Header Ads



"சீனாவுடன் தேநிலவு" அன்று மகிந்த, இன்று ரணில்

அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் விமான நிலையம் என்பனவற்றை இயக்கும் பொறுப்பை, சீனாவிடம் ஒப்படைக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் கொழும்பில் வெளிநாட்டு வர்த்தகப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டையில், 1000 ஏக்கர் பரப்பளவில் முதலீட்டு வலயம் ஒன்றையும் சீனா அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாவது கட்டப் பணிகளுக்காக சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கும் சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இரண்டாவது கட்ட துறைமுக அபிவிருத்திப் பணிகளுக்கு 810 மில்லியன் டொலர் செலவு ஏற்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

2
 சிறிலங்கா அரசாங்கத்தினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொழும்பு துறைமுக நகர கட்டுமானத் திட்டத்தை தொடர்வதற்கு சிறிலங்காவின் அமைச்சரவை நேற்றுமுன்தினம் அனுமதி அளித்துள்ளது.

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வலுவான உறவுகள் மீளத் திரும்புவதற்கான சமிக்ஞையாக, சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த தீர்மானம் அமைந்துள்ளது.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 1.4 பில்லியன் டொலர் செலவிலான துறைமுக நகரத் திட்டத்தை மீள  ஆரம்பிக்கவும், அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்துக்கு காணிகளை சுவீகரிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், துறைமுக நகரத் திட்டம் கடந்த ஆண்டு மார்ச் முதல் வாரம் இடைநிறுத்தப்பட்டது.

எனினும், இந்த திட்டத்தின் மூல உடன்பாட்டில் திருத்தங்கள் செய்யப்பட்டு, இந்த மாதம் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகும் என்ற எதிர்பார்க்கப்படுவதாக, சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

மூல உடன்பாட்டில் உள்ளபடி, மீட்கப்படும் நிலத்தின் உரிமை சீனாவுக்கு வழங்கப்படாது. அதேவேளை சிறிலங்காவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீடு என்ற வகையில், நிலம் 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் வழங்கப்படும்.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் அடுத்த வாரம் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

“இந்த திட்டம் தொடர்பான எல்லா பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டன. அவர்கள் அதனை தொடர்ந்து முன்னெடுக்கலாம். இதுபற்றி அடுத்த வாரம் சீன நிறுவனத்துக்கு அதிகாரபூர்வமாக அறிவிப்போம்” என்று அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரமவும், சாகல இரத்நாயக்கவும், சீனா சென்று திரும்பியுள்ள நிலையிலும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் ஏப்ரல் 6ஆம் நாள் சீனா செல்லத் திட்டமிட்டுள்ள நிலையிலுமே சிறிலங்கா அமைச்சரவை துறைமுக நகரத் திட்டத்துக்கு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.

No comments

Powered by Blogger.