நடுவானில் வபாத்தான விமானி
சவுதி அரேபியாவில் பறக்கும் விமானத்தில் வைத்து விமானி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
சவுதி அரேபியாவின் பிஷா விமான நிலையத்தில் இருந்து 220 பயணிகளுடன் புறப்பட்டு சென்றுள்ளது இந்த விமானம்.
ஜெத்தா நோக்கி சென்றுள்ள இந்த விமானத்தின் முக்கிய விமானிக்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து திடீரென்று நிலைகுலைந்த அந்த விமானி அவரது இருக்கையிலேயே திடீரென்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
விமானி உயிரிழந்த சம்பவம் அறிந்ததும் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட துணை விமானி நடந்த நிகழ்வினை விவரித்துள்ளார்.
இதனிடையே விமானி உயிரிழந்துள்ள சம்பவம் பயணிகளுக்கு தெரிய வரவே, பயணிகள் பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பயணிகளில் சிலர் அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி செயல்பட்ட துணை விமானி,
ஜெத்தா விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார். விமான நிலையத்தில் தயார் நிலையில் நின்றிருந்த மருத்துவ குழுவினர் உயிரிழந்த விமானியின் உடலை கைப்பற்றியுள்ளனர்.
துணை விமானியின் துணிச்சல் மிகுந்த செயல்பாடுகள்தான் பயணிகளின் அச்சத்தை போக்கி விமானத்தை பத்திரமாக தரையிறங்க காரணம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment