ஏப்ரல் பூல் - மூடர் தினம்
எம்.ஐ அன்வர் (ஸலபி)
-மதீனா இஸ்லாமியப் பல்கலைக் கழகம்-
ஏப்ரல் 1 ஆம் திகதி மூடர் தினமாக உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. பொய் பேசுவதற்கும், ஏமாற்றுவதற்கும், பிறரை பரிகாசம் செய்வதற்கும் அவர்களின் உள்ளங்களை புண்படுத்துவதற்கும் அனுசரனை அளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தினத்தில் பொய் சொல்வது வேடிக்கையாகவும், பெருமையாகவும் கருதப்படும் அளவுக்கு இந்நாள் முக்கியமானதாக பேசப்படுகின்றது. உண்மை பேசி, ஏமாற்றாமல் வாழக் கூடிய மனிதர்கள் கூட இந்நாளில் மற்றவர்களை நையாண்டி செய்யும் விதமாக பொய் சொல்லி நகைச்சுவை செய்யும் வழமை உருவாகியுள்ளது கவலைக்குறியதே
முட்டாள்கள் தினம் ஏப்ரல் 1 ஆம் திகதி உலகமெல்லாம் முட்டாள்களாக்கும் முயற்சி நடைபெறுகிற ஒரு முட்டாள் நாள். இது எவ்வாறு ஆரம்பமானது என்ற வினாவும் எம்முன் எழுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் பல காலம் வரை ஏப்ரல் முதல் நாளை ஆண்டின் தொடக்கமாக கருதி வந்தனர். அதன் பின் 16ஆம் நூற்றாண்டில் ஜனவரி 1ஆம் திகதியை புத்தாண்டு தினமாக பின்பற்றத் தொடங்கினர். 1582 ஆம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த 13ஆம் கிரிகோரி ஜார்ஜியன் காலண்டர் என்ற புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். அதில் புத்தாண்டு ஜனவரி 1ஆம் திகதி பிறப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஸ்கொட்லாந்து , ஜெர்மனி, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் படிப்படியாக இந்த மாற்றத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டன. ஆனால் பல நாடுகள் இந்த புத்தாண்டை ஏற்கவில்லை. எனவே அப்போது சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐரோப்பியர்கள் தங்களின் புத்தாண்டை பின்பற்றாதவர்களை முட்டாள்கள் என நையாண்டி செய்யத் தொடங்கினர். அத்தோடு நில்லாமல் , ஏப்ரல் 1ஆம் திகதி பல்வேறு பொய்யான, தவறான செய்திகளைச் சொல்லி அவர்களை ஏமாற்றவும் ஆரம்பித்தனர். இது தான் காலப்போக்கில் ஏப்ரல் 1ஆம் திகதி முட்டாள்கள் தினம் என மாறிவிட்டதாக கூறப்படுகிறது.
இஸ்லாத்தின் பார்வையில் மூடர் தினம்
இஸ்லாமிய ஷரீஆவின் பார்வையில் ஒரு முஸ்லிம் தனது அடுத்த சகோதரனை பரிகாசம் செய்வது ஏமாற்றுவது பொய் கூறுவது அவனது உள்ளத்தைப் புண்படுத்துவது உரிமை மீறல் எனக் கொள்ளப்படுகிறது. ஏப்ரல் பூல் எனும் பெயரில் இன்று மனிதர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். செய்தி ஊடக நிறுவனங்களும் இந்நாளில் தன் பங்கிற்கு பொய்யான செய்திகளை வழங்கி வாசகர்களை பரபரப்பில் தவிக்க விடுகின்றன.
ஒரு முஸ்லிம் எப்போதும் பொய் பேசுபவனாகவோ மற்றவர்களின் மனது புண்படும் படியாகவோ,அவர்களை ஏமாற்றுபவனாகவோ,பரிகாசம் செய்பவனாகவோ இருக்கமாட்டான். மேலும் ஏப்ரல் ஒன்றை மையமாக வைத்து நடக்கின்ற ஏமாற்றுச் செயல்கள் அனைத்தும் ஏப்ரல் ஒன்றில் மட்டுமல்ல வாழ் நாள் முழுவதும் தவிர்ந்து கொள்ளப்படவேண்டிய செயல்கள் எனபதையும் நாம் மனங் கொள்ளவேண்டும்.
1.பரிகாசம் தவிர்ப்பீர்
மற்றவர்களை கேளி செய்து கிண்டல் செய்பவர்கள், கேளி செய்யும் தம்மை விட கேளி செய்யப்படும் மனிதர் சிறந்தவராக இருக்கக் கூடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
“விசுவாசிகளே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம்செய்ய வேண்டாம் ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்) அவர் களை விட மேலானவர்களாக இருக்கலாம், (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்ற எந்த பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்”. (49:11)
2.ஏமாற்றுதல் கூடாது.
உண்மையுடன் பொய்யும் புரட்டும் சேர்த்துப் பிறரை ஏமாற்றுவதற்காக, விபத்து நடந்து விட்டது என்றோ, இன்னார் விபத்தில் சிக்குண்டு ஆபத்தான நிலையில் இருக்கிறார் அல்லது மரணித்து விட்டார் என்று கூறி ஏமாற்றி அவர்களின் தன வேதனைகளைக் கண்டு வக்கிர இன்பம் அடைவர்.
நபி(ஸல்)அவர்கள் எங்கள் வீட்டிலிருக்க என்னுடைய தாய் ஒரு நாள் என்னை அழைத்து, “இங்கே வா!நான் உனக்குத் தருகிறேன்”என்றார்கள். உடனே நபியவர்கள் என்ன கொடுக்க அழைத்தீர்? என்று என் தாயைப்பார்த்துக் கேட்க, அதற்கு என் தாய், “பேரீத்தம் பழம் கொடுக்க”என்றார்கள். “நீர் அவருக்கு எதையும் கொடுக்கவில்லையெனில் நீ பொய் கூறி விட்டாய் என்பதாக உன் மீது எழுதப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஆமிர் (ரலி) அறிவிக்கிறார்கள். (அபூதாவூத்)
3.பொய்- நரகத்திற்கு இட்டுச் செல்லும்
“கேள்விப்பட்டதையெல்லாம் சொல்பவன் அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும்”. (முஸ்லிம்)
"நிச்சயமாக உண்மை என்பது நன்மையான செயலுக்கு வழி காட்டுகிறது. நன்மையான செயல் சுவர்க்கம் செல்ல வழி காட்டுகிறது. நிச்சயமாக ஒரு மனிதன் உண்மையையே பேசிக் கொண்டிருக்கிறான். இறுதியில் அவன் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான். மேலும் நிச்சயமாகப் பொய் என்பது தீமை செய்ய வழி காட்டுகிறது. தீமை நரகிற்கு வழி காட்டுகிறது. நிச்சயமாக ஒரு மனிதன் பொய் பேசிக் கொண்டிருக்கிறான். இறுதியில் அல்லாஹ்விடத்தில் அவன் மகாப் பொய்யன் என்று எழுதப்பட்டு விடுகிறான்". (முஸ்லிம்)
4.உள்ளத்தைப் புண்படுத்த வேண்டாம்
“பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப்பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார்". (புகாரி) அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் அவன் பாவியாக இருந்தாலும் சரியே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸன்னஃப் அபீ ஷைபா)
5.பொய்ச் சத்தியம் செய்தல்
சிலர் இத்தினத்தில் பிறரை முட்டாளாக்குவதற்கு முயற்சி செய்யும் போது அவர் நம்ப மறுத்து விட்டால் உடனே பொய்ச் சத்தியம் செய்து நம்ப வைக்கின்றனர்.
அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவன் எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர்! (68:10) அறிந்து கொண்டே பொய் சத்தியம் செய்கின்றனர். துன்புறுத்தும் வேதனையை அல்லாஹ் அவர்களுக் குத் தயாரித்துள்ளான். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகவும் கெட்டது. (58:14,15)
அறிவும் ஆராய்ச்சியும் அபரித வளர்ச்சி கண்டுள்ள கால கட்டத்தில் மனிதர்களில் ஒரு சாரார் மெளட்டீகத்திற்கும் பிற்போக்கு சிந்தனைக்கும் பலியாகியுள்ள அவல நிலையை இன்று கண்கூடாக பார்க்கிறோம். கொள்கையற்ற மனிதர்களை கவனத்தில் கொள்ளாது விட்டாலும் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று வாழ்கின்ற மனிதர்களும் மேற்கத்தைய கலாசாரத்தை விட ஒரு படி மேலே சென்று காணப்படுகின்றமை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்தமட்டில் அதன் இறைக்கொள்கை போலிகளையும் சடங்குகளையும் அடியோடு நிராகரிக்கிறது. மனிதனின் பகுத்தறிவுக்கு வேட்டு வைக்கும் அத்தனை மூடக்கொள்கைகளையும் தூக்கி வீசுமாறு அறிவுருத்தும் இம்மார்க்கத்தில் ஒரு முஸ்லிம் எப்படி ஏப்ரல் பூலை அனுஷ்டிக்க முடியும் என்பது விடைகாணப்படாத விஷயமாகவ்வே உள்ளது.
Timely article well in advance ,eye opening lines .Mashallh.
ReplyDelete