Header Ads



குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளும் ஹிஸ்புல்லா

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் 65 ஆயிரம் வீட்டுத்திட்டப் பணிகளில் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டு நியாயமானது என்று மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். 

உலோகத்தில் அமைக்கப்படும் வீடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அறிக்கை ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியிருப்பதாகவும் அவர் கூறினார். 65 ஆயிரம் வீட்டுத்திட்டப் பணிகளை முன்னெடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள நிறுவனத்தை தெரிவு செய்தபோது மோசடி இடம்பெற்றிருப்பதாகவும், வீடொன்றிற்கு 21 இலட்சம் செலவு செய்து நிர்மாணிக்கப்படுவதை ஏற்க முடியாது என்றும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வெளிப்படையாகவே குற்றம் சுமத்தியிருந்தார்.

மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் பொய்யான பெயரொன்றில் நிறுவனமொன்றைப் பதிவுசெய்து பெருமளவு நிதியை மோசடி செய்வதாகவும், இதனால் வீட்டுத்திட்டத்தைப் பெறும் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் அமைச்சர் ஹிஸ்புல்லா, தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டார்.

இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு வீடுகள் யாழ்ப்பாணம் வலி.வடக்கில் பரீட்ச்சார்த்தமாக கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.