பாராளுமன்றத்தில் மகிந்தவுக்கு மீண்டும், பதிலடிகொடுத்த பொன்சேக்கா
நாட்டில் ஜனாதிபதியொருவரும், பிரதமர் ஒருவரும் பதவியில் இருக்கும்போது சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கையளிக்கும் சம்பிரதாயம் ஒன்று உலகில் இதுவரை இல்லையென அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி நாட்டைத் தன்னிடம் கையளிக்குமாறு கூறியிருந்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் பதவியில் இருக்கும்போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நாட்டைப் பொறுப்புக் கொடுக்கும் நிகழ்வு உலகில் எந்தவொரு நாட்டிலும் இடம்பெறவில்லை.
நாட்டைத் தன்னிடம் பொறுப்புத் தருமாறு கோரும் முன்னாள் ஜனாதிபதி கடந்த 10 வருடத்தில் நாட்டில் நடத்தியிருந்த ஆட்சி சகலருக்கும் தெரியும். அவருடைய ஆட்சியாலேயே நாடு இந்த மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளது என்றும் கூறினார்.
நாட்டின் பொருளாதாரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரை தொடர்பில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொன்ஹேகா இதனைத் தெரிவித்தார்.
துறைமுக நகரத் திட்டம் சீனாவிடமிருந்து இலவசமாகக் கிடைத்த திட்டம் எனக் கூறுகின்றனர். இது 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான திட்டமாகும். 50 ஏக்கர் இலவசமாக சீனாவுக்கு வழங்குதற்கு கடந்த ஆட்சியாளர்கள் இணங்கியுள்ளனர். இது தொடர்பான தகவல்கள் வெளியாகிவருகின்றன.
நாட்டின் நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே கொழும்பில் கூட்டம் நடத்தியதாகவும், இக்கூட்டம் வெற்றியளித்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தபோதும் அவர்கள் நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே செயற்பட்டனர். தற்பொழுதும் கூட்டங்களை நடத்தி நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுத்து எம்மை மீண்டும் சிறைகளுக்கு அனுப்பி, குரோதத்தைத் தீர்க்கும் வகையில் செயற்படலாம் என்ற எண்ணத்திலேயே செயற்பட்டு வருகின்றனர் என்றார்.
இதேவேளை, யுத்த காலத்தில் யாழ்ப்பாணத்தைப் பொறுப்பேற்க எந்த இராணுவத் தளபதிகளும் முன்வராத நிலையில் நான் இரண்டு மணித்தியாலங்களில் வடக்கிற்குச் சென்றேன். அப்போது ஆணையிறவு வீழ்ச்சியுற்றுக்கொண்டிருந்தது. குறுகிய திட்டமிடலை அமைத்து நான் அமைத்த பதுக்கு குழிகளே இன்னமும் அங்கு இருக்கின்றன. இதனால்தான் யுத்தத்தை மாற்ற முடியதாக இருந்தது. இவ்வாறு யுத்தத்துக்கு தலைமைத்துவம் வழங்கி செயற்பட்ட இராணுவத் தளபதி யாரும் இருக்க மாட்டார்கள்.
யாழ்ப்பாணத்தில் நான் தளபதியாக இருக்கும்போது உயர்பாதுகாப்பு வலயங்கள் மீள வழங்கப்படவேண்டும் என சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்துரையாடப்பட்டபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அன்று பாதுகாப்பு வலயங்கள் மீள வழங்கப்பட்டிருந்தால் மாவிலாறு தாக்குதல் ஆரம்பித்து இரு வாரங்களில் யாழ்ப்பாணத்தை இழந்திருப்போம். யுத்தம் செய்வதற்கு எதுவும் எஞ்சியிருக்காது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Post a Comment