Header Ads



முள்ளிக்குளம் கிராம மக்கள், றிசாத் பதியுதீனிடம் முறைப்பாடு

-சுஐப் எம் காசிம்

மன்னார் முள்ளிக்குள கிராம அகதிகள் வாழும் மலங்காடு எனும் இடத்திற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திடீர் விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தார். அமைச்சருக்கும் அந்தப் பிரதேச மக்களுக்குமிடையிலான சந்திப்பொன்று மலங்காடு கிராமத்திலுள்ள சிறிய கட்டிடத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் பாதிரிமார்களான ஜெயபாலன், தவராஜா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். அங்கு வாழும் முள்ளிக்குள அகதிகள் தாம் எதிர் நோக்கும் அவலங்களையும், கஷ்டங்களையும் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். 

“முள்ளிக்குளக்கிராமம் சுமார் இருநூறு வருடங்கள் பழைமை வாய்ந்த பூர்வீகம் கொண்டது. 1990ஆம் ஆண்டில் யுத்த நெருக்கடி தீவிரமடைந்ததால் நாம் பல்வேறு இடங்களில் வாழ்ந்து பின்னர் 2007ஆம் ஆண்டு மீண்டும் மலங்காடு பகுதிக்கு வந்தோம். பின்னர் மீண்டும் உருவான உக்கிர நடவடிக்கைகளினால் ஓடிச் சென்றோம். சமாதான சூழல் ஏற்பட்ட பிறகு நாம் இந்தப்பிரதேசத்திற்கு வந்து ஆறு வருடங்களாகின்றது. எனினும் யுத்தத்தின் வடுவும் அதனால் ஏற்பட்ட அவலங்களும் எம்மைத் துரத்திக் கொண்டே இருக்கின்றது.  

எனினும் எமது பூர்வீக நிலமான முள்ளிக்குள கிராமத்திற்கு சென்று நாம் வாழ முடியாத வகையில் அங்கு ஆக்கிரமிப்பு இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் காட்டி எமது சொந்தக் கிராமத்திற்கு திரும்புவதற்கு எமக்கு அனுமதியில்லை. எனினும் அங்குள்ள பரலோக மாதா தேவாலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளுக்கு மட்டுமே செல்வதற்கும் அங்கு அமைந்துள்ள பாடசாலையில் எமது சிறார்கள் கற்பதற்குமே அனுமதி கிடைத்துள்ளது. நாம் இடம்பெயர முன்னர் இந்தக்கிராமத்தில் 350 குடும்பங்கள் வாழ்ந்தன. 

யுத்தம் எம்மை சின்னா பின்னப்படுத்தியதால் முள்ளிக்குள கிராமத்தில் முன்னர் வாழ்ந்த மக்களுள் ஆக 110 குடும்பங்களே தற்போது மலங்காடுவில் வசிக்கின்றனர். 

கட்டாந்தரையிலே, தகரக்கொட்டில்களில் வாழும் நாம்  பல்வேறு கஷ்டங்களை எதிர் நோக்குகின்றோம். இருப்பதற்கு பொருத்தமான வீடில்லை. குடிப்பதற்கு நீர் இல்லை. இங்கு கட்டித் தரப்பட்ட கிணறுகள் உப்பு நீராகவே இருக்கின்றன. குடிநீரை வெகு தொலைவில் இருந்தே நாம் பணம் செலுத்தி பெற வேண்டியுள்ளது. மருத்துவ வசதியையும் பெற முடியாத நிலையில் உள்ளோம். நீண்ட தூரங்களுக்குச் சென்றே நாம் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. பாம்புக்கடியும், யானைத்தொல்லையும் எம்மை விட்ட பாடில்லை. 

முள்ளிக்குள மீனவர்கள், பரலோக மாதா கோவிலுக்குச் சொந்தமான பூக்குளம் எனும் பகுதியில் ஆறு கரைவலைப்பாடுகளில் முன்னர் தொழில் செய்தனர். ஆனால் ஒரேயொரு கரைவலைப்பாட்டைத் தவிர ஏனையவற்றை பாதுகாப்புப் பிரதேசம் விழுங்கிவிட்டது. பதின்மூன்று குளங்களை பயன்படுத்தி, பலநூறு ஏக்கரில் விவசாயம் செய்த நாம், இன்று ஒரேயொரு குளத்திலேயே சிறு பிரதேசத்தில் விவசாயம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னர் தபால் அலுவலகம் இருந்தது. இப்போது அதுவுமில்லை. நாம் தற்போது வாழும் பிரதேசத்திற்கு மன்னார் ஆயர் அடிக்கடி வந்து, எமக்கு பல்வேறு உதவிகளை மேற்கொள்வார். அவரை நாம் என்றும் மறப்பதற்கில்லை. மாகாண அமைச்சர் டெனீஸ்வரனும் எமக்கு சில உதவிகளை மேற்கொண்டிருக்கின்றார். இதைத்தவிர எந்த அரசியல்வாதியும் இங்கு வந்து எந்த உதவியும் செய்யவில்லை. செய்வதுமில்லை. 

தேர்தல் காலங்களில் எமது கிராமத்திற்கு வருவார்கள், உணர்ச்சி அரசியல் நடத்துவார்கள். அத்துடன் நிறுத்திக்கொள்வார்கள என்று கிராம மக்கள் தமது கஷ்டங்களையும், துன்பங்களையும் அமைச்சரிடம் உருக்கமாகத் தெரிவித்தனர். 

அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர். வீட்டுத்திட்டத்தில் அமைச்சர் எங்களுக்கு உதவ வேண்டும். மலங்காடுவில் தபால் நிலையமொன்றை அமைத்துத் தர வேண்டும். மக்கள் குடியிருப்புக்கு அருகில் பஸ் தரிப்பிடம் ஒன்றையும் ஏற்படுத்தி தரவேண்டும். பிரதானமாக குடிநீர்ப் பிரச்சினையை தீர்த்து வைப்பது உங்கள் தலையாய கடமையாகுமென்று கூறினர். அத்துடன் தமது பூர்வீக கிராமமான முள்ளிக்குளத்திற்கு மீண்டும் சென்று வாழ்வதற்கு நீங்கள் முயற்சிகளை மேற்கொண்டால் உங்களை இறைவன் என்றுமே கைவிடமாட்டான் என்றும் தெரிவித்தனர்.

மலங்காடுவிலிருந்து முள்ளிக்குளம் கிராமத்திற்கு மாணவர்கள் கால் நடையிலேயே செல்வதாகவும், பாதுகாப்புத்தரப்பினர் வழங்கியுள்ள பஸ் வசதி ஒழுங்கில்லையெனவும் தெரிவித்த அகதிகள், முடிந்த வரையில் வளர்ந்த  மாணவர்களுக்கேனும் சைக்கிள் வசதிகள் பெற்றுத்தர வேண்டுமெனவும் கோரினர். உள் வீதியும், பிரதான வீதியும் மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக இருப்பதால் அவற்றை புனரமைத்து உதவுமாறும் அமைச்சரிடம் வேண்டினர். 

கடந்த காலங்களில் அமைச்சர் இங்கு வந்து தமது குறைகளை கேட்க முடியாத அளவு சில நிர்ப்பந்தங்களும், சூழ்நிலைகளும் ஏற்பட்டமை குறித்தும் தமது வருத்தத்தை அந்த பிரதேச மக்கள் அமைச்சரிடம் தெரிவித்ததுடன், அமைச்சர் ரிசாட் தங்கள் மீது வைத்துள்ள அக்கறையான எண்ணத்திற்கு தமது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். 

முள்ளிக்குளம், றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் அந்தோனி றைமன் கூறியதாவது,

இந்தப்பாடசாலையில் 9 ஆம் வகுப்பு வரை சுமார் 39 மாணவர்கள் கல்வி கற்பதாகவும், அவர்கள் இன்னோரன்ன நெருக்கடியில் வாழ்வதாகவும் தெரிவித்தார். 

அகதி மக்களின் குறைகளை அனுதாபத்துடன் கேட்டுத்தெரிந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் சில பிரச்சினைகளுக்கு அவசரத்தீர்வு காண்பதாக உறுதியளித்தார். அத்துடன் வீடமைப்புத் திட்டத்திலும் உதவுவதாகவும் தெரிவித்தார். ஏனைய பிரச்சினைகளுக்குப் படிப்படியாக தீர்வு காண்பதாகவும்  அமைச்சர்  மக்களிடம் தெரிவித்தார்.  

No comments

Powered by Blogger.