Header Ads



பிறக்காத குழந்தைகளை கடன்காரர்களாக்கியோர்

பிறக்காத குழந்தைகளைக் கடன் காரர்களாக மாற்றிய கடந்த அரசு எட்கா போன்ற ஒப்பந்தமொன்றுக்கு பொய்யான பெயர்களை வைப்பது பெரிய காரியமல்ல என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கொலன்னாவைத் தொகுதி ஐ.தே.க அமைப்பாளருமான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொலன்னாவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இந்தியாவுடன் சீபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவிருந்தது. எனினும் அந்த ஒப்பந்தத்திலுள்ள பொருத்தமற்ற விடயங்களை நீக்கி நாட்டுக்கு உகந்த எட்கா என்ற பெயரில் ஒப்பந்தமொன்றினை செய்து மேற்கொள்வதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்று வருகையில் அச்சமடைந்துள்ள பொது எதிரணியினர் அந்த ஒப்பந்தம் பற்றி பொய்யான தகவல்களை வழங்கி வருகின்றனர்.

எட்கா பற்றி சமூகத்தில் பரந்துபட்ட கருத்தாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. எட்கா தொடர்பில் பொய்ச் செய்திகளைப் பரப்பிவரும் குழுக்களின் தர்க்கம் என்னவெனில் இந்தியாவின் ரோ ஒற்றர் சேவையினர் இலங்கை வரவுள்ளனர் என்பதாகும். அத்தோடு இலங்கையில் உள்ள தொழிற்துறைகளில் இந்தியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்ற கோஷம் முன்வைக்கப்பட்டுள்ளது. ரோ ஒற்றர் சேவையினர் இலங்கைக்கு வருவதாக இருந்தால் ஒப்பந்தம் கைச்சாத்திடத் தேவையில்லை. அவ்வாறு செய்வதாயின் அது ஒற்றர் சேவையாக இருக்கவும் முடியாது. எந்தவொரு சேவை ஒப்பந்தமும் இதில் உள்ளடக்கப்பட மாட்டாதென பிரதமர் பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்.

இவ்வாறு உறுதியளிக்கப்பட்டிருந்தும் ஏன் பொய்யாகக் கூக்குரலிடுகிறார்கள். 2002, 2004 காலப்பகுதியில் ஐ.தே.க அரசு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் உதவியுடன் நாட்டை அபிவிருத்தி செய்ய முயன்றபோது விமல் வீரவங்ச தலைமையிலான குழு அதற்கெதிராக செயற்பட்டது. உலக வங்கியின் பிளக்கை கழற்றுவோம் என்றார்கள். அவ்வாறு சொல்லிவிட்டு களவாடுவதற்கு ஆட்களை கொல்வதற்கு காணாமற்போகச் செய்வதற்கு ஊழல் மோசடியில் ஈடுபடுவதற்காக பிளக்கை போட்டுக்கொண்டார்கள். தேசியவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் இவர்கள் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லவே முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.