அன்று சிங்களத்தில் விளையாடிய மகிந்த, இன்று ஆங்கிலத்தில் விளையாடும் ரணில் - அனுரகுமார
இத்தனை காலமாக அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து வேலைத்திட்டங்களினாலும் எமது மக்கள் 10 இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபா கடனாளியாகி யுள்ளனர். இந்த கடன்தொகைக்கு வருடத்துக்கு வட்டி யுடன் செலுத்த வேண்டிய வருட தவணை கட்டணம் 1209 பில்லியன் ரூபா. அப்படியாயின் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 900 கோடி ரூபாவை ஒரு வருடத்திற்கு செலுத்தவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.
தற்போது நாட்டில் வாழும் பொதுமக்கள் முதல் நாளை பிறக்கவிருக்கும் குழந்தை வரையில் ஒரு நபர் 5 இலட்சம் ரூபா என்ற கடன்தொகை செலு த்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். எந்த விதத்திலும் மக்கள் தொடர்பில்லாத இந்த நிலைமைக்கு முழுமையாக மக்கள் மட்டுமே கஷ்டத்தை அனுபவிக்க வேண்டுமாயின் அதற்கு எதிராக மக்கள் போராடவேண்டும் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியது. மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
புதிய வரவு செலவு திட்டத்துக்கான யோசனைகளை பிரதமர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். ஆரம்பத்தில் இந்த அரசாங்கத்தின் சிறிய வரவுசெலவு திட்டம் ஒன்றை முன்வைத்தனர். அதன் பின்னர் இந்த கூட்டு அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் ஒன்றை முன்வைத்தனர். ஆனால் பாராளுமன்றத்தில் முன்வைத்த வரவுசெலவு திட்டம் நிறைவேற்றப்படும் வரையில் அதில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. முன் வைத்த வரவு செலவு திட்டத்திற்கும் மாறாக மாற்று வரவுசெலவுத் திட்டத்தையே இறுதியில் நிறைவேற்றினர். இப்போது இந்த வரவுசெலவு திட்டத்திற்கு முற்றிலும் முரணான வகையில் புதிய பொருளாதார யோசனைகளை முன்வைத்துள்ளனர். வரவு செலவு திட்டம் கொண்டுவரப்பட்டு 3 மாதங்களே ஆகியுள்ள நிலையில் புதிய பொருளாதார திட்டத்தை அரசாங்கம் முன்வைக்கின்றது என்றால் இந்த அரசாங்கம் பொருளாதார கொள்கையில் உறுதியான நிலைப்பாடு ஒன்றில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகின் றது.
மஹிந்த, ரணில் இருவர் மத்தியிலும் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. மஹிந்த சிங்களத்தில் இந்த விளையாட்டை விளையாடிய போது ரணில் இன்று ஆங்கிலத்தில் இந்த விளையாட்டை விளையாடுகின்றார். மஹிந்த சிங்கள உடையில் இந்த பொருளாதார கொள்கையைக் கொண்டுசென்ற போது ரணில் மேற்கத்தேய உடையில் இந்த கொள்கையைக் கொண்டு செல்கின்றார். ஆகவே தோற்றத்தில் மட்டுமே இந்த இருவருக்கு மாற்றம் உள்ளது என்றார்.
Post a Comment