Header Ads



"பிரபாகரன் உயிருடன் இருந்தாரா, போர்முறைக்கு முரணாக கொல்லப்பட்டாரா என்பது ஆராயப்படும்" - ருவான்


யுத்தத்தின் இறுதி தருணங்களில் நடந்த உண்மைகளை கண்டறியும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும். இறுதிக்கட்டத்தில் பிரபாகரன் உயிருடன் இருந்தாரா?, போர் முறைமைக்கு முரணான வகையில் அவர் கொல்லப்பட்டாரா? என்பது கண்டறியப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சிக்கல்கள் நிலவிவரும் நிலையில் முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென வினவியபோதே பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்.

யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஏற்கனவே சர்வதேச தரப்பினர் அவதானித்து வரும் நிலையில் இப்போது அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ள கருத்துகள் மேலும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளன.

எவ்வாறு இருப்பினும் அரசாங்கம் இந்த விவகாரத்தில் ஆராய்ந்து சரியான வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பிலும் வெள்ளைக்கொடி விவகாரத்திலும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் மூலமாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

அவ்வாறு ஒரு தேவை இப்போது அரசாங்கத்திற்கு இல்லை. இப்போதிருக்கும் நிலையில் நாம் உள்ளக விசாரணைகள் மூலமாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

அதேபோல் உள்ளக பொறிமுறைகள் சரியாக நடைபெறும். எவ்வாறு இருப்பினும் யுத்தத்தின் இறுதித் தருணங்கள் தொடர்பில் அரசாங்கம் தீவிரமான விசாரணைகளை மேற்கொள்ளும்.

இதன் போதும் இராணுவம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றாலும் அதில் எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவத்தை இலக்குவைக்கும் நோக்கம் எமக்கு இல்லை.

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பொதுமக்கள் காணாமல் போனதாகக் கூறப்படுகின்றது. அதேபோல் பொதுமக்கள் இராணுவம் வசம் சரணடைந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உண்மைகளை கண்டறியும் நடவடிக்கைகள் பலமாக முன்னெடுக்கப்படும்.

இப்போது சரத் பொன்சேகா பல இரகசிய தகல்களை முன்வைத்து வரும் நிலையில் அவரிடம் இருந்து உண்மைகளை அறியும் விசாரணையை ஆரம்பித்தல் மிகவும் சாதகமாக இருக்கும்.

இறுதி யுத்தம் தொடர்பில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அவர் நன்கு அறிந்தவர்.

மேலும் பிரபாகரன் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துகளும் ஆராயப்பட வேண்டும்.

அவர் யுத்தம் முடிவடைந்த பின்னரும் உயிருடன் இருந்தாரா என்பதை ஆராய வேண்டும். போர் விதிமுறைகளுக்கு முரணாக அவர் கொல்லப்படிருந்தால் அவற்றையும் கருத்தில் கொண்டு அடுத்தகட்ட நடவைக்கைகளை கையாள வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.