Header Ads



உப்பு அறை சிகிச்சை


பனிக்காலம் என்பது பலருக்கும் பிணிக்காலமாகவே இருக்கிறது. அலர்ஜி, ஆஸ்துமா, இருமல், தும்மல், மூச்சுவிட சிரமம் என பனிக்காலத்தைத் தாண்டுவதற்குள் அவர்கள் படும்பாடுகளை சொல்லி மாளாது. பனிக்காலப் பிரச்னைகளுக்குத் தீர்வாக உப்பு அறை சிகிச்சை (சால்ட்ரூம் தெரபி) என்கிற சிகிச்சையைப் பரிந்துரைக்கிறார்கள் நிபுணர்கள்.

உப்பு அறை சிகிச்சைப்படி, நாற்புற சுவர்களிலும் அடர்ந்த உப்பு படிவங்களை உடைய அறையில் நோயாளியை ஓய்வெடுக்க வைக்கிறார்கள். தொடர்ந்து மெல்லிய காற்றை அந்த அறையினுள் செலுத்தும்போது சுவரில் உள்ள உப்புத் துகள்கள் காற்றோடு கலக்கிறது. உப்பு கலந்த காற்றை நோயாளி சுவாசிக்கத் தொடங்கும்போது மூக்கின் வழியாக உப்புத்துகள்கள் நுரையீரல் குழாயை அடைந்து நுரையீரலில் உள்ள பாக்டீரியா மற்றும் தூசிகளை வெளியேற்றுகின்றன.

அதோடு, மூச்சுக்குழாய் அழற்சியை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுவடையச் செய்து ஒவ்வாமையால் ஏற்படும் மூச்சுத் திணறலையும் குறைக்கிறதாம். முகப்பரு, சோரியாசிஸ் போன்ற சரும பிரச்னைகளுக்கும் இந்த சிகிச்சை முறை பயனளிக்கிறதாம். உறக்கத்தில் மூக்கடைப்பினால் குறட்டை விடுபவர்களுக்கு, உப்பு அறை சிகிச்சை அளிக்கப்படும்போது 
அதிலிருந்து விடுபட்டு நோயாளிகளுக்கு நல்ல தூக்கம் கொடுக்கிறது.  

“மருந்து மாத்திரைகள் இல்லாத இந்த உப்பு அறை சிகிச்சை முறை சருமம் மற்றும் நுரையீரல் நோயாளிகளுக்கு மட்டுமல்ல... நாள்தோறும் மாசடைந்த காற்றை சுவாசிக்கும் நகர்ப்புற வாசிகளுக்கும் ஒரு நல்ல தீர்வு. குளிர்காலங்களில் மூடுபனி காரணமாக சுவாச பிரச்னைகள் மோசமாகும் போது நோயாளிகளுக்கு உப்பு அறை சிகிச்சை அளிப்பதன் மூலம் இயற்கையான முறையில் மூச்சுத்திணறல் பாதிப்பிலிருந்து விடுபட முடிகிறது. 

பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஸ்டீராய்டு மருந்துகள் மற்றும் விலை உயர்ந்த மருந்துகளுக்கு மாற்றாக இந்த சிகிச்சை முறை இருக்கும்” என்கிறார்கள் நுரையீரல் நோய் நிபுணர்கள். 

No comments

Powered by Blogger.