ஜெய்லானி பள்ளிவாசல் விவகாரம் - அரச உயர்தரப்புடன் பேசப்படும் - ஹிஸ்புல்லாஹ்
ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றவேண்டும் என சிங்கள ராவய அமைப்பு மீண்டும் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவு அக்கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடதவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அதேவேளை, இந்தப்பிரச்சினையை இனவாத அமைப்புக்கள் தொடர்ந்தும் பெரிதுபடுத்தி தெற்கு மக்களை குழப்பும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஆகியோரது கவனத்துக்கு தனிப்பட்ட ரீதியில் தான் கொண்டுவரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
ஜெய்லானி பள்ளிவாசல் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசமானது பரம்பரை பரம்பரையாக முஸ்லிம்களினால் பாதுகாக்கப்பட்ட பிரதேசம். அப்பகுதியிலிருந்து முஸ்லிம்களையும் பள்ளிவாசலையும் அகற்ற வேண்டும் என சிங்கள அமைப்புக்ககள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
கூரகல என சிங்களவர்களினால் குறிப்பிடப்படும் இப்பிரதேசத்தில் பௌத்தர்களது தொல்பொருள் அடையாளங்கள் இருக்குமாயின் அதனைப் பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். மாறாக 500 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் பாதுகாத்து வரும் அப்பிரதேசத்திலிருந்த அவர்களை உடனடியாக வெளியேற்றுமாரு கோரிக்கைவிடுப்பது எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த விவகாரம் உள்ளிட்ட மேலும் முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் தலைதூக்கியுள்ள விடங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவு தமது கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளது.
அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்புச் செயலாளர், சட்டம் ஓழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க உள்ளிட்ட தரப்புடன் நான் தனிப்பட்ட ரீதியில் இந்த விடயம் தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளேன்- என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment