார்கள். எமக்குப் பிந்திக் கிடைக்கின்ற தகவல்களின் படி மைத்திரி அணிக்குள்ளும் தற்போது பிளவுகள் தோன்றி இருக்கின்றது என்று தெரிய வருகின்றது. இது ஹைட்பார்க் கூட்டத்திற்குப் போனவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பிலானது. அது மைத்திரி - சந்திரிகா என்றிருக்கின்றது.
இதற்கிடையில் தற்போதய பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் ஏப்ரல் மாதம் ஓய்வு பெறுகின்றார். அந்த இடத்திற்கு அனேகமான எஸ்.எம். விக்ரமசிங்ஹ நியமிக்கப்பட இருக்கின்றார் என்று தெரிகின்றது. இவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிரதான பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்தவர் அத்துடன் ராஜபக்ஷ அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். விக்ரமசிங்ஹ ராஜபக்ஷவுக்கு உறவினர் என்றும் சொல்லப்படுகின்றது. அவர் இந்தப் பதவிக்கு வந்தால் தற்போது விசாரணையிலுள்ள தாஜூதீன் கொலை, எகனலிகொட கொலை போன்ற விவகாரங்கள் மூடி மறைக்கப்படும் என்ற ஒரு அச்சமும் இருக்கின்றது. அத்துடன் இந்த விக்ரமசிங்ஹ என்பவர் தற்போதய ஜனாதிபதி மைத்திரிக்கும் மிகவும் நெருக்கமானவர் இவரும் ஒரு பொலன்னறுவைக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எந்த விதமான அடிப்படைகளும் இல்லாது சில பிறமொழி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுக் கொண்டு மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றது. இதற்கிடையில் நவீன சமூக ஊடகங்களும் ஒன்றுக் கொன்று முரணான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே வாசகர்கள் ஊடகங்கள் சொல்கின்ற செய்திகளை மிகவும் அவதானமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டிய நிலை தற்போது உலகிலும் நமது நாட்டிலும் இருந்து வருகின்றது என்ற எச்சரிக்கையையும் நாம் வாசகர்களுக்குச் சொல்லி வைக்க வேண்டி இருக்கின்றது.
இவ்வாறான பின்புலங்களுக்கு மத்தியில் ஒரு அவசர ஆட்சி மாற்றத்தை நாடி நிற்கின்றார்கள் ராஜபக்ஷக்கள். இப்படி பல் முனை வழியாக இந்த நல்லாட்சியை ஜனநாயக வழியில் மிக விரைவாக வீழ்த்தும் திட்டமொன்றை மஹிந்த தரப்பு முன்னெடுத்து வருகின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. அதற்கு நல்ல வாய்ப்புக்களும் இருக்கின்றன.
Post a Comment