முக்கோண போதைப் பொருள் வலையமைப்பு - முக்கிய புள்ளிகள் கைது
(எம்.எப்.எம்.பஸீர்)
தெற்காசியாவின் இலங்கை, மாலைதீவு மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே இடம்பெற்று வந்த முக்கோண போதைப் பொருள் வலையமைப்பொன்றின் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட ஏழு பேரை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்துக்கு வெளியே வைத்து நேற்று 3 கிலோவுக்கும் மேற்பட்ட ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட யுவதி ஒருவர் உள்ளிட்ட நான்கு மாலைத் தீவு பிரஜைகளை தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தியதில் இந்த முகோண வலையமைப்பின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் இலங்கையர் உள்ளிட்ட மேலும் மூவரை கைது செய்ய முடிந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நீண்ட நாட்களாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு முன்னெடுத்த விசாரணைகளிலேயே குறித்த முகோண வலையமைப்பின் உறுப்பினர்களை கைது செய்ய முடிந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.
நேற்று கைப்பற்றப்பட்ட போதைப் பொருளானது பாகிஸ்தானிலிருந்து மாலைத் தீவுக்கும் அங்கிருந்து இலங்கைக்குள்ளும் கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். வெல்லம்பிட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஹெரோயின் தொகை சிறு அலகுகளாக பிரிக்கப்ப்ட்டு விர்பனைச் செய்யப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment