முஸ்லிம் பிரதேசங்களில் ஹபாயாவுடன், நடமாடிய மோசடிப் பெண் கைது
சீட்டுப் பிடிப்பதாகவும் சுய தொழில் வாய்ப்புக்கு வங்கி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கிளிடமிருந்து பணமும் பொருட்களும் பெற்றுத் தருவதாக பெண்களை நம்ப வைத்து அவர்களிடமிருந்து பல இலட்ச ரூபாய் பணத்தையும் தங்க நகை மற்றும் பெறுமதியான வேறு பொருட்களையும் ஏமாற்றிப் பெற்று வந்த மோசடிப் பெண் கைது செய்யப்பட்டிருப்பதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம், காளிகோயில் வீதியைச் சேர்ந்த 46 வயதான குடும்பப் பெண் ஒருவரே இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 4 மாதங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தலைமறைவாகியிருந்த நிலையில் (08-03-2016) அதிகாலை பொலொன்னறுவை மாவட்டம் மினுவாங்கொட பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த போது, குறித்த பெண், பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இப்பெண்மணி ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி, பெரியகல்லாறு, எருவில், நீலாவணை, குறுமண்வெளி, ஏறாவூர் போன்ற பகுதிகளிலுள்ள கணவனை இழந்த பெண்களிடம் சாமர்த்தியமாகப் பேசி தன்னை நம்பிக்கையானவள் என காட்டிக்கொண்டு பணத்தையும் தங்க நகைகளையும் இன்னும் பல பெறுமதியான பொருட்களைப் பெற்றுள்ளதாக, களுவாஞ்சிக்குடி உட்பட இன்னும் பல பொலிஸ் நிலையங்களில் இப்பெண்ணுக்கு எதிராக ஏற்கனவே பல முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், கணவனை இழந்தவர் எனத் தெரிவித்து, பெண்கள் சார்பாக இயங்கும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஊடாக பணம் பெற்று வந்துள்ளதாகவும், சீட்டுப் பிடித்தல் என்ற போர்வையில் பல்வேறு ஊர்களிலும் மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் இவர் முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயாவுடன் நடமாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெண்ணின் மோசடி பற்றி செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கமைவாக கைது செய்யப்பட்டுள்ள பெண்ணிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment