Header Ads



முகநூல் இங்கு, மோகநூல் ஆனதால்..?

-MOHAMED NIZOUS-

முக நூல் இங்கு
மோக நூல் ஆனதால்
அல் குர்ஆன் எனும்
அக நூல் இன்று
ஆகா நூல் ஆகி
அலுமாரியில் தூங்குகிறது.

இன்னும்
எறியவில்லை
யாராவது இறந்தால்
எடுத்தோத தேவைப் படும்.

பள்ளிக் கூடத்தில்
பாடம் ஆக்கிய
பாத்திஹா சூறாவும்
பக்கத்து சூறாவும்
ஆத்திர அவசரத்தில்
அரை குறையாய் ஓதி
புர்க்கான் இன்னும்
மறக்காமல் இருக்கிறது.

குர் ஆன் வசனத்தை
கூகிள் சேர்ச்சில்
இரவிரவாக
எத்தனை ஆராய்ச்சி?
அடுத்த இயக்கத்துக்கு
ஆப்பு வைப்பதற்காய்!

கால் நீட்டிப் படுக்காமல்
கண்ணியம் கொடுக்கிறோம்-குர்ஆனின்
தாள் விழுந்து கிடந்தால்
தவித்து எடுக்கிறோம்-ஆனால்
வாழ்க்கையில் குர்ஆனின்
வசனங்கள் தூசடித்து
பாழ் பட்டுப் போவதைப்
பாராது இருக்கின்றோம்.

காபிர் குர் ஆனை
கண்ட படி விமர்சித்தால்
கோபம் கொண்டு
கொதிக்கின்றோம்
குதிக்கின்றோம்.
சொந்தக் குடும்பத்தில்
இந்த இறை வேதம்
சிந்தனையில் நழுவியதற்காய்
சினந்து எழுந்தோமா?

ஒரு நாளில் ஒரு பொழுதில்
ஒரு வசனம் என்றாலும்
சிந்தனையால் லைக் செய்வோம்
சொந்த வாழ்வில் செயார் செய்வோம்
இந்த முக நூலும்
இன்னுமுள்ள ஜாலிகளும்
அந்த மாமறையை
அவ மதிக்காதிருக்கட்டும்.

No comments

Powered by Blogger.