கிழக்கில் முஸ்லிம், அமைப்புகள் ஒன்றிணைவு - முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றம்
கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புகளின் சம்மேளனம் எனும் பெயரில் புதிய அமைப்பு ஒன்றினை அங்குரார்ப்பணம் செய்தன.
காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்டே இவ் அமைப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் மாநாட்டு மண்டபத்தில் அதன் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிய சம்மேளனத்தின் தலைவராக அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர் எம் நதீர் மௌலவியும், செயலாளராக மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.இஸ்மாயிலும், பொருளாளராக திருமலை மாவட்டத்தை சேர்ந்த எம்.ஏ.ஜீ.எம் சாபிர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் உப தலைவர்களாக திருமலை மாவட்டத்தின் கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம். ஹிதாயத்துல்லாஹ் (நளீமி) மற்றும் மட்டக்களப்பு ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் எம்.எல்.ஏ. லெத்தீப் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டதுடன் சட்டத்தரணி ஏ.எல்.ஏ. ஜவாத், எம்.கபூர் ஆகியோரை போசகர்களாக கொண்ட 15பேர் கொண்ட நிருவாக சபையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் ஏனைய கட்சிகளின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்நாட்டு, வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் சந்தித்து முஸ்லிம்களின் காணி தொடர்பாகவும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் புதிய யாப்பு விடயங்கள் தொடர்பாக பேசுவதெனவும் புதிய யாப்பில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்களாக 13 விடயங்களை தமது அமைப்பின் ஊடாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. இதன்போது இங்கு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. இலங்கை ஒற்றையாட்சி நாடாக இருக்கவேண்டும்
2. ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறக்கூடியவராகவும் மக்களால் தெரிவு செய்யப்படக்கூடியவராகவும் இருக்கவேண்டும். சிறுபான்மையில் இருந்து இரண்டு உப ஜனாதிபதிகள் உருவாக்கப்படல்வேண்டும்.
3. சிங்களம் தமிழ் என்பவை தேசிய மொழியாகவும் ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் இருக்கவேண்டும்.
4. எதிர்காலத்தில் அரச காணிகள் பகிர்வில் முஸ்லிம்களுக்குரிய மாவட்ட இன விகிதாசாரம் பேணப்படல் வேண்டும்..
5. அரசியல் யாப்பு நீதிமன்றம் உருவாக்கப்படல் வேண்டும்.
6. பாராளுமன்றத்தில் இரண்டு சபைகள் இருக்கவேண்டும்.
7. எல்லா நிலைகளிலும் முஸ்லிம் இனத்தின் தனித்துவமான இன அடையாளம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
8. அரச நியமனத்தின்போது எந்தெந்த மட்டங்களில் நியமனம் வழங்கப்படுகின்றதோ அந்தந்த மட்டங்களினான இன விகிதாசாரம் பேணப்படல வேண்டும்.
9. மாகாணங்கள் தனித்தனியாக இருக்க வேண்டும்.
10. மாகாணங்களுக்குரிய பூரண அதிகாரம் வழங்கப்படல் வேண்டும்
11. மாகாண ஆளுநர்களுக்குரிய அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்படல் வேண்டும்.
12. உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்படல் வேண்டும்.
13. தற்போது காணப்படும் விகிதாசார தேர்தல் முறையே சிறந்தது. இதில் மாற்றங்கள் ஏற்படும் போது சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தேர்தல் முறை அமைதல் வேண்டும்.
-எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்-
Subhanallah.
ReplyDeleteGood move
ReplyDeleteஇது எல்லாவற்றுக்கும் முதல் கிழக்கை அசிங்கப் படுத்தும் சீதனக் கொடுமையை ஒழியுங்கள்! நூற்றுக் கணக்கான குமருகள் வாழ்வதா சாகுவதா என்றிருக்கிறாராகள்! உங்களுக்கு அரசியல் கொணடாட்டம்!
ReplyDelete