Header Ads



"பரோட்டா" குறித்த எச்சரிக்கை

கொத்து, வீச்சு, சில்லி, ஆலு, கைமா, நெய், முட்டை... ரவுடிகளை விட அதிக அடைமொழிகள் பரோட்டாக்களுக்குத்தான் உண்டு. இழை இழையாகப் பிரிந்து வரும் நேர்த்தியோ, அல்லது குருமாவுடன் கூட்டணி சேரும் பக்குவமோ... ஏதோ ஒன்றால் இது சாப்பாட்டுப் பிரியர்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. விசிறி அடித்துத் தேய்க்கிறபோதே எச்சில் ஊற வைக்கிற இந்த பரோட்டாக்கள் சர்க்கரை நோய்க்குக் காரணமாகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று!

‘பரோட்டா என்ன அத்தனை ஆபத்தான உணவா?’ என்றால், கொஞ்சம் தயங்கினாலும் பின்பு ஆமோதிக்கவே செய்கிறார்கள் நிபுணர்கள். ‘‘பொதுவாவே நார்ச்சத்து இல்லாத எந்த உணவுப் பொருளும் உடம்புக்கு நல்லதில்ல. உணவுல இருக்கற நார்ச்சத்துதான் அதைச் சரியான நேரத்துல செரிக்கச் செய்யுது. செரிமானம் கரெக்டா நடந்தாதான் உடம்புக்கு எல்லா சத்துகளும் முறையா கிடைக்கும். உடலின் இயக்கமும் இயல்பா இருக்கும். 

கோதுமையில இருந்து நார்ச்சத்தையெல்லாம் பிரிச்ச பிறகு கிடைக்கற மைதாவுலதான் பரோட்டா தயாரிக்கப்படுது. ஆக, பரோட்டா சாப்பிட்டா செரிக்க லேட் ஆகும்ங்கிறது நிஜம். அதனால அடிக்கடி பரோட்டா சாப்பிடறதைக் கூடுமானவரை தவிர்க்கலாம்!’’ என்றார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சந்திரன்.

‘செரிமானப் பிரச்னை இருக்கட்டும். நேரடியாகவே சர்க்கரை நோய்க்கு பரோட்டாக்கள் காரணமாகுதுங்கிறதை மக்கள் புரிஞ்சுக்கணும்’ என்று பரோட்டாவைப் புரட்டிப் போட்டிருப்பது ‘கேரளா கிளப் ஆஃப் நியூட்ரிஷனிஸ்ட்’ என்கிற அமைப்பு. ஆய்வு முடிவில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சொல்லியிருப்பது இதுதான்...

‘‘மையாக அரைக்கப்பட்ட கோதுமையில், கடைசியாக மிஞ்சுவது பழுப்பு கலந்த மஞ்சள் நிற மாவு. இந்த மாவுடன் பென்சாயில் பெராக்ஸைடு என்னும் வேதிப்பொருள் சேர்க்கும்போது அது பளிச்சென வெள்ளை நிறமாகிறது. தொடர்ந்து ‘அலெக்ஸான்’ என்னும் இன்னொரு வேதிப்பொருள் கலந்து மாவை மிருதுவாக்க, அது மைதாவாகிறது. மேற்சொன்ன இரண்டு வேதிப்பொருட்களுமே நேரடியாக சர்க்கரை நோயை வரவழைக்கக் கூடியவை. 

பென்சாயில் பெராக்ஸைடு ‘ஹேர் டை’யில் பயன்படுத்தப்படுகிற ரசாயனப் பொருள். மாவிலுள்ள புரோட்டீனுடன் சேர்ந்து இதை எடுத்துக் கொள்ளும்போது உடலில் இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுகிறது. ‘அலெக்ஸான்’ என்பது இன்னும் மோசம். சர்க்கரை நோய் தொடர்பான ஆராய்ச்சிகளில், சோதனைக் கூடத்தில் எலிகளுக்கு சர்க்கரை நோயை வரவழைக்கக் கொடுக்கப்படுபவை இவை!’’

இந்த எச்சரிக்கை கண்ட மறுநாள் முதலே கேரளாவில் பரோட்டா குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தொடங்கி விட்டன சில நுகர்வோர் நல அமைப்புகள். தமிழ்நாட்டில் இந்த விஷயம் அவ்வளவாகத் தெரியவில்லை. சென்னையின் பிரபல நீரிழிவு மருத்துவர் விஜய் விஸ்வநாதனிடம் இது குறித்துப் பேசினோம்.

‘‘சர்க்கரை நோய் வர்றதுக்கு முன்னாலயும் பின்னாலயும் முக்கிய காரணியா இருக்கறது உணவுப் பழக்கம்தான். சரிவிகித உணவை எடுத்துக்கறது ஒண்ணுதான் இதுல இருந்து தப்பிக்க ஒரே வழி. சிலர், ‘இதுதான் பிடிக்கும்’னு குறிப்பிட்ட ஒரு உணவுப் பதார்த்தத்தைச் சாப்பிட்டே பழக்கப்பட்டுடறாங்க. அதுதான் தப்பு. ஒரே பொருளை திரும்பத் திரும்ப சாப்பிடறப்ப, அதுல அதிகமா இருக்குற சத்துகள் மட்டுமே உடல்லயும் அதிகமாச் சேருது. எல்லாப் பிரச்னைகளும் அங்க இருந்தே தொடங்குது.

எல்லா உணவுப் பொருட்களுமே சில பல வேதி நிகழ்வுகளைக் கடந்துதான் தயாராகுது. மைதாவுல கலக்கப்படுற பொருட்கள் பத்தி உறுதியா தெரியாம அதைப் பத்தி நாம கருத்து சொல்ல முடியாது. ஆனா, சில வேதிப்பொருட்கள் உடல்ல சேர்றப்ப ரத்தத்துல சர்க்கரையோட அளவு பாதிக்கப்படுதுங்கறது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டதுதான். தவிர, பரோட்டாவுல ஆயில், கலோரி அதிகமா இருக்கறதால உடல் வெயிட் போடறதையும் தடுக்க முடியாது. அதுவே சர்க்கரை நோய்க்குக் காரணமாவும் அமையலாம்’’ என்றார் விஸ்வநாதன்.

மத்தியான பரோட்டாக் கடை ஒன்றில் மாவு பிசைந்து கொண்டிருந்த மாஸ்டர் ஒருவரிடம் இதையெல்லாம் நாம் விளக்கிச் சொல்ல, ‘‘இது ஒழைப்பாளிங்க சாப்புடுறது சார். ஒடம்புக்கு ஒண்ணும் வராது. ரெண்டு பரோட்டா சாப்பிட்டுப் பாருங்க... அப்புறம் பேசுங்க’’ என்று நம்மை ஆஃப் செய்தார்.மைதா தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பேசியபோது, ‘‘மைதா மாவு என்னமோ முந்தா நேத்து வந்து இறங்கின மாதிரி பேசுறீங்க... பிரிட்டிஷ் காலத்துல இருந்து இதுலதான் கேக், பிஸ்கட் செய்யிறாங்க. சும்மா எதையாச்சும் கிளப்புறவங் களைப் பத்தியெல்லாம் நாங்க கவலைப்படலை’’ என்று முடித்துக் கொண்டார்கள். இப்படி அசால்ட்டா நம்மால இருக்க முடியலையே!

வீட்டு பரோட்டா ஓகே!

‘‘பரோட்டா மட்டுமில்லை... விரும்புகிற எந்த உணவையும் சாப்பிடலாம். ஆனால், அளவும் சுகாதாரமும்தான் முக்கியம்’’ என்கிறார் எம்.வி. நீரிழிவு மருத்துவமனையின் உணவியல் மருத்துவர் ஷீலா பால். ‘‘பரோட்டா சாப்பிட்டாலே சுகர் வந்திடும்னு நினைக்க வேண்டியதில்ல. அடிக்கடி, அளவுக்கதிகமா எடுத்துக்கறப்பதான் அப்படி ஆகும். எப்பவாவது சாப்பிடறதுக்கு பயப்பட வேண்டியதில்ல. ஆனா, ஓட்டல்கள்ல சாப்பிடறப்ப மசாலா, எண்ணெய் அதிகமா இருக்க வாய்ப்பிருக்கு. அதனால வீட்டுலயே பண்ணிச் சாப்பிடறது நல்லது. ஆனா, கண்டிப்பா ராத்திரி வேளையில வேண்டாம்’’ என்கிறார் அவர்..

2 comments:

  1. Very true. This article is mainly true for Indians. They call the wheat flour as 'Maitha' and at home they use 'Atta flour'.
    In Sri Lanka, we are using maitha for evrything, cakes, breads, parotta, kottu, buns. The healthy Atta is luxury for us.
    What is tru for parotta, is true for all wheat flour products in Sri Lanka.

    ReplyDelete
  2. The problem lies in addiction to some foods . Addiction
    is the culprit . Fizzy drinks is another addiction along
    with foods like Koththu . Koththu and Paratta are not
    new to Srilankan cuisine but were not widely consumed
    like now , every nook an corner and all class of people.
    Another easy food now in fashion on our meals is, noodles.
    Over consumption of anything , just anything , even if it
    is healthy food ,will cause problems to our health .These
    issues need to be addressed by health authorities but
    unfortunately they are busy with other issues of self
    benefit. Our religious organizations can do a tremendous
    service of this nature that are left behind by relevant
    bodies . There are many issues like this they can
    choose to serve the people along with calling for "Daawa"
    all the time. Is this not a "Daawa?" Why not take an
    interest in being intelligent as well ? My call is for
    all religious organization . First,live on this earth a
    healthy life to earn good deeds for the life hereafter.
    Longer life is what Islam recommends and promotes .

    ReplyDelete

Powered by Blogger.