காலை வாரினார் கோத்தா
அதிபர் தேர்தல் பரப்புரைகளில், ரக்ன லங்கா பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இதற்கு அந்த நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகளே பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பரப்புரைக்கு, பாதுகாப்பு அமைச்சின் துணை நிறுவனமான ரக்ன லங்கா பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பாரிய மோசடிகள் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது, ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவன பணியாளர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தப்படவில்லை என்று அதன் முகாமையாளராக இருந்த மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர வாக்குமூலம் அளித்திருந்தார்.
எனினும், ஆணைக்குழு முன் சாட்சியமளித்த ரக்னலங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் கணக்காளர், தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தப்பட்ட ரக்ன லங்கா பணியாளர்களுக்கு ஏற்பட்ட செலவினங்கள் தொடர்பான விபரங்களைத் தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து, மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர, தவறான தகவல்களை வழங்கியதற்காக ஆணைக்குழுவிடம் மன்னிப்புக் கோரியதுடன், கோத்தாபய ராஜபக்ச மீதுள்ள பற்றினால் தான் அவரைக் காப்பாற்றுவதற்காக பொய்ச்சாட்சியம் அளித்ததாக கூறியிருந்தார்.
அதேவேளை, அதிபர் தேர்தல் பரப்புரையில், ரக்ன லங்கா பணியாளர்களை ஈடுபடுத்தியதற்கு அந்த நிறுவனத்தின் முன்னைய அதிகாரிகளே பொறுப்பு என்று, காலை வாரி விட்டுள்ளார் கோத்தாபய ராஜபக்ச.
நேற்றுமுன்தினம், பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு, கோத்தாபய ராஜபக்சவிடம் விசாரணைகளை நடத்தியிருந்தது.
மேல்நீதிமன்ற நீதிபதி கிஹன் குலதுங்க நடத்திய விசாரணையில் சாட்சியமளித்த கோத்தாபய ராஜபக்ச, ரக்ன லங்கா நிறுவனம் ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை என்று தெரிவித்தார்.
அப்போது அதிபர் தேர்தல் பரப்புரைகளில் ரக்னலங்கா பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதற்கு சாட்சியங்கள் உள்ளன, இது ஊழல் இல்லையா என்று நீதிபதி கிஹன் குலதுங்க கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த கோத்தாபய ராஜபக்ச, இதற்கு ரக்னலங்கா நிறுவனத்தின் முன்னைய உயர் அதிகாரிகளே பொறுப்பு என்று பதிலளித்துள்ளார்.
Post a Comment