"முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு, உருவாகினால் வரலாற்று சாதனை"
-அப்துல் கையும்-
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்று ஒரு பழமொழி இருக்கின்றது. ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று இஸ்லாமிய மார்க்கம் சொல்கின்றது. ஒரு சமூகத்தின் திரட்சியான பலம் பலாபலன்களைக் கொண்டுவரும். ஆனால் முஸ்லிம்கள் தவறியிருக்கின்றார்கள். உண்மையில் உலகில் வாழும் பல இனக்குழுமங்கள் மற்றும் நாடுகள் தமக்கிடையே ஒன்றுபட்டதன் மூலம் அசுர காரியங்களை சாதித்துக் காட்டியிருக்கின்றன.
முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட பாசறையில் இருந்து வந்தவர்கள் அல்லர். கிட்டத்தட்ட வடக்கு, கிழக்கில் இன்று செயற்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் அதேபோல் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் போன்ற வடக்கு கிழக்கிற்கு வெளியேயுள்ள சிலரும், மர்ஹும் அஷ்ரஃபிடம் அரசியல் அரிச்சுவடி கற்றவர்களே. அவரே இவர்களை எல்லாம் அரசியலுக்கு கொண்டுவந்தார்.
முஸ்லிம் காங்கிரஸும் சரி, மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஏனைய சிறிய கட்சிகளும் அரசியல்வாதிகளும் சரி, கொள்கை ரீதியாக முரண்பட்ட அரசியல் போக்குகளைக் கொண்டவர்களல்ல. அவர்கள் எல்லோரும், பொதுவில் அஷ்ரஃபின் கொள்கைகளையே பின்பற்றுவதாகவும் அவரது பணிகளையே தொடர்வதாகவுமே கூறிக் கொள்கின்றனர்.
எனவே, இங்கே கொள்கை அடிப்படையில் ஒன்றே, பயணிக்கும் பாதைகளே வேறுபட்டனவாக இருக்கின்றன. ஆகவே, முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைப்பது முடியாத காரியமல்ல.
பரஸ்பரம் முட்டிமோதிக் கொண்டு இருந்த தமிழ் இயக்கங்களே தமது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஓரணியில் திரண்டிருக்கின்றன என்றால், ஒரே பாசறையில் பயின்று, ஒன்றாக படுத்துறங்கி இன்று பிரிந்து நிற்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதற்கு ஏன் முடியாது?
ஆளும் கட்சியில் இருந்தாலேயே மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்ற நிலைப்பாடு பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றது. அவர்களது நிலைப்பாடு சரி என்று வைத்துக் கொள்வோம். இன்றைய ஆட்சியில் எல்லா முஸ்லிம் எம்.பி.க்களும் ஆளும் கட்சியிலேயே இருக்கின்றனர். ஆனால் இந்த ஒருவருட நல்லாட்சியிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி முஸ்லிம்களுக்கு இவர்கள் எதையாவது பெற்றுக் கொடுத்ததாக இல்லை.
இதற்கு காரணம் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் கட்சிகளுக்கும் இடையில் இருக்கின்ற முரண்பாடாகும். எல்லோரும் ஒருமித்த குரலில் கோரிக்கையை முன்வைப்பதற்கும் தனித்தனியாக வேறுவேறு கோணங்களில் பிரச்சினைகளை அணுகுவதற்கும் வேறுபாடு இருக்கின்றது. முஸ்லிம் அரசியல் கட்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கோரிக்கைகளை முன்வைப்பதை விட முஸ்லிம் தேசிய கூட்டமைப்பாக கோரிக்கைளை முன்னிலைப்படுத்தினால் அரசாங்கம் அதை நிறைவேற்றியே ஆக வேண்டிய நிலை ஏற்படும்.
முஸ்லிம் கட்சிகளை ஒரு நிலைப்படுத்துவது சாத்தியமற்றுப் போய்க் கொண்டிருப்பதற்கு அரசியல் தலைமைகள் மட்டுமே காரணமல்ல. பிராந்திய அரசியல்வாதிகள், முஸ்லிம் புத்திஜீவிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் சாதாரண பொதுமக்களுக்கும் இந்த அரசியலில் பங்கிருக்கின்றது.
இந்நிலைமையை சீர்செய்ய வேண்டிய கடப்பாடு மேற்குறிப்பிட்ட தரப்பினருக்கும் உள்ளது. எனவே, உடனடியாக முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். இது அனைவரதும் தார்மீகக் கடமையாகும். முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு என்று வரும்போது, சில முன்யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை தளமாகக் கொண்டியங்கும் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளை முதன்மையாகக் கொண்ட ஒரு கூட்டமைப்பாக இது உருவாக்கப்பட வேண்டுமென்றும் பின்னர் இது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்பட வேண்டுமெனவும் கூறப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற மக்களின் பிரச்சினைகளும் அதற்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரச்சினைகளும் வேறுபட்டவை என்ற அடிப்படையில் இந்த யோசனை நியாயமானதே.
ஆனால், வடக்கு கிழக்கிற்கு வெளியேயும் அதிகமான எம்.பி.க்கள் உள்ளனர். தனித்தனியான பிரச்சினைகள் போன்றே, அரசியலமைப்பு உருவாக்கம், எல்லை மீள்நிர்ணயம் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகள் எல்லா பிராந்திய மக்களுக்கும் பொதுவானவையாக காணப்படுகின்றன. இதனை கருத்திற்கொண்டும், முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது இன்னுமொரு பிளவு ஏற்படுவதை தடுப்பதை கருத்திற் கொண்டும், வடக்கு கிழக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளை பின்னர் உள்வாங்குவது குறித்து முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் ஸ்தாபக உறுப்பினர்கள் கலந்தாலோசிக்கலாம்.
இக் கூட்டமைப்புக்கு பரவலான ஆதரவு நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது. சில அரசியல்வாதிகள் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பிற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.
அந்த வகையில், அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளையும் இதற்குள் கொண்டுவந்து முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை நிறுவுவதற்கான அழைப்பை விடுக்க வேண்டும். இவ்வேலைத் திட்டம் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும். மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் முயற்சி என்பதால் புத்திஜீவிகள், படித்தோர் உள்ளிட்ட அனைத்து மக்களும் இதில் அழுத்தக் குழுவாக செயற்பட வேண்டியுள்ளது.
முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு உருவாகும் என்றால், அது ஒரு வரலாற்று சாதனையாக இருக்கும். அதில் இணைந்து கொள்ள விரும்பாத கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் சுயநலவாதிகள் என்றும் சமூகத் துரோகிகள் என்றும் அவ் வரலாறு எழுதி வைக்கும்.
ஒரு காலத்திலும் உருவாகாது! சிங்ஹல தமிழ் கூட்டமைப்புகள் தாராலமாக உருவாகும்
ReplyDeletenow a days politicians have there own agenda, it is deficit them to come out from it,
ReplyDeleteBut the time of our beloved prophet (SAW) every one had commen aggenda that is Islam, and they succeeded even after the time of rightly guided Kaleefa's time this commen objective was in there harts.