Header Ads



"பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும்"

-நஜீப் பின் கபூர்-

எல்லை நிர்னயத்தில் முஸ்லிம் சமூகத்தின் கண்ணீர்க் கதையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சொல்லி இருந்தோம். சிலரது பெயர்களைச் சொல்லி அவர்களை நாம் வம்புக்கு இழுத்துப் பார்த்தாலும் அவர்கள் செவிடன் காதில் இவர்கள் சங்கூதுகின்றார்கள் என்று, ஒரு வேளை எங்களை நினைக்கின்றார்கள் போலும். 

சரி எறும்பூரக் கல்லும் கரையும் என்றொரு கதையும் இருக்கின்றதே அப்படியாவது எதுவும் நடக்கும் என்ற நம்பிக்கையில் நமது அரசியல்வாதிகளின் பாம்புக்குத்; தலையும் மீனுக்கு வாலும் என்ற தொடர் நாடகத்திற்கு ஒரு சின்ன விமர்சனத்தை இந்த வாரம் எழுதிப் போடலாம் என்று தோன்றுகின்றது! கடந்த பொதுத் தேர்தல் காலங்களில் கிராமங்கள் ஒழுங்கைள் வழியே நமது அரசியல்வாதிகளின் பாசம் சமூகத்தின் மீது  பீரீட்டுப் பாய்ந்ததைப் பார்த்தோம். மக்களுக்கு அதைத்தருகின்றோம் இதைத் தருகின்றோம் என்று சந்தை வியாபாரிகளைவிட கேவலமாக இவர்கள் கூவித்திரிந்ததையும் நாம் பார்த்தோம். மன்னிப்புக்ளைக் கேட்டு ஒப்பாறி வைத்ததையும், தமது வெற்றிக்காக அன்னிய சமூகத்து உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு போத்தல் பட்டிகளைப் போட்டு வாக்குச்சரிவை சீர் செய்ய மேற் கொண்ட முயற்சிகளையும் கண்டோம்.

இன்று அனேகமாக இவர்கள் எல்லோரும் தமது கொழும்பு முகாங்களுக்குத் திரும்பி விட்டார்கள். இப்போது அவர்களுக்கு எல்லாம் தியவன்னா ஓயா சுகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. விழாக்கள் வைபவங்கள் என்றால் அவ்வப்போது இவர்களை கொழும்புக்கு வெளியே பார்க்கலாம். சமூக உரிமை வாக்குறுதிகள் எல்லாம் இப்போது அவர்களின் அகராதியில் தொலைந்து போன பக்கங்கள். அவை மீண்டும் ஒரு தேர்தலில் இவர்கள் மீட்டிப் பார்ப்பார்கள் அதையும் நம்பி இந்த ஜனங்கள் இவர்களுக்கு கைதட்டிக் கொண்டிருக்கும். அப்போதெல்லாம் இவர்களைச் சுற்றிப் பணத்துக்கு விலைக்கு வாங்கப்பட்ட ஒரு கோஷ்டி கூலிக்கு மாறடித்துக் கொண்டிருக்கும்.  

எல்லை நிர்னயம் புதுக் கதை

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக முஸ்லிம் சமூகத்தின் சார்பில் நமது அரசியல்வாதிகள் உறுப்படியான எதையுமே செய்ய வில்லை என்பதைவிட ஒட்டுமொத்தமாக இந்த விடயத்தை இவர்கள் திரும்பிக் கூடப்பார்க்கவில்லை என்பது இதில் ஆர்வமுள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும்.  இன்னும் இது விடயத்தில் மாற்றங்களுக்கு இடமிருக்கின்றது என்று சொல்லப்படுவதால் எதையாவது பண்ணலாம் என்ற எதிர்பார்ப்பில் இந்தக் கட்டுரையை எழுதுகின்றவன் உள்ளுராட்சி அமைச்சில் இவனுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்ட எல்லை வகுப்புத் தொடர்பாக வர்த்தமானி முதலாம் பாகத்தை பெற்றுக் கொள்ள அமைச்சுக்குச் சென்று இணைப்பாளரைக் கடந்த புதன் 24.02.2016  சந்தித்து சில மணிநேரம் அங்கு காத்திருந்தபோதும் வைத்திருப்பதாகச் சொல்லப்பட்ட வார்த்தமானி அறிவித்தலை இப்போது தேடிப்பார்க்க வேண்டும் என்று நூற்றக்கணக்கான கிலோமீற்றர்கள் போனவனுக்கு பதில் கொடுக்கப்பட்டது. இதனை ஆரம்பத்திலே சொல்லி இருக்கலாமே.

பொறுப்பான அமைச்சரும் இந்த விடயத்தைப் பெரிதாகக் குழப்ப வேண்டாம் இதனை அவசரமாக முடித்துத் தேர்தலுக்குப் போக வேண்டும் என்று ஆலோசனை சொல்லிக் கொண்டிருக்கின்றார். என்று நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது. எனவே வேலியே பயிரை மேய்வதை நமது சமூகம் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருப்பதை விட அதற்கு மேல் எதுவும் பண்ண முடியாது என்ற நிலை.

நாடுபூராவிலும் களமிறங்கக் காத்திருக்கும் வன்னியத் தளபதியும் இந்த விடயத்தில் எதுவுமே பார்க்கவில்லை பொறுப்பானவரைப்; போன்று இவரும் எல்லை விவகாரத்தில் வன்னிக்கு வெளியே சைபர் புள்ளி வாங்கி இருக்கின்றார். முஸ்லிம்கள் தரப்பில் எல்லை நிர்னயம் இப்போது ஜனாசா நிலை. எனவே அதற்காகப் பண்ண வேண்டிய வேலைகளை இப்போது சமூகம் பார்க்கலாம். இது நமது அரசியல் தலைமைகள் சமூகத்திற்கு சமகாலத்தில் தந்த ஒரு பரிசு! தமிழ் தரப்புக்களும் மலையக அரசியல்வாதிகளும் பகிரங்கமாக இது விடயத்தில் தாம் முன்வைத்த  கோரிக்கைகளை ஊடகங்களுக்கு வழங்கி இருந்தார்கள் என்பதைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.  

உத்தேச அரசியல் யாப்பு

உத்தேச அரசியல் யாப்புத்  தொடர்பில் தமிழ் மக்கள் சார்பில் கூட்டமைப்பு சம்பந்தரும் வடக்கு முதல்வரும் ஏட்டிக்குப் போட்டியாக கோரிக்கைகளை முன்வைத்தாலும் அவை அனைத்தும் சமாந்திரமானவை, மலையக மக்கள் சார்பில் அனைத்து அரசியல் தலைமைகளும் ஒன்றிணைந்து அவர்களது ஆய்வகம் ஊடாக ஏகமனதாக ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கின்றது. அவற்றையும் அவர்கள் ஊடகங்களுக்கும் அனுப்பிவைத்திருக்கின்றார்கள்.

சமூகத்தின் உரிமைகளுக்காக-அரசியல் பண்ணுகின்றவர்கள் என்று கூறுகின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் இந்த யாப்பு விடயத்தில் பார்த்த பணிகள் என்ன? அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்காக முன்வைத்த கோரிக்கைகள் என்ன? என்று நாங்கள் கேட்கின்றோம். நாங்கள் அறிந்த மட்டில் இது எவராவது பார்க்க வேண்டிய வேலை நீங்கள் எதையாவது கேளுங்கள் நீங்கள் கேட்டது சரி என்று பந்தை அடுத்தவன் கையில் கொடுத்து இது விடயத்திலும் இவர்கள் நாடகம் ஆடுகின்றார்கள். எனவே இந்த விடயத்திலும் அவர்கள் சமூகத்திற்காக எதையும் பண்ணவில்லை என்றால் சமூகத்தின் பேரில்  எதற்காக நமக்கு கட்சிகள் சங்கங்கள்?

சில நேரங்களில் நமது தலைமைகள் முஸ்லிம்களின் உரிமைகள் பெற தமிழ் தரப்புக்களுடன் பேச வேண்டு சேரவேண்டும் என்று கூறுகின்றார்கள் - பேசுகின்றார்கள். மறுபுறத்தில் தனியலகு முஸ்லிம் உரிமைகள் என்று கேட்டு அடம் பிடித்தால் தெற்கிலிருந்து தான் எப்படி அரசியல் பண்ணுவது -பாராளுமன்றம் போவது என்று  யோசிப்பதால், வடக்குக் கிழக்கிற்கு ஒரு முகத்தையும் தெற்கிற்கு மற்றுமொரு முகத்தையும் இவர்கள் காட்டிக் கொண்டிருக்கின்றர்கள். எனவேதான் தலையும், வாலும் நாடகத்தை சமூகம் இன்று பார்த்துக் கொண்டிருக்கின்றது.

இப்போதுதான் வேலை நடக்குது-ரிஷாட்!

உள்ளுராட்சி மன்ற எல்லைகள் தொடர்பான வேலைகள் 2010ல் துவங்கி.... கடந்த சில வாரங்களுக்கு முன்னர்வரை அது பற்றிய ஆலோசனைகளைத் தரும்படி கேட்டிருந்தது. அதே போன்று யாப்புத் தொடர்பான ஆலோசனைக்கான காலக்கெடுவும் சில தினங்களுக்கு முன்னர் முடிந்திருக்கின்றது. 

ஏனைய சிறுபான்மை சமூகங்கள் அவற்றை உரிய காலத்துக்குள் சமர்ப்;பித்து விட்டன. ஆனால் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை (04.03.2016) அரசு சார்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நாங்கள் இவற்றை இப்போதுதான் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம் என்று கூறினார் அமைச்சர் ரிஷாட்.! 

முஸ்லிம் அரசியல்வாதிகள் இது விடயத்தில் எதையும் பண்ணவில்லை என்ற குற்றச்சாட்டுப்பற்றி நெறியாளர் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில் இது! எப்படி இருக்கின்றது சமூகம் தொடர்பான நமது தலைமைகளின் அக்கரை? ஆனால் மு.கா. இன்னும் இப்படியாவது ஒரு பதில் சொல்ல வில்லை! ஒரு வேலை எல்லாம் நடந்த பின்னர் பேசுவார்கள் போலும்.

பலம் வாய்ந்த சிவில் அமைப்பொன்றின் தேவை

இந்தப் பின்னணியில் முஸ்லிம் சமூகத்திற்கு நிகழ்கின்ற சேதங்களைக் குறைப்பதற்கு அந்த சமூகத்திலிருந்து பலம் வாய்ந்த ஒரு சிவில் அமைப்பு பிறப்பெடுக்;க வேண்டி இருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் கிழக்கில் ஒருவிதமாகவும், வடக்கில் மற்றொருவிதமாகவும் தெற்கில் வேறுவிதமாகவும் அமைந்திருக்கலாம். அது எப்படி இருந்தாலும் இந்தப் பிரச்சினை ஒரு இடத்தில் ஆளுமையுள்ள ஒரு அமைப்பால் (தலைமைத்துவத்தால்) கையாளப்பட வேண்டும். இப்படி உருவாக்கப்படுகின்ற சிவில அமைப்பு முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கை விஞ்சியவிதத்தில் தீர்மானங்களை எடுக்கக் கூடியவிதமாக வடிவமைக்கப்பட வேண்டும்.

சக்தி மிக்க சிவில் அமைப்பொன்றை முஸ்லிம் மக்கள் மத்தியிலிருந்து எப்படிக் கட்டி எழுப்புவது என்பது பற்றி  உலமாக்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், இணையத்தளங்களை நடத்துகின்றவர்கள் முதலில் சிந்திக்க வேண்டும். 

அத்துடன் இப்போது முஸ்லிம் சமூகத்தின் சார்பில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற வெகுஜன இயக்கங்கள் தம்மை சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டியதும் காலத்தின் தேவை. 

இதற்கான காரணங்களை மற்றுமொரு சந்தர்ப்பத்தில் பேசலாம் என்று எதிர்பார்க்கின்றேம். அத்துடன்  பலம்வாய்ந்த வெகுஜன இயக்கமொன்றை எப்படித் தோற்றுவிக்க முடியும் என்பது பற்றி சந்தர்ப்பம் கிடைத்தால் அடுத்தவாரம் இந்தப் பக்கத்தில் பேசலாம் என்பது கட்டுரையாளன் எதிர்பார்ப்பு.

No comments

Powered by Blogger.