Header Ads



"ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள், அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும்"

-யு.எல்.எம். றியாஸ்-


ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்: அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரம்



ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற  அடிப்படையில் மோட்டார் சைக்கிள்
வழங்கப்படுமென்று தெரிவித்த அரசாங்கம், தற்போது ஊடகவிலாளர்களுக்கு சலுகை அடிப்படையில் கடன் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அரசாங்கம் இதனை மீள்பரிசீலனை செய்து தீர்வையற்ற அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரம்  (Ampara  District Journalists' Forum) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த அரசாங்கம் சமூர்த்தி போன்ற அரச உத்தியோகத்தர்களுக்கும், உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கும் தீர்வையற்ற அடிப்படையில்
மோட்டார் சைக்கிள்களை வழங்கியது. இதற்கமைவாக அவர்கள் ரூபா 50ஆயிரத்தைச் செலுத்தி மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொண்டார்கள். இதே போன்று ஊடகவியலாளர்களுக்கும் தீர்வையற்ற அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கப்படுமென்று இன்றைய அரசாங்கம் உறுதியளித்தது.

ஆனால், தற்போது ஊடகவியலாளர்கள் சலுகை அடிப்படையில் அரச வங்கிகளில் கடனைப் பெற்று மோட்டார் சைக்கிள் வாங்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது. இதற்கமைவாக தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அக்கடிதத்தில் ஊடகவியலாளர் ஒருவர் அரச வங்கிகளில் ரூபா 02 இலட்சத்து 50 ஆயிரம் வரை சலுகை அடிப்படையில் கடனைப் பெற்று மோட்டார் சைக்கிள் வாங்குவதற்குரிய கடன் ஏற்பாட்டை
செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்பிரகாரம் மோட்டார் சைக்கிள் கொள்வனவுக்காக வங்கிகளில் பெற்றுக் கொள்ளும் கடனுக்கு 09வீத வட்டியை செலுத்த வேண்டும். இதில் 07வீதத்தை அரசாங்கமும், 02வீதத்தை கடன் பெற்றுக் கொள்கின்ற ஊடகவியலாளர் செலுத்த வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்நடவடிக்கை ஊடகவியலாளர்களை கடனாளியாக்கும் ஒரு நடவடிக்கையாக அமைந்துள்ளது. அத்தோடு ஊடகவியலாளர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளதாகவும் இருக்கின்றது. ஆதலால், அரசாங்கம் வாக்குறுதி அளித்தவாறு அரசாங்க உத்தியோகத்தர்களைப் போன்று சலுகை அடிப்படையில் மோட்டார் வாங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.

No comments

Powered by Blogger.