வீதி சமிக்கைகளை களவாடும் திருடர்கள் - வெலிமடையில் சம்பவம்
விபத்துக்களைத் தடுக்கும் வகையிலேயே வீதி ஓரங்களில் சமிக்ஞைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
எனினும், வெலிமடை – ஹக்கல பிரதான வீதியில் பொருத்தப்பட்டிருந்த சமிக்ஞைகளை சிலர் கழற்றிச் சென்றுள்ளனர்.
வெலிமடை – ஹக்கல பிரதான வீதியின் நுவரெலியா – ஊவா பரணகம பிரதான வீதி மிகவும் வளைவுகள் கொண்ட ஒரு வீதியாகும்.
இங்கு மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகளும் இனங்காணப்பட்டுள்ளன.
இந்த வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் போது விபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக வீதி சமிக்ஞைகள் அமைக்கப்பட்டிருந்தன.
எனினும், தற்போது இந்த வீதி சமிக்ஞைகளின் தகடுகள் களவாடப்பட்டு கம்பங்கள் மாத்திரமே காணப்படுகின்றன.
நுவரெலியா – ஊவா பரணகம பிரதான வீதியில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 30 வீதி சமிக்ஞைகள் இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
மலைப்பாங்கான வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் இவ்வாறான வீதி சமிக்ஞைகளின் உதவியுடனேயே விபத்துக்கள் ஏற்படாத வகையில் தம்மையும் வாகனங்களில் பயணிப்பவர்களையும் பாதுகாக்கின்றனர்.
வீதி சமிக்கைகள் களவாடப்பட்டமை தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் எதுவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை எனவும், இருப்பினும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment