Header Ads



பேஸ்புக் மூலம் பெண்களுடன் தொடர்புகளைப் பேணி, நகைகளை அபகரித்தவர் கைது

பேஸ்புக் மூலம் பெண்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களிடம் காதல் வலைவீசி நகைகளை அபகரித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்  வவுனியா பொலிஸாரால் கைது  செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியாவில் உள்ள பெண் ஒருவருடன் பேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்தி தன்னை ஒரு பணக்காரனாக காட்டி அந்த பெண்ணைக் காதலிப்பதாக கூறி தனிமையில் அழைத்து நகைகளை அபகரிக்க முற்பட்ட வேளை குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த 32 வயதுடைய குறித்த நபர் தன்னை ஒரு அரசியல்வாதியின் மகனாகவும், கோடீஸ்வரனாகவும் பேஸ்புக்கில் வெளிப்படுத்தி பல பெண்களுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். இதனை நம்பி வவுனியாவைச் சேர்ந்த யவதி ஒருவர் அண்மையில் யாழ்ப்பாணம் சென்று குறித்த இளைஞனை சந்தித்த போது அந்த யுவதியிடம் இருந்த நகைகளை புதிதாக்குவதாக ஆசைவார்த்தைகளை கூறி நகைகளை அபகரித்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மற்றொரு யுவதியை ஏமாற்றி நகைகள் திருடுவதற்காக வவுனியாவுக்கு வந்த வேளையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து, அபகரிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுகிறது.

இதேவேளை,நெல் கொள்வனவு செய்து வரும் தனியார்களிடம் கூடுதலான விலைக்கு நெல்லினை கொள்வனவு செய்வதாக கூறி மில் உரிமையாளர்களிடம் அழைத்துச் சென்று அவற்றை இறக்கிவிட்டு மில் உரிமையாளர்களிடம் குறைந்த விலையில் பணத்தை பெற்றுக் கொண்டு அவற்றை நெல்லினை கொண்டு வந்தவர்களுக்கு கொடுக்காது தலைமறைவாகியுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

குறித்த நபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, சந்தேக நபர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments

Powered by Blogger.