Header Ads



முஸ்லிம்கள் ஒன்றிணைந்து தங்களது, உரிமைகளுக்காக போராட வேண்டும் - அக்பருதீன் ஓவைஸி

திருமணமாகாதவர்களைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் குழந்தைகள் பெற்றுக் கொள்வது பற்றி பாடம் எடுக்கலாமா என்று மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அக்பருதீன் ஓவைஸி கேள்வி எழுப்பியுள்ளார். 

ஹைதராபாத்தில் மஜ்லிஸ் கட்சியின் 57-வது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஓவைஸி பேசியதாவது: 

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் திருமணமாகாதவர்களைக் கொண்டது. அதிக குழந்தைகளைப் பெற்று கொள்ள வேண்டும் என்று இவர்கள் கூறுவது பொருந்தாது. ஏனெனில் இவர்களே திருமணம் செய்து கொள்ளாதவர்கள். குழந்தை பெற்று கொள்வது பற்றி அறிவுரை வழங்க இவர்களுக்கு உரிமை கிடையாது. 

ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். இது திருமணமாகாத தனிநபர்களை கொண்ட அமைப்பு. இவர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள், பொறுப்பை எடுத்துக் கொள்ள தயாராக இல்லாதவர்கள், வாழ்க்கையில் பிரச்சினைகளைச் சந்திக்க திராணியற்றவர்கள். மனைவி, குழந்தைகள் என்று அவர்கள் பிரச்சினைகளைச் சந்திக்க தயாராக இல்லாதவர்கள், ஆனால் 4 குழந்தைகளை ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஊருக்கு உபதேசம் செய்வர். 

சரி அப்படியே 4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். அல்லது 12, 14 என்று பெற்றுக் கொள்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு கல்வி, வேலை, வீடு மற்றும் பிற வசதிகளை உங்களால் செய்து கொடுக்க முடியுமா? இவர்களால் வேலையோ, வீடோ, கல்வியோ அளிக்க முடியாது, குறைந்தது கழிப்பறை கூட கட்டித் தர முடியாதவர்கள் இவர்கள். ஆனால் 4 குழந்தைகளை பெற்றுக்கொள்ள அறிவுரை வழங்குவர். 

அனைத்து முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்து தங்களது உரிமைகளுக்காக போராட வேண்டும். ஒருங்கிணையவில்லையெனில் முஸ்லிம்களின் அடையாளத்துக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு ஓவைஸி பேசினார்.

No comments

Powered by Blogger.