Header Ads



லிண்ட்சியின் மடியே, அஃபியாவுக்கு தாய்மடி


சொந்த அம்மாவுக்கு பேறுகாலத்தில் திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதால் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த கொரில்லாக்குட்டி ஒன்று மனித அம்மாவிடம் பாசமாய் வளர்கிறது.

பொதுமக்களின் வாக்கெடுப்பு மூலம் அஃபியா என்று இந்த குட்டிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. கானா மொழியில் வெள்ளிக்கிழமை குழந்தை என்று பொருள்.

சென்றமாதம் (பிப்ரவரி 2016) ஒரு வெள்ளிக்கிழமையன்று தான் இவரது தாய் பேறுகாலத்தில் உடல் நலமில்லாமல் போக அபூர்வமான சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது அஃபியா.

இதன் தாய்க்கு உடல்நிலை சரியாகும்வரை இங்கிலாந்தின் பிரிஸ்டல் மிருகக்காட்சி சாலை பணியாளர்கள் தான் இதை பராமரிக்கவேண்டும். அந்த பணியை செய்கிறார் இரண்டு குழந்தைகளின் தயான லிண்ட்ஸி பக். பிரிஸ்டல் மிருகக்காட்சி சாலையின் பாலூட்டி பராமரிப்பாளர் இவர்.

பகலில் மட்டுமல்ல, இரவில்கூட இதை வீட்டுக்கு எடுத்துச் சென்று அழும்போதெல்லாம் பால் புகட்ட வேண்டும்.

அஃபியாவும் தானும் வீட்டின் கீழ்தளத்தில் தனியாக உறங்குவதாகவும் தன் கணவரும் இரண்டு மனிதக் குழந்தைகளும் முதல் தளத்தில் தனியாக தூங்குவதாகவும் பிபிசியிடம் தெரிவித்தார் லிண்ட்சி.

"மாலையில் போய் படுக்கையைத் தயார் செய்தபடியே தொலைக்காட்சியை பார்ப்பேன், டீ போடுவேன்... இதற்கு மத்தியில் குறிப்பிட்ட இடைவேளையில் இதற்கு பால் புகட்டுவேன். கிடைக்கும் நேரத்தில் குட்டித்தூக்கம் போடுவேன். கைக்குழந்தை இருந்தால் எப்படி தூக்கம் போகுமோ அப்படித்தான் இதுவும். ஒருவகையில் இது என் மூன்றாவது குழந்தை மாதிரி தான்," என்றார் லிண்ட்சி.

அஃபியாவை அதன் கொரில்லா குடும்பத்தோடு சேர்க்க வேண்டும் என்பதே மிருககாட்சி சாலை பராமரிப்பாளர்களின் பிரதான நோக்கம். ஆனால் அதற்கு சில மாதங்கள் பிடிக்கலாம்.

ஒருவேளை அஃபியாவின் சொந்த அம்மா இதை வளர்க்க விரும்பாவிட்டால் அதன் சித்தி ரொமினா இதனிடம் அன்புகாட்டுவதால் அது இந்த குட்டியை வளர்க்க முயலலாம்.

ஆனால் இப்போதைக்கு மனித அம்மாவான லிண்ட்சியின் மடியே குட்டி கொரில்லா அஃபியாவுக்கு தாய்மடியாய் இருந்து தாலாட்ட வைக்கிறது.

No comments

Powered by Blogger.