Header Ads



ஈரான் மக்கள், சரியான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர் - ஹஸன் ரெளஹானி

"தேர்தலில் மிதவாதிகளுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் ஈரான் மக்கள் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்' என ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி கூறியுள்ளார்.

 தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

மக்களே ஈரானின் மன்னர்கள். அவர்கள் கூறும் பாதையில்தான் தேசம் நடைபோடும். அந்த வகையில், உலகத்துடனான மோதல் போக்கைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான பாதையை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றார் அவர்.

 ஈரான் அணு ஆயுத பலம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய மேற்கத்திய நாடுகள், ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன.

 இதனால் வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.

 பல ஆண்டுகளாக நீடித்து வந்த பொருளாதாரத் தடையால் ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
 இந்தச் சூழலில், அந்த நாட்டில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மிதவாதியான ஹஸன் ரெளஹானி அமோக வெற்றி பெற்று அதிபர் ஆனார்.

 அதனைத் தொடர்ந்து, தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்காக மேற்கத்திய நாடுகளுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அவரது முயற்சியின் பலனாக, தங்களது அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்காக இல்லை என்பதை ஈரான் உறுதிப்படுத்தவும், அதற்குப் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை வல்லரசு நாடுகள் விலக்கிக் கொள்ளவும் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூலை மாதம் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

 இந்த ஒப்பந்தத்துக்கும், ரெளஹானி வரவேற்றுள்ள அன்னிய முதலீடுகள் உள்ளிட்ட சீர்திருத்தங்களுக்கும் ஈரானின் மதவாதக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

 இந்த நிலையில், ஈரான் நாடாளுமன்றத் தேர்தலும், அந்த நாட்டின் சக்தி வாய்ந்த தலைமை மத குருவைக் கண்காணிக்கும் மத குருக்களின் அவைக்கான தேர்தலும் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றன. 88 உறுப்பினர்களைக் கொண்ட மத குருக்களின் அவைக்கான தேர்தலில், அதிபர் ஹஸன் ரெளஹானி, முன்னாள் அதிபர் அக்பர் ரஃப்ஸஞ்சானி உள்ளிட்ட மிதவாதக் கூட்டணியைச் சேர்ந்த 50 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

 நாடாளுமன்றத் தேர்தலிலும் மிதவாதக் கட்சிக் கூட்டணியிரே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 290 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பழமைவாதிகளுக்கு 103 இடங்களும், சீர்திருத்தவாதிகள் மற்றும் மிதவாதிகள் 95 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

 69 தொகுதிகளில் எவரும் போதிய வாக்குகளைப் பெறாததால், அந்தத் தொகுதிகளில் அடுத்த மாதம் மறு தேர்தல் நடைபெறும்.

 தற்போதுள்ள நிலையில் நாடாளுமன்றம் அமைப்பதற்குரிய தனிப் பெரும்பான்மையை எந்தக் கட்சியும் பெறவில்லை என்றாலும், அதற்குரிய பெரும்பான்மை பலத்தை அதிபர் ரெளஹானியால் திரட்ட முடியும் எனக் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.