Header Ads



வஸீம்‬ தாஜுதீனின் சகோதரி, டாக்டர் ஆயிஷாவின் வாக்குமூலம் (பகுதி - 1)


-Mujeeb Ibrahim-

#‎வஸீம்‬ தாஜுதீன்: ஒரு வசீகர இளைஞனின் படுகொலை பற்றிய குறிப்பு......

கடந்த நான்கு வருடங்களாக மெளனமாக இருந்த வஸீம் தாஜுதீனின் குடும்பம், தமது பிள்ளைக்கு நடந்த அநீதியையும், அவர் படுகொலை செய்யப்பட்டதையும் பற்றி இப்போது பேசத்தொடங்கியிருக்கிறது.

வஸீமின் சகோதரி டாக்டர் ஆயிஷா முதன் முறையாக ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் குறிப்புகளின் அடிப்படையில் இந்த பத்தி அமைகிறது.

"உம்மா 12 மணிக்கு முந்தி வந்திடுவேன்" என்று கூறியவாறே இரவு 8 மணியளவில் போன தம்பி திரும்பி வரவேயில்லை.....!!!

உம்மா இன்னும் அவருக்காக அழுதழுது காத்துக்கொண்டிருக்கிறார்....

அன்று அதிகாலை இரண்டரை மணியிருக்கும் பொலிஸார் எங்கள் வீட்டுக்கு வந்து என்னை அழைத்துச்சென்றார்கள்...

பார்க் வீதியின் ஷாலிகா மைதானத்தின் ஒதுக்குப்புற சுவரில் எனது கார் மோதுண்ட நிலையில் எரிந்தவாறு காணப்பட்டது...

நாரஹென்பிட்ட OIC மிகவும் பக்குவமாக என்னோடு உரையாடி அந்த காரின் கதவினை திறந்து காட்டினார்...

எனக்கு தலை சுற்ற தொடங்கியது !
என்றார் டாக்டர் ஆயிஷா.

காருக்குள் இருந்த தனது சகோதரனின் உடலை அடையாளம் காண்பதில் இவ்வளவு மோசமான அனுபவங்களை பெறவேண்டிவருமென அவர் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை.

" என்னால் தம்பியின் உடலை அடையாளம் காண முடியவில்லை, அந்தளவுக்கு அது மாற்றம் பெற்றிருந்தது. எனது இளைய தம்பி மிகவும் வசீகரமானவர், நல்ல ஆளுமை மிக்கவர். அவ்வாறுதான் எல்லோரும் அவரை ஞாபகம் வைத்திருக்கின்றனர். அவரது உடல் சிதைந்திருந்த விதம் பற்றி விபரித்து அவர் பற்றிய நல்ல ஞாபகங்களை நான் வீண்டித்துவிட விரும்பவில்லை" என்கிறார் கண்ணீருடன் டாக்டர் ஆயிஷா.

மறு நாள் வசீமின் உடலை பெறும் வரை அவரது குடும்பம் நடாத்தப்பட்ட விதம் குறித்து பாரிய மன உளைச்சலுக்கும் அவர் ஆளானார்.

அப்போதைய கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர, வசீமின் உடலை அடையாளங்காண்பதற்காக அவரது உடலில் உள்ள அடையாளங்களை வினவியுள்ளார்.

அந்த நேரத்தில் டாக்டர் ஆயிஷாவுக்கு தம்பியின் உடலையே அடையாளங்காண முடியவில்லை!

ஆனாலும் ஆறுவருடங்களுக்கு முன்னர் வசீமின் முழங்காலில் செய்யப்பட்ட சத்திரசிகிச்சை அவருக்கு ஞாபகம் வந்தது. அதைப்பற்றியும் அதனுள்ளே இருக்கும் இரும்புத்தகடுகள் பற்றியும் விபரித்தபோதும், அதற்கான diagnosis x-ray இனை சட்டவைத்திய அதிகாரி கேட்டுள்ளார்.

நவலோக வைத்தியசாலையின் டாக்டர் வசந்த பெரேரா கையொப்பமிட்ட அந்த அறிக்கைகளை சமர்ப்பித்த போதும் அவர் திருப்தியடையவில்லை!

அதற்கும் மேலதிகமாக வைத்தியரால் கையொப்பமிடப்பட்ட bed head ticket இனை சட்டவைத்திய அதிகாரி வினவியுள்ளார்!

அதனை தேடி எடுக்க தாஜுதீன் குடும்பத்திற்கு அன்று பல மணி நேரம் சென்றுள்ளது.

உடலை அடையாளங்காண ஆறு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த சத்திர சிகிச்சை பற்றி சட்டவைத்திய அதிகாரி ஆராய்ந்த விதமும் அந்த குடும்பத்தின் நிலை அறிந்தும் அவர்களை மேலும் சித்திரவதைக்கு உள்ளாக்கிய கொடூரமும் கவனிக்கப்படவேண்டியதும் கண்டிக்கத்தக்கதுமாகும்!

இறுதியாக, டாக்டர் ஆயிஷாவிடம் சத்தியக்கடதாசியை பெற்றுக்கொண்டு சட்டவைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர உடலை உறவினர்களுக்கு ஒப்படைத்துள்ளார்.

" ஒரு வைத்தியராக உடலை உறவினர்களுக்கு ஒப்படைக்க முன்பாக தேவைப்படும் ஆவணங்கள் பற்றி அறிவேன், ஆனாலும் ஆரம்ப முதலே சட்ட வைத்திய அதிகாரி இரண்டு மனதோடு செயற்பட்டதையும், அவர் பயங்கலந்து காணப்பட்டதையும் அவதானித்தேன்" என்கிறார் ஆயிஷா!

இஸ்லாமிய வழிகாட்டலுக்கமைய விரைவாக ஜனாஸாவினை அடக்கம் செய்துவிட வேண்டுமென்பதில் வசீமின் தாயார் சிரத்தை கொண்டிருந்ததால் இரவு 9 மணியளவில் தெகிவளை ஜும்ஆ பள்ளிவாயல் மையவாடியில் வசீமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதனால் அவுஸ்திரேலியாவிலிருந்து அவ்வளவு தூரம் துயரத்துடன் பயணித்துவந்த வசீமின் சகோதரருக்கு தம்பியின் உடலை பார்க்க முடியாமல் போயிற்று!

"இந்த மரணத்தில் சந்தேகம் இருந்தால் இவ்வளவு காலமும் ஏன் மெளனமாக இருந்தீர்கள்?" என வினவப்பட்ட போது,

" எங்களுக்கு அப்போது என்ன செய்வதென்றே புரியவில்லை, மறுபக்கம் எனது பெற்றோர் அதனை ஒரு விபத்தென்றே நம்பியிருந்தார்கள். எனது தாயாரின் மனதை சாந்தப்படுத்த அந்த நம்பிக்கை எனக்கு அப்போதைக்கு இலகுவாகவும் இருந்தது. எனது குடும்பத்தின் அந்த மனநிலையினை நான் குலைத்துவிடவும் விரும்பவில்லை. ஆனால் எனது மனது எரிந்து கொண்டேயிருந்தது" என்கிறார் ஆயிஷா!

(இந்த மரணம் எப்படி சந்தேகத்திற்கிடமானது , அதன் பின்னணி என்ன என்பதையெல்லாம் அடுத்த பதிவில் பார்ப்போம்....)

வாசிக்கும் நண்பர்கள் அனைவரும் இதை பகிருங்கள். அரசாங்கத்தின் காதுகளுக்கு இது சென்றுசேரட்டும்.

1 comment:

  1. All Srilankans must be taught to live with RESPECT to each
    other first as humans and nothing else should interfere
    with that. There's a foolish attitude , deep rooted in the
    society that RESPECT is owed only to a certain class of
    people and it is this attitude that has let the whole
    country down and vulnerable to bad elements in every way.
    We must do everything we can to establish justice in the
    country .

    ReplyDelete

Powered by Blogger.