சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - அமெரிக்க வெளிவிவகாரக் குழு
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவும், அரசியல் கைதிகளை விடுவிக்கவும், இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்கவும், சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் தலைவர் எட்வேர்ட் ரொய்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்துடன் இராஜதந்திரத் தொடர்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
”மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பல வாக்குறுதிகளை அளித்துள்ளதுடன் சாதகமானதும் கவரத்தக்கதுமான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.
மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் இராஜதந்திர தொடர்புகள் இந்த முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவும், அரசியல் கைதிகளை விடுவிக்கவும், இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்கவும், சிறிலங்கா அரசாங்கத்துக்கு தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே உறுதியளித்துள்ள இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், பெரியளவிலான மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கு சிறிலங்காவில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப உதவியாக இருக்கும்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவது, சிறிலங்கா தொடர்பான தெளிவான கொள்கைகளை முன்வைப்பது உள்ளிட்ட சிறிலங்காவின் மறுசீரமைப்புக்கு அமெரிக்கா ஆதரவளிப்பது தொடர்பான தெளிவான நகர்வுகளை ஜோன் கெரி முன்னெடுக்க வேண்டும்.” என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment