"மகிந்தவின் வயிற்றை, கிழிக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்" ரஞ்சன்
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட புரட்சியிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியிலும் 90 வீதமான பங்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுடையது. எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்மால் தெரிவுசெய்யப்பட்டவர். அவர் எமது கட்சிக்கு உரித்துடையவர் என்றவகையில் அவரை விட்டுக்கொடுக்கப்போவதில்லை. எவருக்கும் அவரை சொந்தம் கொண்டாடும் அதிகாரமும் இல்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்தின் இருப்பை தக்க வைக்குமாறு வலியுறுத்தி ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது மஹிந்தவுக்கு ஆதரவளிக்கும் அவதாரங்கள் கோவிலுக்குச் சென்று தேங்காய் உடைத்து நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்க பிரார்த்தனை நடத்துகின்றனர். இவர்களுக்குப் பின்னால் இது போன்ற மற்றுமொரு வரலாறும் உள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டிலும் இது போன்ற சிலர் எதிர்த்தமையினால் அன்று பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க ஜப்பான் வழங்கவிருந்த 4.5 கோடி ரூபாவை எமது நாடு இழந்தது. அன்று போல் இன்றும் சில எதிரிகளால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் நாடு வளமான, ஊழலற்ற அபிவிருத்தியை நோக்கி நகர்வதை சகித்துக்கொள்ள முடியாமல் உள்ளது.
மூன்று பிரதான அமைச்சுக்களை கலைத்து ஜப்பானின் உதவிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மக்களை படுகுழியில் தள்ளி தமது வயிற்றை நிரப்பிக்கொள்வதையே கடந்த ஆட்சியாளர்கள் செய்தனர்.
கடந்த காலத்தில் தேங்காய் உடைத்த போதும் தேங்காய்த் துண்டுகள் சிதறி பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவின் சட்டைப்பையில் விழுந்தன. இவ்வாறு தமது சட்டைப்பையை பாதுகாத்துக்கொள்ளத் தெரியாதவர்கள் எப்படி நாட்டை காப்பாற்றுவர்?
இவர்கள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மக்கள் பணத்தை சூறையாடியமையை அறிந்துதான் நாம் எதிர்காலத்தில் இவர்கள் வேண்டாம் என தீர்மானித்து மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினர். அதிலும் நல்லாட்சியின் நிமித்தம் வாக்களித்த 62 இலட்சம் பேரில் 90 வீதமானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள்.
அதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமக்கு உரித்துடையவர். அவரின் வெற்றிக்கு வித்திட்டவர்கள் நாங்கள். எவர் கேட்டாலும் அவரை உரிமை கொண்டாட விடப்போதில்லை என்று பகிரங்கமாக அறிவிக்கின்றோம்.
அதன் பிரகாரம் ஆட்சியதிகாரத்தையும் மக்கள் எமக்கு வழங்கியுள்ளனர். மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் முகமாக கடந்த அரசாங்கத்தில் ஊழல் புரிந்தவர்களை சட்டத்தின் பிடியில் சிக்கவைப்பதே எமது நோக்கமாகவுள்ளது.
அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் கொள்ளையிட்டிருந்தால் தனது வயிற்றைக் கிழித்து பணத்தை எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். அதற்கு தனது பாராளுமன்ற உரையில் பதிலளித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தான் மஹிந்தவின் வயிற்றை வெட்டிக்கொள்ள கத்தியொன்றைத் தருவதாக தெரிவித்துள்ளார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உரையாற்றிய போது பாராளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி இல்லை. அதற்கு மாறாக அவர் பாராளுமன்றத்திலிருந்து பீல்ட் மார்ஷலிடம் கத்தியை பெற்றுக்கொண்டு தமது வயிற்றைக் கிழிந்திருந்தால் எத்தனை முறை அவரின் வயிற்றை கிழிக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என சிந்திக்கும் போது வேடிக்கையாகவுள்ளது.
எவ்வாறாயினும் எமக்குக் கிடைத்த மக்கள் வரத்திற்கு நிகரான பிரதிபலனை நாட்டு மக்களுக்கு முழுமையாக வழங்குவோம் என்றார்.
Post a Comment