ஆட்சிக் கவிழ்ப்பு, ஒருபோதும் நனவாகாது - மைத்திரி திட்டவட்டம்
நேற்று ஞாயிற்றுக்கிழமை -27- இரவு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்குப் ஜனாதிபதி மைத்திரிபால பதிலளிக்கும் போது,
எமது அரசாங்கம், நிலையற்ற தன்மையில் இருக்கின்றது என்ற அவதூறை முன்வைப்பவர்கள், இந்நாட்டு மக்களுக்கு பெரும் துரோகத்தையே இழைக்கின்றனர். எமது அரசாங்கம், ஸ்திரத்தன்மையற்ற நிலையில் உள்ளது என்ற கருத்தைப் பரப்புவதன் மூலம், அரசாங்கத்துக்குச் சாதகமாக, சகல துறைகளிலும் கிடைத்துவரும் ஒத்துழைப்பை இல்லாதொழிக்கச்செய்வதே அவர்களது நோக்கமாகும்.
இந்நாட்டின் வாக்காளர்கள் ஆமோதித்து அனுமதி வழங்கியிருப்பதையே, கடந்த தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஐக்கிய தேசிய முன்னணிக்கு 106 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 95 ஆசனங்களையும் பெற்றுக் கொடுத்ததன் மூலம், இரு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சி செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டையே வாக்காளர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ஆகையால் தான், எந்தத் தரப்புக்கும் 113 ஆசனங்கள் கிடைக்காது போயிற்று.
அடுத்ததாக, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று, நான்கரை வருடங்கள் பூர்த்தியாகும் வரை, நாடாளுமன்றத் தேர்தல் நடாத்தும் வாய்ப்பு, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தினால் இல்லாது போயுள்ளது. ஆகவே, நாடாளுமன்றத்தை இன்று கலைக்கமுடியாது. நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டுமாயின், மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறப்பட வேண்டும். நாடாளுமன்றத்தைக் கலைக்கவேண்டும் என்ற தேவை, எவருக்கும் இல்லை என்பதே உண்மையாகும். நானும் பிரதமரும் இரு கட்சிகளும், மிகச் சிறந்த புரிந்துணர்வுடனேயே உள்ளோம்.
ஆகையால், அவர்கள் கூறிவருவதைப் போல் எவ்வித சூழ்ச்சிகளும் இல்லை என்பதை மிகத் தெளிவாக கூறவேண்டும். அதிகாரத்தை என்னிடம் தாருங்கள், என்னிடம் அதிகாரத்தைப் பெற்றுக்கொடுத்தால் ஒரு மணித்தியாலமும் மக்களை இருளில் இருக்கவிடமாட்டேன் என்றெல்லாம் கூறுகிறார்கள். மின்சாரம் போன்ற விடயங்கள், அரசியலுக்கு அப்பாற்பட்ட தொழில்நுட்ப நிபுணர்களால் இயங்கவைக்கப்படும் சுயாதீனமான நிறுவனங்களாகும். அரசாங்கம் ஸ்திரமற்றிருக்கின்றது எனக் கனவு காண்போரின் கனவானது, ஒரு போதும் நனவாகாது.
இங்கே பௌத்த பிக்குகள் பற்றி நீங்கள் எழுப்பிய வினாவைப் பார்ப்போம்.
சில பௌத்த பிக்குமார்கள், நீதிமன்றம் செல்ல நேர்ந்த போது அங்கே அவர்கள் நடந்துகொண்ட விதம் காரணமாக, அவர்களைக் கைதுசெய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டமைக்கு அரசாங்கமா குற்றவாளி? அடுத்ததாக, சட்டவிரோதமாக யானைகளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், பௌத்த பிக்கு உட்பட இன்னும் பலர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
காடுகளில் வாழ்ந்துவந்த இந்த யானைகளைத் திருடியவர்கள் யார்? அத்திருட்டுக்கு உதவியவர்கள் யார்? அதற்கு ஒத்துழைத்தவர்கள் யார்? அவற்றுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார்? வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் படி, வனவிலங்குகளை வேட்டையாடுதல், திருடுதல், சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருத்தல் ஆகிய அனைத்துமே குற்றமாகும்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் திகதி, சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதியாக நான் பதவியேற்ற நேரம் வரை, இந்த ஜனாதிபதி மாளிகையில் கூட இரண்டு யானைகள் இருந்தன. மூன்று மாதங்களுக்கு முன்னர் மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், தலைமைப் பிக்குமார்களை உள்வாங்கிய பிக்குமார்களையும் ஏனைய மதத் தலைவர்களையும் உள்ளடக்கிய ஆலோசகர் சபையொன்றையும் உருவாக்கியுள்ளோம்.
Post a Comment