Header Ads



வேலை நடப்பதே எமக்குத் தேவை - மைத்திரிபால

ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு தாம் ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்  அதிபர் மைத்திரிபால சிறிசேன. ஹிக்கடுவவில் இன்று நடந்த முதலமைச்சர்களின் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”புதிய அரசியலமைப்பின் ஊடாக, மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதில் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது. மாகாணசபைகளை வலுப்படுத்துவதன் மூலம், மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

இந்த நவீன காலத்தில், அதிகாரங்களை எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், ஒரு பகுதியின் மீது கவனம் செலுத்தக் கூடாது என்று தான் நிபுணர்கள் கூறுகின்றனர். அதிகாரங்களைப் பகிருவதை எதிர்ப்பவர்கள், மாற்றங்களுக்கு ஏற்ப முன்னகராதவர்களாகவே இருப்பார்கள். அரசாங்கமும், மாகாணசபைகளும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டியது முக்கியம்.

நான் சுகாதார அமைச்சராக இருந்த போது மாகாண சுகாதார அமைச்சர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டேன். அவ்வாறு மாகாண சுகாதார அமைச்சர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டது பற்றி அப்போதைய அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் சிலர் என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

வேலை நடப்பதே எமக்குத் தேவையே தவிர அதிகாரத்தைக் கைக்குள் வைத்திருப்பது அல்ல என்று எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.