நாமலின் அலுவலகத்திலிருந்து, முக்கிய ஆவணங்கள் கைபற்றப்பட்டது
பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு அரசாங்கத்துடன் வர்த்தக உடன்படிக்கைகளை செய்து 307 மில்லியன் ரூபாக்களை சம்பாதித்தமை தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு 5 இல் உள்ள நாமல் ராஜபக் ஷவுக்கு சொந்தமானது என கருதப்படும் என்.ஆர். கண்சல்டன்ஸ் மற்றும் க்வர்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் அமைந்துள்ள அலுவலகங்களில் இருந்து கடுவலை நீதிவானின் உத்தரவுக்கு அமைய 12 ஆவணங்களும் 4 கணினிகளும் புலனாய்வாளர்களால் கைப்பற்றப்பட்டு தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த அலுவலகம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, நாமலின் சகோதரரான யோஷித ராஜபக்ஷ சிக்கியுள்ள சி.எஸ்.என். விவகாரத்துடன் தொடர்புடைய முக்கிய ஆவணமொன்றும் தமக்கு கிடைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாமலுக்கு எதிரான விசாரணைகளில் அவரின் பணிப்பாளர்களாக கடமையாற்றிய மேலும் 7 பேரும் உள்ளடங்குவதாகவும் அவர்கள் தொடர்பிலும் பிரத்தியேகமாக கவனமெடுக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவ்வுயர் அதிகாரி கேசரியிடம் சுட்டிக்காட்டினார்.
கடுவலை நீதிவானிடம் 2015.07.28 ஆம் திகதி முதல் அறிக்கையிட்டு நாமலுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டிருந்தன. அதன் படி கடுவலை நீதிவானுக்கு 12 பீ அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டிருந்தன. இந் நிலையில் நாமல் ராஜபக் ஷ உள்ளிட்டோர் 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க கறுப்புப்பண சுத்திகரிப்பு சட்டங்களை மீறும் விதமாக சம்பாதிக்க பயன்படுத்தப்பட்ட நிறுவனங்கள் பத்தரமுல்லையில் இல்லை எனவும் அது கொழும்பு 5 பகுதியில் இருந்தே செயற்படுகிறது என்பதையும் கண்டறிந்த நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று முன் தினம் கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு வழக்கை மாற்றியது.
இதன் போது நாமல் தவிர்ந்த ஏனைய ஏழு சந்தேக நபர்களின் வெளி நாட்டுப் பயணம் நீதிமன்றினால் தடை செய்யப்பட்டது. நித்திய சேனாதி சமரநாயக்க, இரேஷா, சுஜானி போகொல்லாகம, பண்டார கனேகொட, தில்ருக் ஷி, லலிந்த ஹெட்டி ஆரச்சி, சட்டத்தரணி இந்திக ஆகியோரின் வெளி நாட்டு பயணமே இவ்வாறு தடை செய்யப்பட்டது.
இந் நிலையிலேயே 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நாமலுக்கு எதிரான விசாரணைகள் தீவிரப்ப்டுத்தப்பட்டுள்ளன.
Post a Comment