மஹிந்தருக்கு ஒன்றை மட்டுமே சொல்லமுடியும், அதுதான் “காலத்தின் விதி”
இனவாதச் சக்தி ஒருபுறம் அரசு மீது வசைபாடிக்கொண்டு மறுபுறம், மஹிந்த பரம்பரையின் துரோகச் செயல்களை மூடி மறைத்து அவருக்காகவும் குடும்பத்துக்காகவும் ஊர் ஊராய்ப் போய் ஒப்பாரி வைக்கின்றனர். இந்த பம்மாத்து வேலைகளுக்கும், திரைமறைவு நாடகங்களுக்கும் நாட்டு மக்கள் ஏமாறப் போவதில்லை.
நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அச்சுறுத்தல் ஏற்பட அரசு இடமளிக்காது எனவும் இராணுவத்தை இலக்குவைக்கும் எச்செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் எண்ணம் கிடையாது எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்திருக்கும் அதேவேளை தமிழினத்தின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதும் வடக்கில் ஜனநாயக செயற்பாடுகளை மேலோங்கச் செய்வதையும் பிரிவினைவாதமாக நோக்கக்கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்னிலங்கை இனவாத அரசியல் சக்திகள் எப்போதும் வடக்கையும் தமிழ் பேசும் மக்களையும் மாற்றுக் கண்கொண்டே பார்த்து வருகின்றன. இந்த இனவாதச் சக்திகளுக்கு துணைபோகும் அரசியல் இன்று இனவாதத்தை தமக்கான தாரக மந்திரமாகவே கொண்டுள்ளன. 30 வருடத்துக்கும் மேலான கசப்பான சம்பவங்களால் நாடு எதிர்கொண்ட பேரழிவு குறித்து இந்த இனவாதச் சக்திகள் சிந்திப்பதாகவே தெரியவில்லை.
முழுநாடும் அழிந்து நாசமாகிப் போனாலும் பரவாயில்லை சிறுபான்மை தமிழ், முஸ்லிம்கள் இந்த நாட்டில் தலையெடுக்க இடமளிக்காத வகையிலான சிந்தனைப் போக்கையே இந்த இனவாதச் சக்திகள் கொண்டிருக்கின்றன. கடந்த வருடம் ஜனவரி 8க்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சி இந்த இனவாதிகளுக்கும், ஒட்டுமொத்த நாட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் கடுப்பேற்றி இருப்பதே இந்த தவறான சிந்தனைப் போக்குக்கான காரணியாகும்.
இந்தச் செயற்பாடுகளில் காணப்படும் மற்றொரு புதுமை என்னவென்றால் இதுவரை காலமும் சிவப்புச் சட்டைக்குள் தாங்கள் இடதுசாரிகள், பாட்டாளி வர்க்கத்தின் கூட்டாளிகள் என்று வாய்கிழியக் கத்திய சிலரின் போலித்தனங்கள் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளன. மஹிந்தவின் காலத்தில் மொழித்துறைக்கான அமைச்சராக இருந்த வாசுதேவ ஐயா அவர்கள், இதுவரை காலமும் நுணிநாக்கில் தேனுடன் செயற்பட்டவர். ஆனால் அவரது சமீபகாலத்திய செயற்பாடுகள் அவர் யார் என்பதை வெளிக்காட்டியுள்ளன.
அண்மைக்காலமாக மஹிந்த ஐயாவின் அத்தியந்தக் கூட்டாளிகள் சிலர் உள்ளகப்பொறிமுறை மூலம் நாட்டின் இராணுவத்தையே இலக்கு வைத்து அரசு செயற்படுவதாகவும் சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலில் இதுவும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் நாட்டு மக்கள் மத்தியில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
மஹிந்த தரப்பாரின் எந்தப் பேச்சும், சபையேறாத நிலையிலும் கூட அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்ற எண்ணப்போக்கில் நல்லாட்சி அரசுக்கு எதிரான சாக்கடைத்தன அரசியலை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர். இந்த காடைத்தன அரசியல் நடவடிக்கைகளை நாட்டு மக்கள் நம்பத்தயாராக இல்லை.
2015 ஜனவரிக்கு முன்னர் எமது மக்களிடம் காணப்பட்ட மன நிலை வேறு அதன் பின்னர் ஏற்பட்டிருக்கும் மனமாற்றம் வேறு. இன்னொரு தடவை ஓநாயின் வாயில் சிக்கிய ஆடுகளாக எமது மக்கள் மாறப்போவதில்லை.
இந்த இனவாதச் சக்திகளின் பச்சைப்பொய் வார்த்தைகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் காட்டமான சாட்டை அடியை கொடுத்திருக்கிறார்.
இராணுவம் இழைத்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றாலும் அது எந்தச் சந்தர்ப்பத்திலும் இராணுவத்தை இலக்கு வைத்த பொறிமுறையாக அமைய மாட்டாது. என அவர் சூடாகவே பதிலடி கொடுத்திருக்கிறார்.
தேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசு மிகவும் உன்னிப்பாகவும் பொறுப்புடனுமே இருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.
மறுபுறத்தில் தமிழ் மக்களது உரிமைகளை பெற்றுக்கொடுப்பதும், ஜனநாயகத்தை வடக்கில் உறுதிப்படுத்துவதும் இனவாதமாக பார்க்கக்கூடாது. அது ஒருபோதும் பிரிவினை வாதமல்ல. சிறுபான்மை சமூகங்களை தொடர்ந்து எம்மால் ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது. அவரவர் உரிமைகளை பெற்றுக்கொடுத்தே ஆக வேண்டும்.
நாம் சர்வாதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டோம். இப்போது ஜனநாயக ஆட்சி மலர்ந்துள்ளது. நாட்டின் அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நல்லிணக்க ஆட்சியை ஏற்படுத்தி சகல சமூகங்களையும் அரவணைத்துச் செல்கின்றோம். இதனைச் சீர்குலைக்க எந்தச் சக்திக்கும் இடமளிக்கப்படமாட்டாது எனவும் அவர் சூளுரைத்திருப்பதன் மூலம் இனவாதச் சக்திகளின் மூக்குடைபட்டிருப்பதையே காட்டுகின்றது.
இனவாதச் சக்தி ஒருபுறம் அரசு மீது வசைபாடிக்கொண்டு “சர்வதேச கூட்டு” என்ற மாய வலையை வீசி மக்களை தம்பக்கம் இழுத்தெடுக்கும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. மறுபுறம், மஹிந்த பரம்பரையின் துரோகச் செயல்களை மூடி மறைத்து அவருக்காகவும் குடும்பத்துக்காகவும் ஊர் ஊராய்ப் போய் ஒப்பாரி வைக்கின்றனர். இந்த பம்மாத்து வேலைகளுக்கும், திரைமறைவு நாடகங்களுக்கும் நாட்டு மக்கள் ஏமாறப் போவதில்லை.
அந்தக் காலத்தில் நமது கிராமப்புறங்களில் இடம்பெற்ற தெருக்கூத்து நாடகங்களை இன்று நாடெங்கும் ஊர் ஊராக மஹிந்த நாடகக் கம்பனி அரங்கேற்றி வருகின்றது. விடிய விடிய நாடகம் நடத்தியவர்கள் விடிந்ததும் ஒருவரைக்கூட காணவில்லையே என்ற கடுப்பேற்றத்தில் பேசக்கூடாதவற்றைக் கூட பேசுகின்றனராம்.
மஹிந்தருக்கு ஒன்றை மட்டுமே சொல்ல முடியும். அதுதான் “காலத்தின் விதி” என்பது.
உண்மையாகவே பலமான அடிதான் இது பாராட்டப்பட வேண்டியவை.உண்மையாக அதுதான் இந்த நாட்டில் நடக்கிறது நாட்டை குழப்பி ஆட்சியை பிடிக்க தடமாரும் மகிந்த கூட்டம் ஒருக்காலும் வெற்றி பெற முடியாது.
ReplyDeleteWell done Ruwan ! Truly new era is emerging . We all wanted
ReplyDeleteSinhalese leaders to speak the truth honestly in public and
act accordingly . We are so pleased,that is happening . Now
is the best time , a historic moment to correct all wrongs
of all sides and defeat selfish , racist , reactionary and
destructive elements forever .