"வெளியேறும் ஒருவர், நிலைத்திருப்பது சாத்தியமில்லை"
- சுகீர்வர சேனாதீர, தமிழில் ஐயூப்-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் இரண்டு முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டார். உர மானியம் தொடர்பான பிரச்சினையில் தலையிட்ட அவர், 50 கிலோ கிராம் உர மூடை ஒன்றிற்கு ரூபா 2,500 உத்தரவாத விலையை நிர்ணயிக்குமாறு உத்தரவிட்டார். அதே நாள் அவருக்கு வெளிப்படையாகவே சவால் விடுத்து வந்த சில ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்குப் பதிலாக பல புதிய அமைப்பாளர்களை நியமித்தார்.
ஒரு அரசியல்கட்சி நியாயமான உட்கட்சி ஜனநாயகத்தைப் பேணுகின்ற அதேநேரம், கட்சி உறுப்பினர்கள் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளைப் பின்பற்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டியதும் அவசியமாகும். கட்சி உறுப்பினர்கள் கட்சியின் ஒழுக்க நெறிகளையும் மூலோபாயங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
உட்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் கட்சி உறுப்பினர்கள் தங்களது வித்தியாசமான கருத்துகளை முன்வைப்பதற்கு கட்சிக் கூட்டங்கள், நிறைவேற்று சபைக் கூட்டங்கள் மற்றும் வருடாந்த பொதுக்கூட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் அதேநேரம், கட்சிக்கும் அதன் கொள்கைக்கும் எதிரான கருத்துகள் மற்றும் நிலைப்பாடுகளை பகிரங்கமாக வெளியிடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.
நம் நாட்டின் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மத்தியிலான பாரிய கருத்து முரண்பாடுகள் இலங்கையில் அரசியல் கட்சிகளின் வரலாற்றைப் போன்றே பைழமையானதாகும். முதலாவது அரசியல் கட்சியான ஏ ஈ குணசிங்கவின் தொழிற்கட்சி, கட்சியின் ஸ்தாபகத் தலைவர் கட்சியின் வேறு எந்தவொரு தலைவரினாலும் சவாலுக்கு உட்படுத்தப்படாத காரணத்தினால் பிளவடையவில்லை.
இலங்கையில் முதலாவது கட்சிப் பிளவு இரண்டாவது அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியிலேயே இடம்பெற்றது. 1940 ஆம் ஆண்டு இடம்பெற்ற அக்கட்சிப் பிளவு தனிப்பட்ட முரண்பாடுகளினால் ஏற்பட்டதொன்றல்ல. மாறாக அது சோவியத் யூனியனின் ஸ்டாலின் யுகத்தின் போதிருந்த கருத்தியல் ரீதியான முரண்பாடுகளின் காரணமாகவே ஏற்பட்டது.
இரண்டாவது உலக மகா யுத்தத்தின் ஆரம்பப் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதிருந்த தடையின் காரணமாக சமசமாஜக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற கமியூனிஸவாதிகளால் ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியவில்லை. சோவியத் யூனியன் ஜேர்மனிக்கு எதிரான யுத்தத்தில் இணைந்து கொண்டதன் பின்னர் அத்தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்தே 1943 ஆம் ஆண்டு இலங்கை கம்யூனிஸக் கட்சி உருவானது.
1949 ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கான பிரஜாவுரிமை சட்டம் கொண்டுவரப்பட்ட போது ,இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது அக்கட்சியின் முக்கியஸ்தரான எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அதனை எதிர்த்து கட்சியிலிருந்து வெளியேறி சமஷ்டிக் கட்சியை ஆரம்பித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு மத்தியில் பல பாரிய கருத்து முரண்பாடுகள் இருந்து வந்த போதும், 1951 ஆம் ஆண்டு எஸ் .டபிள்யூ .ஆர் .டி. பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அமைக்கும் வரை அக்கட்சியினுள் பிளவுகள் தலைதூக்கவில்லை. அப்போது முதல் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மாறி மாறி இந்த நாட்டை ஆட்சி செய்து வந்துள்ளன.
இந்த இரண்டு தேசியக் கட்சிகளில் இருந்தும் பிரிந்து புதிய கட்சிகளை அமைப்பதற்கு முயற்சித்தவர்கள் அனைவருடைய நிலையும் அரசியல் பேரவலத்திலேயே முடிவடைந்தது. கட்சி மாறியவர்களது வரலாற்றை எடுத்துப் பார்த்தால் புதிய அரசியல் கட்சிகளை அமைத்தவர்கள் அழிந்து போனமையையும் கட்சி மாறி பின்னர் மூலக் கட்சிக்கே திரும்பி வந்தவர்கள் மட்டுமே நிலைபெற்றமையையும் கண்டு கொள்ள முடியும்.
ஐக்கிய தேசியக் கட்சி அல்லது சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களால் அமைக்கப்பட்ட பல கட்சிகள் அரசியல் குப்பைக் கூடையில் வீசப்பட்டதே வரலாறாகும். சி .பி. டி. சில்வா அவர்களின் கட்சி, ருக்மன் சேனாநாயக்கவின் டட்லி பெரமுன, சந்திரிகா குமாரதுங்கவின் பகுஜன கட்சி, லலித் அதுலத் முதலி மற்றும் காமினி திசாநாயக்கா ஆகியோரின் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகளும் இதில் உள்ளடங்கும்.
எவ்வாறான போதும் உட்கட்சி ஜனநாயகத்தை பயன்படுத்தி கட்சிக்குள் இருந்தே போராடிய தலைவர்கள் கட்சியில் தமது பதவிகளை வெற்றி பெற்றுள்ளமையை வரலாறு எடுத்துக் காட்டுகின்றது.
இதற்கு முதல் உதாரணம் டி. எஸ். சேனாநாயக்காவைத் தொடர்ந்து டட்லி சேனாநாயக்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கட்சிக்குள் சிக்கல் செய்தவர் சேர் ஜோன் கொத்தலாவலையாவார். சேர் ஜோன் கொத்தலாவல தாம் பதவி விலகுவதாக ஆரம்பத்தில் அச்சுறுத்திய போதும் பின்னர் அமைச்சுப் பொறுப்பை ஏற்று இரண்டு வருடங்களின் பின்னர் டட்லி சேனாநாயக்க பதவி விலகியதைத் தொடர்ந்து பிரதமரானார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குத் திரும்பி வந்த சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்ட காமினி திசாநாயக்கா 1994 ஆம் ஆண்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
1991 ஆம் ஆண்டு தனக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மான முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச “எந்தவொரு தனிப்பட்ட ஒருவரை விடவும் கட்சி முக்கியமானது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானையை இரண்டு ஈக்கள் சேர்ந்து ஒருபோதும் சவாலுக்கு உட்படுத்த முடியாது” என்றும் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாட்டின் இரு பெரும் தேசிய கட்சிகளில் ஒன்றாகத் தொடர்ந்திருக்க வேண்டுமானால் ஊழல், மோசடி, கொள்ளை, பாலியல் குற்றச்சாட்டுக்கள், ஏனைய சட்டரீதியற்ற செயற்பாடுகள் அல்லது சமூக விரோத செயற்பாடுகளின் காரணமாக கறைபடிந்த பெயர்களையுடைய உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டியது அவசியமாகும். எந்தவொரு கட்சியினதும் உறுப்பினர்கள் ஒரு தனிப்பட்டவரின் பிரபல்யத்தைப் பார்க்கிலும் கட்சிக்கட்டுப்பாடுகளை பேணுவது அவசியமாகும். ஒரு கட்சியின் தலைவருக்கு கட்சியின் கட்டுப்பாடுகளை மீறுகின்றவர்களை நீக்கி புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கு அதிகாரம் உள்ளது.
புதிய அமைப்பாளர்கள் தங்களது தேர்தல் தொகுதிகளில் சாதகமான சூழ்நிலைகளை கட்டியெழுப்புவதற்கு போதுமான கால அவகாசத்தை வழங்கும் வகையில் புதிய அமைப்பாளர்கள் நியமனம் கூடிய விரைவில் நிறைவு செய்யப்பட வேண்டும். அந்த வகையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கலகக்காரர்கள் தற்போதைய அவர்களது மூலோபாயத்தை மாற்றிக் கொள்ளாத போது பாராளுமன்ற ஆசனங்களை இழப்பதற்கான சாத்தியப்பாடுகள் உட்பட மேலும் பல ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியிருக்கும்.
அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா குறிப்பிட்டுள்ளதைப் போன்று அண்மையில் தண்டிக்கப்பட்டுள்ளவர்கள் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தங்களது விசுவாசத்தை வெளிப்படுத்த இன்னும் அவகாசம் உள்ளது. அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறும் பட்சத்தில் அதற்கான பரிகார நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர கட்சிக்கு வேறு வழிகள் கிடையாது.
என்றாலும் கட்சி ஒருபோதும் அவசர முடிவுகளை மேற்கொள்ளாது என்றும் முறையான நடைமுறைகளைப் பின்பற்றியே அதனைச் செய்யும் என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் யாப்பா, தற்போது கட்சிக் கட்டுப்பாடுகளுக்கு வெளியே செயற்படும் எவருக்கும் மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கம்பஹா மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தரான காலம் சென்ற விஜேபால மெண்டிஸ் அவர்களுக்கு நேர்ந்த கதியே ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் தேசிய, மாவட்ட அல்லது பிரதேச மட்டங்களில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் புதிய நிலைமைகளுக்கேற்ப அவருக்கு ஆதரவளிப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை வழங்கினார்.
ஜனாதிபதியை வெளிப்படையாக எதிர்த்து வந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலத்தை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு விசுவாசமாக இருந்த 22 தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
இதே போன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னர் நிலைமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவர் சில காலம் காத்திருப்பதாகவே தெரிகிறது. தங்களது நிலைப்பாட்டில் தொடர்ந்திருக்கும் அதிருப்தியாளர்கள் கிட்டிய எதிர்காலத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தாம் ஒருபோதும் வெளியேறப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருப்பது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் யாப்பா, கட்சியிலிருந்து வெளியேறும் ஒருவர் நிலைத்திருப்பது சாத்தியமில்லை என்பதை திரு ராஜபக்ஷ நன்கறிவார் என சுட்டிக் காட்டியுள்ளார்.
Post a Comment