சிறிலங்காவில் நோட்டம் பார்க்க, உயர்மட்ட குழுவை அனுப்பியது சீனா
சிறிலங்காவுடன் மேலும் பரந்தளவிலானதும், ஆழமானதுமான இருதரப்பு உறவுகளை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்று ஆராய்வதற்காக சீன அரசாங்கம் சிறிலங்காவுக்கு குழுவொன்றை அனுப்பியுள்ளது.
கடந்த ஏழு பத்தாண்டுகளாக சிறிலங்காவுடன் கட்டியெழுப்பிய தொடர்புகளை மீளமைப்பது மற்றும் சிறிலங்காவுடன் மேலும் பரந்தளவிலானதும், ஆழமானதுமான இருதரப்பு உறவுகளை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பது குறித்து ஆராய்வதற்காக சீனாவின் நல்லெண்ணக் குழுவொன்று சிறிலங்காவுக்கு வந்திருந்தது.
சீன வெளிவிவகார அமைச்சின் ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவரும், சிறிலங்காவுக்கான சீனத் தூதுவராகப் பணியாற்றியவருமான சன் குவோசியாங் தலைமையிலான இந்தக் குழுவினர், சீன சிறிலங்கா ஒத்துழைப்பு கற்கைகள் நிலையத்துடன் இதுதொடர்பாக கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.
இந்தக் குழுவில் சிறிலங்காவுக்கான மற்றொரு முன்னாள் சீனத் தூதுவர் ஜியாங் ஓஇன்செங், சீன பௌத்த சங்கத்தின் உதவித் தலைவர் வண.மிங் செங் தேரர், ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
மூன்று நாள் பயணமாக வந்திருந்த இந்தக் குழுவினர் பல்வேறு அரசியல் மற்றும் மதத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.
1950களில் இறப்பர் – அரிசி உடன்பாட்டின் மூலம், சீனாவுக்கு சிறிலங்கா ஆதரவாக இருந்து வருவதாக குறிப்பிட்ட தூதுவர் சன் குவோசியாங் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் புதிய உச்சத்துக்கு முன்னெறிச் செல்லும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
Post a Comment