உணர்ச்சித் தொந்தரவு + `ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்’
நரம்பியல் சார்ந்த வினோதமான நோய்கள் பல உண்டு. பெரும்பாலான நோய்கள் எப்படி வருகிறது என்ற காரணம் கூட கண்டறிய முடியாதவையாக இருக்கின்றன. நடுத்தர வயதில் பலருக்கும் கால்களில் வலி வருவது இயல்பானதுதான். சிலருக்கோ ஓய்வாக உட்காரும் போது அல்லது படுத்தவுடன் கால்களில் அதீத உணர்ச்சி ஏற்பட்டு எரிச்சல், குத்துவது அல்லது குடைவது போன்ற வலி ஏற்படும்.
இதனால் கால்களை விடாமல் அசைக்க ஆரம்பிப்பார்கள். இந்த வித்தியாசமான பிரச்னையை `ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்’ (Restless Leg Syndrome) என அழைக்கிறார்கள் நரம்பியல் மருத்துவர்கள். இந்தப் பிரச்னைக்கான காரணம், அறிகுறிகள், சிகிச்சைகள் பற்றி பேசுகிறார் நரம்பியல் மருத்துவ நிபுணர் லட்சுமி நரசிம்மன்.
வெளிநாடுகளில் பிரபலமாக இருந்த பிரச்னை இப்போது நம் நாட்டிலும் பரவலாகவே காணப்படுகிறது. மாலை வேளைகளில்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. கால் நரம்புகளில் அதீத உணர்வெழுச்சி இருக்கும். Sensory Disturbances எனப்படுகிற உணர்ச்சித் தொந்தரவு கால்களில் அதிகமாக இருக்கும்.
சிலருக்கு ஊசி குத்துவது போல வலி இருக்கும். சிலருக்கு காலில் ஈரம் பட்டிருப்பது போல உணர்வார்கள். காலை அசைக்கும் போது, நடக்கும் போது இவ்வகையான உணர்வானது குறையும். ஓய்வெடுக்கும் போதும், தூங்கும் போதும் காலை அசைத்துக் கொண்டே இருப்பார்கள். அதனால்தான் இந்தப் பிரச்னைக்கு `ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்’ என்றே பெயர் ஏற்பட்டது. ஒரு சிலருக்கு எழுந்து சில அடிகள் நடந்தால் மட்டும்தான் கால்களில் உள்ள உணர்வெழுச்சியானது அடங்கும்.
இப்பிரச்னை உள்ளவர்களுக்கு இரவில் தூக்கம் பெருமளவு பாதிக்கப்படும். தூக்கம் வராமல் அடிக்கடி எழுந்து நடந்து கொண்டிருப்பார்கள்.மூளைக்கு அடியில் உள்ள பேசல் கேங்லியன் என்னும் நரம்பு முடிச்சுகள் உணர்வுகளை கடத்தும் வேலைகளை செய்கின்றன. இதில் குறைபாடுகள் எதுவும் ஏற்பட்டால் கால்களில் உணர்வெழுச்சியை ஏற்படுத்துகின்றன. இரும்பு சத்துகளை உடலுக்கு சரியான முறையில் கடத்தும் வேதிப்பொருள் குறைவாக இருந்தாலும் இப்பிரச்னை ஏற்படும்.
கர்ப்பமாக இருக்கும் பெண்களும், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கும், நீரிழிவு உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்தத்தில் அதிகமாக கழிவுகள் சேர்வதால் அதீத உணர்வு பிரச்னை கால்களில் ஏற்படும். ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் வருபவர்களுக்கு எதிர்காலத்தில் பார்கின்சன், அல்சைமர் ஆகிய நோய்கள் வர வாய்ப்புண்டு. அதனால் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக நரம்பியல் மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் பிரச்னை உள்ள சிலர் கால்களில் ஏற்படும் உணர்வெழுச்சி காரணமாக மது அருந்த ஆரம்பிப்பார்கள். மது அருந்தினால் எந்த உணர்வும் தெரியாது. நிம்மதியாக உறங்கலாம் என்பது அவர்களின் எண்ணம். மது அருந்தினால் பிரச்னையின் அளவு அதிகமாகுமே தவிர குறையாது. வலியின் வீரியம் அதிகமாகி Painful Neuropathy ஆக மாறிவிடும். கால்களில் எரிச்சல், குடைச்சலுடன் பிரச்னை இன்னும் தீவிரமாகிவிடும். நிம்மதியாக தூங்க முடியாது.
மூளையில் சுரக்கும் நியூரோடிரான்ஸ் மீட்டர்களில் முக்கியமான வேதிப்பொருளான டோபமைனை (Dopamine) அதிகப்படுத்தும் படியான மருந்துகள் கொடுத்து ரெஸ்ட்லெஸ் லெக் பிரச்னையை சரி செய்யலாம். இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காபி, ஆல்கஹால், டீ, புகையிலை (Coffee, Alcohol, Tea, Tobacco - CATT) ஆகிய உணர்வூக்கிகளை இந்தப் பிரச்னை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது. இவை தூக்கத்தையும் கெடுத்து, கால் வலியையும் அதிகப்படுத்தும்.
தூங்கும் போது ஸ்டாக்கிங்ஸ் எனப்படும் காலுறைகளை அணிந்து கொள்ள வேண்டும். வீட்டுக்குள்ளும் செருப்பு அணிந்து கொண்டு நடப்பது பாதுகாப்பானது. அதிக சூடான வெந்நீரில் குளிக்கக்கூடாது. மிதமான சூடு உள்ள வெந்நீரில் மட்டும் குளிக்க வேண்டும். அதிக சூடான தண்ணீரில் உணர்வு சரியாக தெரியாமல் கால்கள் பாதிப்படைய வாய்ப்புண்டு. அதிக சூடான அல்லது அதிக குளிர்ந்த நீரில் கால்களை கழுவக்கூடாது. கால்களுக்கும் பாதங்களுக்கும் Intrinsic foot exercises கொடுக்க வேண்டும். பாதத்தை மேலும், கீழுமாக தூக்கி இறக்குவது, பாதங்களை குவித்து நீட்டுவது, கால் விரல்களை ஒவ்வொன்றாக அசைப்பது போன்ற பயிற்சிகளை செய்துவர வேண்டும்.’’
Post a Comment