Header Ads



மகிந்தவுக்கு மூக்கணாங் கயிறு போடுவதில், அரசாங்கம் வெற்றியடையுமா..?

லெப். யோஷித ராஜபக்சவை கடற்படையிலிருந்து இடைநிறுத்தும் அறிவிப்பு கடந்தவாரம் வெளியிடப்பட்ட போது, பொதுமக்கள் மத்தியில் அந்தச் செய்தி அவ்வளவாகப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கவில்லை. ஏனென்றால் இது முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடவடிக்கை தான். ஆனால் சற்றுக் காலதாமதமாகவே நடந்தேறியிருக்கிறது.

கடற்படையில் பத்தாண்டுகள் வரை பணியாற்றிய லெப்.யோஷித ராஜபக்ச இப்போது சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதால், அவருக்கான சம்பளமும், ஏனைய கொடுப்பனவுகளும் கூட நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், கடுவெல நீதிமன்றத்தில் ஒவ்வொரு தவணையின் போதும், பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகள் நீதிமன்றினால் நிராகரிக்கப்படுகின்றன.

இதனை எதிர்த்து கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவும் இழுபறிக்குள்ளாகியிருக்கிறது. இந்தநிலையில் தமது கைது அடிப்படை உரிமை மீறல் என்று யோஷித ராஜபக்ச உயர்நீதிமன்றத்திலும் மனுவொன்றைத் தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த மனுக்களில் ஏதாவது ஒன்றின் மூலம் அவருக்குப் பிணை கிடைத்தாலும் கூட கடற்படைத் தளபதியின் முன் அனுமதியின்றி கடற்படைத் தளங்களுக்குள் நுழைய முடியாது என்று கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்திருக்கிறார்.

ஒரு காலகட்டத்தில் இலங்கைக் கடற்படையில் இருந்த எவருமே அனுபவித்திராத சுதந்திரம், வசதி வாய்ப்புகளுடன் திரிந்த யோஷித ராஜபக்ச, இப்போது சிறைக்குள் தள்ளப்பட்டிருப்பது மாத்திரமன்றி, கடற்படையிலிருந்தும் இடைநிறுத்தப்படும் நிலைக்கு உள்ளாகியிருக்கிறார்.

நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அது நிரூபிக்கப்பட்டால், கடற்படையில் இருந்து லெப்.யோஷித ராஜபக் ஷ நிரந்தரமாகவே நீக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் ஓய்ந்து விடாது. ஏனென்றால் போதிய தகைமைகளின்றி கடற்படையில் சேர்ந்து கொண்டார், கடற்படைத் தளபதியின் முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ளாமல், பெரும் எண்ணிக்கையான வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டார் என்ற இரண்டு குற்றச்சாட்டுகளையும் லெப்.யோஷித ராஜபக்ச எதிர்கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஏற்கனவே கடற்படைத் தளபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான், லெப்.யோஷித ராஜபக்சவை, இடைநிறுத்துமாறு பாதுகாப்பு அமைப்பு மூலம் கடற்படைத் தலைமைக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கேர்ணல் சம்மி குமாரரத்ன, லெப்.கேர்ணல் பிரபோத வீரசேகர உள்ளிட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டவுடனேயே, அவர்களை சேவையிலிருந்து இடைநிறுத்தியது இராணுவம், அவர்களுக்கு சம்பளத்தையும் வழங்கவில்லை.

இந்த விவகாரத்தை அரசியலாக்கிய மஹிந்த ராஜபக்ச, இடைநிறுத்தப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு தாமே சம்பளம் கொடுப்பதாக அறிவித்திருந்தார். அதனை அவர் தொடர்ந்து வழங்குகிறாரா இல்லையா? என்று தெரியவில்லை.

ஆனால், அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட படையினரை தாம் காப்பாற்றுவதாக ஒரு தோற்றப்பாட்டை அவர் உருவாக்கியிருக்கிறார். இப்போது, அதே மஹிந்த ராஜபக்ச தனது மகனுக்குத் தானே சம்பளத்தைக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆனாலும், லெப்.யோஷித ராஜபக்ச சிறையில் இருப்பதாலும், அவருக்கென்று தனியான குடும்பம் இல்லாததாலும், அவ்வாறு சம்பளம் கொடுத்து அரசியலாக்க அவரால் முடியாது போயிருக்கிறது.

எவ்வாறாயினும் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் நெருங்கிய பின்னர் தான் அவரை இடைநிறுத்தும் முடிவைக் கடற்படை எடுத்திருக்கிறது.

கடற்படைச் சட்டங்களின் கீழ் அவர் மீது இந்த நடவடிக்கையை எடுக்க கிட்டத்தட்ட நான்கு வாரங்கள் சென்றிருக்கின்றன. இது அதிகபட்ச பொறுமையைத்தான் காட்டியிருக்கிறது.

ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர் என்பதால் கடற்படை இந்தப் பொறுமையை கடைப்பிடித்ததா அல்லது அரசியல் ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்குத் தடைகள் தடங்கல்கள் இருந்ததா என்று தெரியவில்லை.

எனினும், இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை, மஹிந்த ராஜபக் ஷவும், லெப்.யோஷித ராஜபக் ஷவும் முன்னரே அறிந்திருந்தனர்.

அதனால்தான், கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தவுடன், லெப்.யோஷித ராஜபக்ச பதவி விலகல் கடிதத்தை கையளித்திருந்தார்.

மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, 2015 ஜனவரி 09ம் திகதி அதிகாலையில் யோஷித ராஜபக்ச சேவையில் இருந்து விலகும் கடிதம் கடற்படைத் தளபதிக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், அந்த விலகல் கடிதம் அப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. அந்தக் கடிதம் அப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும் கூட, கடற்படையினால் துறைசார் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க முடியும்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னரே, 2010ஆம் ஆண்டு அவருக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு தண்டனையும் விதிக்கப்பட்டது.

எனவே லெப்.யோஷித ராஜபக்சவின் இடைநிறுத்தம் நிரந்தரமானதா என்பதை தீர்மானிக்கப் போவது அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுவதில் தான் தங்கியிருக்கிறது.

யோஷித ராஜபக்சவைக் கைது செய்ததன் மூலம், அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்தின் மீது கைவைக்க முடியாது, கைவைக்காது என்று அரசியல் மட்டங்களில் பரவலாக இருந்து வந்த ஒரு கருத்து உடைக்கப்பட்டது.

அதேவேளை, இந்தக் கைது ஒரு அடையாள நடவடிக்கை தான், ஒரு வாரமோ இரண்டு வாரங்களோ கழித்து விடுவித்து விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும், யோஷித ராஜபக் ஷ மீதான விசாரணையின் பிடி இறுக்கப்பட்டு, பிணையில் வெளிவர முடியாமல் திணறுகின்ற நிலையைப் பார்க்கின்றபோது, ராஜபக் ஷ குடும்பத்துக்கான ஒரு எச்சரிக்கையாகவே இது பயன்படுத்தப்படுகிறது போலத் தெரிகிறது.

பல்வேறு ஆட்கடத்தல்கள், கொலைகள், காணாமற்போதல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களில், தொடர்புபட்டுள்ளதாக ராஜபக்ச குடும்பத்தினரின் பெயர்கள் தாராளமாகவே அடிபடுகின்ற நிலையில், அவர்களும் சிறைக்கம்பிகளை எண்ணும் நிலை தவிர்க்க முடியாது என்று எச்சரிக்கும் வகையில் தான் யோஷிதவின் கைது அமைந்திருந்தது.

அதைவிட, தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் மஹிந்த ராஜபக்ச தீவிரம் காட்டிய போது தான், யோஷிதவின் கைது இடம்பெற்றது.

இதற்குப் பின்னர், மஹிந்த ராஜபக்ச அவ்வப்போது எதிர்ப்பை வெளிப்படுத்தினாலும், தீவிரத் தன்மையைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்.

இது ராஜபக்ச குடும்பத்துக்கு யோஷித ராஜபக்சவின் கைது பீதியை ஏற்படுத்தி விட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

யோஷிதவை வைத்து மஹிந்தவுக்கு மூக்கணாங் கயிறு போடுவதில் அரசாங்கம் வெற்றியைக் காணுமேயானால், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் குறுகிய காலத்துக்குள் கைது செய்யப்படுவது சாத்தியமற்றதாகவே இருக்கும்.

அதேவேளை, யோஷிதவின் கைதுக்குப் பின்னரும் மகிந்த ராஜபக்சவுக்கு கடிவாளம் போட முடியவில்லை என்று அரசாங்கம் உணர்ந்தால், கூடிய விரைவில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெலிக்கடைச் சிறையின் வாசத்தை நுகர வேண்டிய நிலை ஏற்படலாம்.

கபில்

No comments

Powered by Blogger.