Header Ads



அரசாங்கத்தின் போக்கு, ஆச்சர்யமாக இருக்கிறது - அப்துர் ரஹ்மான்

"இலாபத்தில் இயங்கிய ஶ்ரீலங்கன் விமான சேவை தற்போது 128 பில்லியன் ரூபா நஸ்டத்தில் இயங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது ஆச்சரியப்படத்தக்க செய்தியல்ல. ஆனால்,   இந்த நஸ்டத்திற்கு பொறுப்பானவர்கள் தொடர்பில் அரசாங்கம் இன்னும் மென்மையாக நடந்து கொள்வதுவே பெரும் ஆச்சர்யமாக இருக்கிறது" என பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கன்  விமான சேவையின் தற்போதைய பரிதபிமான நிலை தொடர்பாக அரசாங்கம் தகவல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருக்கும் நல்லாட்சிகான தேசியமுன்னணி(NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேற் கண்டவாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

" எமிரேட்ஸ் விமான சேவையின் முகாமைத்துவத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்குக் 2008யில் கிடைத்த இலாபத் தொகை 9 பில்லியன் ரூபா ஆகும். அதே ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு கடந்த 7 வருடங்களில் ஏற்பட்ட மொத்த நஸ்டத் தொகை 128 பில்லியன்களாகும். ஶ்ரீலங்கன் விமான சேவை எமிரேட்ஸ் உடன் கொண்டிருந்த ஒப்பந்தத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ திடீரென 2008யில் முறித்துக் கொண்டதுவே இந்தப் பாரிய நஸ்டத்தின் தொடக்கப்புள்ளியாகும்.

2008 ஆம் ஆண்டு நமது வரிப்பணத்தில் மஹிந்தவும் அவரது சகாக்களும் லண்டனுக்கான பயணமொன்றுக்கு சென்றிருந்த வேளை, அவர்களை முன்பதிவுகள் எதுவுமின்றி  ஒரே விமானத்தில் இலங்கைக்கு அழைத்துவர வேண்டும் என மஹிந்த ராஜபக்‌ஷ கட்டளை இட்டார்.  குறித்த விமானத்தில் பயணிப்பதற்காக ஏற்கனவே பதிவு செய்து கட்டணம் செலுத்திய பயணிகளை அப்புறப்படுத்த முடியாது என எமிரேட்ஸ் சொன்னது. இதனால் கோபமடைந்த  மஹிந்த , ஶ்ரீலங்கன் விமான சேவை 9 பில்லியன் ரூபா இலாபமீட்டுவதற்குத் தலைமை தாங்கிய  அனுபவமிக்க பிரதம நிர்வாகியான பீட்டர் ஹில் என்பவரின் இலங்கைக்கான விசாவை இரத்து செய்து அவரை நாட்டை விட்டு அனுப்பினார்.

அதனைத் தொடர்ந்து எமிரேட்ஸ் தனக்கிருந்த பங்குகளை மஹிந்த அரசிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு வெளியேறி விட்டது. இந்த வாய்ப்பையும் தனது குடும்பத்திற்காக பயன் படுத்துக்கொண்ட  மஹிந்த , உடனடியாக  ஶ்ரீலங்கன் நிறுவனத்தின் தலைவராக தனது மைத்துனரான நிஸாந்த விகரமசிங்கவை நியமித்தார். அத்தோடு விமான சேவை நிர்வாகத்தில் எந்தவொரு முன்னனுபவமும் இல்லாதவரான கபில சந்திரசேன அதன் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.

அன்றிலிருந்து, நாட்டின் பெருமைக்குரிய விமான சேவையாக இருந்த ஶ்ரீலங்கன் மஹிந்த அரச குடும்பத்தின் தனிப்பட்ட சொத்தாகவும்  தமக்கு விருப்பமானவர்களுக்கெல்லாம் பல இலட்சம் சம்பளத்தில் தொழில் வழங்கும் நிறுவனமாகவும் மாறியது.

அது மட்டுமின்றி ஆட்டோ வாகனமொன்றை கொள்வனவு செய்வது போல விமானங்களை கொள்வனவு செய்ய மஹிந்த அரசு முடனைந்தது. சந்தை விலையிலும் பார்க்க பல நூறு மில்லியன் கூடுதல் விலை கொடுத்து A330 மற்றும் A350ஆகிய விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.

இந்தப் பின்னணியில்தான் இன்று ரூ.128 பில்லியன் என்கின்ற மீளமுடியாத கடன் சுமையில் ஶ்ரீலங்கன் இருக்கிறது. ஶ்ரீலங்கன் சேவையை தொடர்வதென்றால் அடுத்த 6 மாதங்களுக்கு மாத்திரம் திறைசேரி 40பில்லியன் கொடுத்துதவ வேண்டயிருக்கும். இந்த விமான சேவையை யாருக்கும் விற்கவும் முடியாமல் தொடர்ந்தும் நடாத்தவும் முடியாமல் இந்த அரசாங்கம் திணறிக் கொண்டிருக்கிறது. 

நமது நாட்டின் ஒரேயொரு விமான சேவையான ஶ்ரீலங்கன் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இது ஆச்சர்யமாக இல்லை.

ஆனால், இவ்வளவு தூரம் நாட்டைக் கொள்ளையடித்து நாசமாக்கியவர்கள் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் மென்மையான போக்குத்தான் நம்ப முடியாத ஆச்சர்யமாக இருக்கிறது. 

ஶ்ரீலங்கன் விமான சேவையில் நடந்த ஊழல் மோசடிகள் மற்றும் துஸ்பிரயோகங்களை ஆராய்ந்து அதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண்பதற்கான தனிநபர் ஆணைக்குழு ஒன்று கடந்த ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து அமைக்கப்பட்டது. பிரபல ஜனாதிபதி சட்டத்தரணியான J.C.வெலியமுன்ன அவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த ஆணைக்குழு விரிவான விசாரணைகளை மேற் கொண்டு அறிக்கை யொன்றையும் சமர்ப்பித்திருந்தது.  தேசத்தின் பெருமைக்குரிய  சொத்தாகவிருந்த ஶ்ரீலங்கன் விமான சேவையினை நாசம் செய்தவர்கள் யார் யார் என்ற விபரங்களை இந்த அறிக்கை பல மாதங்களுக்கு முன்னரே அம்பலப்படுத்தியிருந்தது

ஆனாலும், அவர்களில் ஒருவரையேனும் ஆரம்ப விசாரணைக்குக்கூட ஏன் அழைக்கவில்லை என்பதுவே பேரதிர்ச்சியான விடயமாகும்.  அரசாங்கத்தின் இந்த மென்மையான போக்கு தற்போதைய அரசில் அங்கம் வகிப்பவர்களையும்  கூட ஊழல்களில் ஈடுபடுவதற்கு ஊக்கப்படுத்தும் என்பதனையும் இந்த அரசாங்கம் கவனத்திற் கொள்ள வேண்டும்"

1 comment:

  1. மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய பொறியியலாளர் அப்துல் ரஹ்மான் அவர்களே உங்கள் கருத்தை நாம் பொதுமக்கள் என்ற வகையில் மனப்பூர்வமாக வரவேற்கின்றோம். மாபெரும் மோசடிமூலமாக மக்களின் கோடான கோடிப்பணத்தைக் கொள்ளையடித்தவர்களைப் பராமுகமாக நடந்து அவர்களைக் காப்பாற்றுவதன் பொருள் இந்த அரசாங்கமும் நல்லாட்சியின் பெயரால் மாபெரும் பணக்கொள்ளையடிப்பில் ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது.சரி அந்த மாபெரும் கொள்ளைக்கு எதிராக தாங்கள் தலைமை வகிக்கும் கிழக்கு மாகாணத்தில் பிரபலமான நல்லாட்சி இயக்கமும் ஏனைய பல மக்கள் குழுக்களுடன் சேர்ந்து இந்த அநியாயத்துக்கு எதிராக குரல்கொடுத்து சத்தியத்தை நிலைநாட்டி குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குமாறு அரசாங்கத்தைத்தூண்டவும் அதற்கு அழுத்தத்தைக் கொடுக்கவும் ஒரு திட்டத்தை வகுத்து ஒழுங்காகவும் வெற்றிகரமாகவும் வழிநடாத்துவது ஒரு அறப்போர் அல்லது அல்லாஹ்த்தஆலாவிடத்தில் நிச்சியம் அது ஜிஹாதாக பதியப்படும் என்பதையும் மிகவும் பணிவாக தாங்களுக்கு ஞாபகப்படுத்திக் கொள்ளவிழைகின்றேன். அது நல்லாட்சியின் பங்காளர்களாக எம் அனைவரினதும் கடமையாகும் என்பதையும் நாம் பரஸ்பரம் அறிந்து கொள்வோம். ஸலாம்

    ReplyDelete

Powered by Blogger.