புலிகளுக்கு மீள் உயிர் கொடுக்கும் சரத்பொன்சேகா..!
புலிகளுக்கு சரத்பொன்சேகா மீள் உயிர் கொடுப்பதாக தெரிவித்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டு புலிக் கொள்கைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடகிழக்கில் மகிந்தவை தோற்கடித்த எதிரிகளை பலப்படுத்தும் வேலைத்திட்டம் அரசாங்கத்தால் முன்னெடுக்கப் படுவதாகவும் புலம்பெயர் புலிகளின் அனுசரனையில் வடகிழக்கில் மீண்டும் புலிகளின் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினரது இலக்கு விடுதலைப் புலிகள் மாத்திரமே என்று தெரிவித்துள்ள அவர் பொதுமக்கள் எவரையும் இராணுவத்தினர் கொல்லவில்லை என்றும் அன்று யுத்தத்தை முன்னின்று நடத்தியவர்கள் இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
இன்றைக்கு பொன்சேகா தெரிவிக்கும் கருத்துக்களை அன்று ஏன் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள விமல், இராணுவத்தையும் இராணுவ இரகசியங்களையும் காட்டிக் கொடுக்கும் இராணுவத்தளபதியை வைத்துக் கொண்டு எவ்வாறு யுத்தம் நடந்தது என்பது ஆச்சரியமானது என்றும் கூறினார்.
வடகிழக்கில் புலிகளின் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் அதேவேளை புலம்பெயர் பணத்தில் வடகிழக்கு பலமடைந்து வருவதாகவும் இந்தியாவின் ஒரு காலணி நாடாக இலங்கை மாறி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இறுதி யுத்தம் தொடர்பில் இராணுவத்தினர்மீது யுத்த விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதற்கான சித்திரவதைகள் இப்போதே தொடங்கிவிட்டது என்றும் கூறிய அவர் சிறிது காலத்தில் புலிகளை கொன்ற குற்றத்திற்காய் இராணுவத்தினர் தண்டிக்கப்படபோகின்றனர் என்றும் கூறினார்.
Post a Comment