Header Ads



மாலிக் மும்தாஜ் ஹுசைன் காத்ரி என்ற, ஒரு கொலையாளியின் இறுதிச்சடங்கு


என் தந்தை, 2008-லிருந்து 2011-ல் படுகொலை செய்யப்படும் வரை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஆளுநராக இருந்தார். அந்தச் சமயத்தில் பாகிஸ்தானின் மத நிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவப் பெண் ஒருவருக்கு ஆதரவாக என் தந்தை இருந்தார். மதச் சிறுபான்மையினர் மீது வன்முறையை ஏவுவதற்கு இது போன்ற மத நிந்தனைச் சட்டங்களைத்தான் பாகிஸ்தானின் பெரும்பான்மை சன்னி முஸ்லிம்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். என் தந்தை இந்தச் சட்டங்களுக்கு எதிராகப் பேசியதால், தொலைக்காட்சி நெறியாளர்களின் தீர்ப்புகளுக்கு இலக்காகவும், முல்லாக்களின் கடுங்கோபத்துக்கு இலக்காகவும் ஆனார். பலருடைய பார்வையில் அவரும் ஒரு மத நிந்தனையாளராக ஆனார். ஜனவரி மாதத்தின் பிற்பகல் ஒன்றில், தனது மெய்க்காவலர் மாலிக் மும்தாஜ் ஹுசைன் காத்ரியாலேயே என் தந்தை சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஒரே நாளில் பாகிஸ்தானில் ஹீரோவானார் காத்ரி. இஸ்லாமாபாதில் உள்ள ஒரு மசூதிக்கு அவரது பெயரைச் சூட்டினார்கள். சிறையில் இருந்த அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்கு ஏராளமான மக்கள் வந்தார்கள். இதனால் நீதி வழங்கலில் தாமதம் ஏற்பட்டது. காத்ரிக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்த நீதிபதி, தன் உயிருக்கு ஆபத்து என்று நாட்டை விட்டுத் தப்பித்துச் சென்றுவிட்டார். ஆகவே, என் தந்தையைக் கொன்றவர் தண்டிக்கப்படுவது சாத்தியமே இல்லை என்று நினைத்தேன்.

காத்ரியின் மரண தண்டனை

அதற்குப் பிறகு, கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் அரசின் புதிய உறுதிப்பாடு நம்பிக்கைக் கீற்றை வெளிப்படுத்தியது. காத்ரியின் மரண தண்டனையை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதத்தில் உறுதிப்படுத்தியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிபரிடம் கொலையாளி செய்திருந்த கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. சட்டப்படி பார்த்தால், தான் தவறு செய்துவிட்டேன் என்று காத்ரி ஒப்புக்கொண்டதுபோல்தான் அந்தக் கருணை மனு. அப்புறம், கடந்த மாதத்தின் இறுதியில் இந்தச் செய்தி வந்தது: மாலிக் மும்தாஜ் ஹுசைன் காத்ரியை பாகிஸ்தான் தூக்கிலிட்டுவிட்டது. இந்த விஷயத்தை பாகிஸ்தான் எப்படி எடுத்துக்கொள்ளும், அதாவது அரசு இல்லை, பாகிஸ்தான் நாட்டின் மக்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.

லாகூரில் இருந்த என் சகோதரியிடம் பேசினேன். இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பாகிஸ்தானில்கூட ஒரு மாற்றம் ஏற்படக்கூடும் என்று ஒரு கணம் நாங்கள் நம்பினோம். எங்கள் தந்தையை காத்ரி கொன்ற பிறகு 5 ஆண்டுகளாக ஒன்றன் பின் ஒன்றாகக் கொடூரமான தாக்குதல்கள் நிகழ்ந்தன. டிசம்பர் 2014-ல் பெஷாவர் பள்ளி மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 132 குழந்தைகள் கொல்லப்பட்டனர். சூழலில் மாற்றங்கள். நிறையக் கேள்விகள். ரத்த வெறி, வன்முறைப் போக்கு, தெய்வீகச் சட்டத்தின் பேரால் படுகொலை செய்பவர்களே உண்மையில் எந்தச் சட்டத்துக்கும் கட்டுப்படாதவர்களாக ஆவதை மக்கள் உணர்கிறார்களோ? இராக்கிலும் சிரியாவிலும் ஐஎஸ் அமைப்பு நிகழ்த்தும் பயங்கரங்களால் மக்களிடையே மனமாற்றம் ஏற்பட ஆரம்பிக்கிறதோ? அப்படித்தான் நான் நினைத்தேன்.

பிபிசியிலிருந்து ஒருவர் என்னைப் பேட்டியெடுத்தபோது இதைப் பற்றியெல்லாம் கேட்டார். அவ்வளவு சீக்கிரம் இதைப் பற்றிக் கருத்துச் சொல்ல முடியாது என்றாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் அரசின் கடுமையான நிலைப்பாட்டையும் மக்களின் எண்ணத்தையும் ஒன்றாக வைத்துப் பார்த்துக் குழம்பிக்கொள்ளக் கூடாது என்றேன். அடுத்த நாள், காத்ரியின் இறுதிச் சடங்கு. மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது அப்போது தெரிந்துவிடும் என்று நினைத்துக்கொண்டேன். அப்படியே தெரிந்துவிட்டது.

கிட்டத்தட்ட 1,00,000 பேர்! மாலிக் மும்தாஜ் ஹுசைன் காத்ரியின் இறுதிச்சடங்கில் அவருக்கு இறுதி வணக்கம் செலுத்துவதற்காக ராவல்பிண்டியின் தெருக்களில் திரண்டுவந்தார்கள். பாகிஸ்தானின் தேசத் தந்தை முகம்மது அலி ஜின்னா, 2007-ல் படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ போன்றோர் வரிசையில் மிகப் பெரிய கூட்டம் திரண்ட இறுதிச்சடங்கு காத்ரியுடையது. ஆனால் ஒரு வித்தியாசம், இது அரசு நடத்திய இறுதிச்சடங்கு கிடையாது. ஊடகங்கள் மூடி மறைத்தாலும் தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு பங்கேற்ற இறுதிச் சடங்கு இது.

இதுதான் முதல் முறையா?

ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளை ஆம்புலன்ஸ் ஒன்று காத்ரியின் உடலைச் சுமந்துவந்தது. அதைச் சுற்றிலும் திரண்டுவந்த மக்கள் வெள்ளத்தின் படங்கள் வெளியாக ஆரம்பித்ததும் என்னுள் சில எண்ணங்கள் எழுந்தன: தண்டனை அளிக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு இந்த அளவுக்குப் பிரம்மாண்டமான இறுதிச்சடங்கு அளிக்கப்பட்டது இதுதான் முதல் முறையா? வீதிகளில் அலைகடலெனத் திரண்டு வந்தவர்கள் என் தந்தையின் மீதுள்ள வெறுப்பால் வந்தார்களா, அல்லது அவருடைய கொலையாளியின் மீதுள்ள அன்பால் வந்தார்களா? அவர்களுக்கு காத்ரியைத் தெரியவே தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தவரையில் தன் வாழ்க்கையில் காத்ரி செய்த ஒரே விஷயம் என் தந்தையைக் கொன்றதுதான். அதற்கு முன்பு காத்ரி என்பவர் யாரோ ஒருவர். அன்பின் வெளிப்பாடாக இல்லாமல் வெறுப்பின் வெளிப்பாடாக ஒரு இறுதிச்சடங்கில் இந்த அளவுக்கு மக்கள் வெள்ளம் திரண்டது இதுதான் முதல் முறையா?

இறுதியாக, வெறுப்பின் சித்தாந்தம் சவுதி-ஆதரவு முல்லாக்களிடமிருந்து வருவது மட்டுமல்லாமல், மக்கள் மத்தியிலும் தொற்றுநோய் போன்று பரவியிருக்குமெனில், என்ன நடக்கும் என்றும் நான் யோசித்துப்பார்த்தேன். கடும் போக்கை போதிக்கும் சில மசூதிகள், மதரஸாக்கள் மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 20 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் தேசம் முழுவதும் இந்த வெறித்தனம் பரவுமென்றால் நாம் என்ன செய்வது?

கொல்லும் சித்தாந்தம்

என் தந்தையையும் பலரையும் கொல்வதற்குக் காரணமாக இருந்தது நம் காலத்தில் நிலவும் இஸ்லாமிய சித்தாந்தத்தின் ஒரு வடிவம். மத்திய காலத்திய போக்கைப் பின்பற்றும் வடிவம் இது என்று சிலர் சொல்வார்கள். ஆனால், அது மரபான சித்தாந்தம்கூடக் கிடையாது. மிகவும் நவீன வடிவம் அது: முற்றிலும் புதியது. என் தந்தையைக் கொன்றவரின் மரணத்துக்குத் துக்கம் அனுசரிக்க வந்தவர்களெல்லாம் அதற்கு முன்பு யாரும் செய்யாததைச் செய்திருக்கிறார்கள். இறந்த மனிதன் மீதுள்ள அன்பால் அல்லாமல், அந்த மனிதன் கொன்ற நபர் மீதுள்ள வெறுப்பால் உத்வேகம் பெற்றுத் திரண்டுவந்த கூட்டம் அது!

முன்னுதாரணமற்ற அந்த இறுதிச் சடங்கைப் பார்க்கும்போது ஒரு விஷயம் எனக்குத் தெளிவாகப் புரிந்தது. இஸ்லாம் மதத்தில் கடும்போக்கைப் பின்பற்றும் ஒரு பிரிவினருக்கும் நம் காலத்துக்கும் உள்ள உறவின் சிறிய அடையாளமாக ராவல்பிண்டியில் கூடிய அந்தக் கூட்டத்தை நான் காண்கிறேன். எதற்கு எதிராக அது செயல்படுகிறதோ அதனிடமிருந்தே தன் சக்தியை அந்தப் போக்கு பெற்றுக்கொள்கிறது. அதாவது, மத நிந்தனைச் சட்டத்துக்கு எதிரான தரப்பு, மேற்கத்திய சிந்தனைப் போக்கின் தாக்கம், சுதந்திரச் சிந்தனை என்று என் தந்தை பின்பற்றிய நவீனப் போக்கு, அதிலிருந்துதான் அவர்கள் தங்கள் சக்தியைப் பெற்றுக்கொள்கிறார்கள். இதை அடையாளம் கண்டுகொள்வதால் மாலிக் மும்தாஜ் ஹுசைன் காத்ரிக்காகத் துக்கம் அனுசரிக்க வந்த அந்த 1,00,000 பேருக்கும் மன்னிப்பு வழங்கிவிட்டதாக ஆகிவிடாது. ஆனால், அவர்களுடைய வாழ்க்கையும் நம்முடைய வாழ்க்கையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை என்பதையே அது நினைவுறுத்துகிறது.

- ஆதிஷ் தஸீர், நாவலாசிரியர்.

- C ‘நியூயார்க் டைம்ஸ்’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

3 comments:

  1. நமது மரபணுக்களில் ஊறிப்போய் கசடுதட்டியுள்ள மத்திய காலத்துக்குரிய சிந்தனையினால் அன்றி, இன்றைய மனித மூளையின் உதவியுடன் அறிவார்ந்து சிந்திக்க வேண்டிய விடயம் இது.

    ReplyDelete
  2. அம்மாடி நீங்கள இன்னும் ஏன் இன்னமும் மத்திய கால சிந்தனையில் உள்ளீர்கள் ? பேசாமல் mini skirt ,tshirt or Sri Lankan dress ஆன Saree உடுக்கலாமே??? தலையில் எதற்கு ஹிஜாப்?

    ReplyDelete
  3. இஸ்லாம் ஆணாதிக்க மார்க்கம், பாலியல் சமத்துவம் வேண்டும் என்று சொல்லி இஸ்லாத்தின் மூலாதாரங்கலையே பிழை கண்டு தனக்கென போலி இஸ்லாம் உருவாக்கி முஸ்லிம்கள் தலையில் மிளகாய் அரைக்க முயலும் ஜெஸ்லிய ஜெஸ்லி ஏன் இங்கே வந்து மூக்கை நுழைக்க வேண்டும்?

    இஸ்லாமே பிழை என்று சொல்லும், இறைவனை விடப் பெரிய அறிவாளியான ஜெஸ்லியா "நமது மரபணுக்களில் ஊறிப்போய் கசடு கட்டியுள்ள" என்று சொல்கின்றார். உண்மையில் அது அவரது மரபணுக்களில் இருக்கலாம், எங்களது மரபணுக்களில் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.