Header Ads



நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு - பொங்குகிறார் மகிந்த

நாட்டில் தற்போது நடந்து வரும் குற்றச் செயல்கள் போல் இதுவரை காலமும் நடக்கவில்லை எனவும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கண்டி ஹத்தரலியத்த பிரதேசத்தில் இன்று -06- நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர், ஊடகங்களிடம் பேசும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

எமது ஆட்சிக்காலத்தில் குற்றச் செயல்களை அடக்கியிருந்தோம். தற்போது சகல இடங்களிலும் ஹெரோயின் காணப்படுகிறது.

ஹெரோயின் மிக குறைந்த விலையில் கிடைப்பதுடன் கிராமங்களுக்கும் வந்துள்ளது. இது எமது பிள்ளைகளுக்கு பாரிய பிரச்சினை.

சமூகம் இப்படி சீரழிந்து போனால், மக்களுக்கு எந்த சுதந்திரமும் இருக்காது. ஆட்சியாளர்களுக்கு மாத்திரமே சுதந்திரம் இருக்கும். இது குறித்து கவலையடைந்துள்ளேன்.

குற்றச் செயல்கள் வீரகெட்டியவில் இருந்தே ஆரம்பித்தது. இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரை சுட்டுக்கொன்றார்.

இதற்கு பின்னர் கொழும்பில் சமிந்த என்பவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து மாத்தறையில் ஒருவர் சுடப்பட்டார்.

நீர்கொழும்பில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் சேர்ந்த ஒருவரை இன்று காலையில் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த குற்றச் செயல்களை அரசாங்கம் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படியான குற்றச் செயல்கள் இதுவரை நடக்கவில்லை.

ஒரு வருடத்திற்கு மேல் ஆட்சி செய்துள்ளனர். அபிவிருத்தி முற்றாக ஸ்தம்பித்துள்ளது. பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை பெற அவர்கள் விதித்துள்ள சகல நிபந்தனைகளுக்கும் இணங்கியுள்ளனர்.

யாருக்கும் தெரியாமல் நான் கடன் பெற்றுள்ளதாக அமைச்சர்கள் சிலர் கூறுவதை கேட்க முடிந்தது.

அதனை தற்போது தேடிக்கொண்டிருக்கின்றனராம். ஆவணங்கள் இல்லையாம். ஆவணங்களில் இல்லையென்றால், திரும்ப செலுத்தாது இருங்கள் என்றுதான் நான் கூற வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.