Header Ads



ஆசிரியைகளுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்க, அப்துர் ரஹ்மான் முன்வருகை

காத்தான்குடி பிரதேச முன்பள்ளி ஆசிரியைகளின் பிரச்சனைகளுக்கான இடைக்கால தீர்வுகளை வழங்கவுள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  (NFGG) அறிவித்துள்ளது.

NFGGயின் ஏற்பாட்டில் காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள முன்பள்ளி ஆசிரியைகளுடனான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் ஒன்று நேற்று (14.03.2016- திங்கட்கிழமை) NFGGயின் காத்தான்குடி பிராந்தியக் காரியாலயத்தில் இடம்பெற்றபோதே இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.  இக்கலந்துரையாடலில் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான், பிராந்திய செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் ASM ஹில்மி, மற்றும் பிராந்திய சபை உறுப்பினர்கள், NFGGயின் மகளிர் அணி உறுப்பினர்கள், பிரதேச முன்பள்ளி ஆசிரியைகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 15.02.16 அன்று முன்பள்ளி ஆசிரியைகளுடன் NFGGயினால் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் இரண்டாம் கட்டமாகவே மேற்படி கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.முன்பள்ளி ஆசிரியைகளுடனான முதலாம் கட்ட சந்திப்பின் போது ஆசிரியைகள் மற்றும் முன்பள்ளி நிர்வாகிகளினால் முன்பள்ளிப் பாடசாலைகள், ஆசிரியைகள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சனைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. இதன்போது முன்வைக்கப்பட்ட பிரச்சனைகளில் பிரதானமான சில பிரச்சனைகளுக்கு ஒரு மாத கால இடைவெளியில் இடைக்கால தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவதாக NFGG சார்பில் ஆசிரியைகளுக்கு உறுதி மொழி  வழங்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் ஆசிரியைகளுக்கான இடைக்கால தீர்வுகள் தொடர்பில் தெளிவு படுத்தும் நோக்கிலேயே இந்த இரண்டாம்கட்ட கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் NFGGயினால் மேற்கொள்ளப்படவுள்ள இடைக்காலத்தீர்வுகள் பற்றிய சிறப்புரை ஒன்றினை ஆற்றினார். குறிப்பாக முன்பள்ளி ஆசிரியைகள் பிரதானமாக எதிர்நோக்குகின்ற  அவர்களது மாதாந்த சம்பளப்பிரச்சனைகளுக்கான இடைக்கால தீர்வாக ஆசிரியைகளுக்கான மேலதிக ஊக்குவிப்புத் தொகையினை வழங்கி வைக்க NFGGதீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  எதிர்வரும் இரண்டு வாரகாலத்திற்குள் இச்செயற்திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும் எனவும் இதற்கு மேலதிகமாக ஆசிரியைகளின் தொழில்சார் டிப்ளோமாப் பாடநெறிக்கான சகல வசதிகளையும் NFGG செய்து கொடுப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அத்துடன் கிழக்கு மாகாண முன்பள்ளிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 இது தொடர்பாக சமூகமளித்திருந்த முன்பள்ளி ஆசிரியைகள் கருத்துக்களை தெரிவிக்கையில்  இச்செயற்திட்டமானது தங்களை மிகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் ஊக்கமளிப்பதாகவும் அமைந்துள்ளது என தெரிவித்தனர். இதுவரை காலப்பகுதியில் பதவிகளிலிருந்த பலராலும் கண்டு கொள்ளப்படாத பிரச்சனையாக இருந்துவந்த  முன்பள்ளி ஆசிரியைகளின் பிரச்னையினை தங்களது சொந்தப்பணத்தில் தீர்த்து வைப்பதற்கு முன்வந்த NFGGயின் நேர்மையான சமூகப்பணியினை தாங்கள் உண்மையில் பாராட்டுவதாகவும் தங்களுக்கு அளித்த உறுதிமொழியினை மதித்து ஒரு மாத காலத்திற்குள் எமக்கான இடைக்கால தீர்வுத்திட்டத்தினை முன்வைத்தமைக்காக தாங்கள் NFGGக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டனர்.


No comments

Powered by Blogger.