புலியாக பாயும் மைத்திரி, பதுங்குகின்றாரா மஹிந்த..?
-நஜீப் பின் கபூர்-
புதிதாக பிறப்பெடுக்கத் துடிக்கின்ற அரசியல் கட்சியில் யார் விரும்பினாலும் யார் விரும்பாவிட்டாலும் பசில் ராஜபக்ஷ வழக்கம் போல் மஹிந்த தரப்பில் செல்வாக்கான மனிதராக இருப்பார். இதற்கான அங்கிகாரத்தை இப்போதைக்கே மஹிந்த அவருக்கு வழங்கி இருக்கின்றார். இதனால் கடந்த காலத்தில் மஹிந்தவை மண்கவ்வ வைத்தவர் என்று கூக்குரலிட்ட தினேஷ், விமல், வாசு போன்றவர்கள் பசிலின் கட்டளைகளுக்கு இந்த புதிய கட்சியில் அடி பணிந்தே செயல் பட வேண்டிய நிலை இருக்கின்றது.
இந்த விடயத்தில் ஒரு நியாயமும் இருக்கின்றது. இன்று நாட்டில் மஹிந்தவுக்கு இருக்கின்ற சிங்கள மக்களின் செல்வாக்கினால் தான் வங்குரோத்துக் கட்சி நடாத்துகின்றவர்கள் ஹீரோக்களாக அரசியல் மேடைகளில் இருக்க முடிந்திருக்கின்றது. எனவே இதன் பின்னர் பசிலுக்கு எதிராக வார்த்தைகளை இவர்கள் அடக்கியே பேசுவார்கள் அல்லது அதனைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.
ஒரு பல்கலைக்கழக பேரசிரியர் தொலைக் கட்சி விவாதம் ஒன்றில் குறிப்பிட்டது போன்று, இந்த வங்குரோத்துத் தலைவர்கள் மரணித்தால் கூட அவர்களை மயானத்துக்குத் தூக்கிச் செல்ல நான்கு ஐந்து பேர் இல்லாதவர்கள்தான் இப்போது சுதந்திரக் கட்சியை வழி நடத்துகின்றார்கள் என்று சாடி இருந்தார். மறு புறத்தில் எங்களைக் கடந்த காலங்களில் மண்கவ்வ வைத்த பசில்தான் மீண்டும் மஹிந்த சார்பில் முடிவுகளை எடுக்கின்றார். இவர் பின்னால் நாங்கள் எப்படிப் பயணிக்க முடியும் என்ற கருத்தும் முரண்பாடுகளும் மஹிந்த தரப்பில் இருந்து வருகின்றது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிருத்தியே இவர்கள் புதுக் கட்சி பற்றிய கோஷங்களை எழுப்பினாலும், இந்த வருடம் தேர்தல் இல்லை என்ற அறிவிப்பை ஆளும் தரப்பில் முக்கியஸ்தர்களினால் சொல்லப்பட்டிருக்கின்றது. என்றாலும் கட்டுரையாளனின் கருத்துப்பபடி அடுத்த வருடத்திற்கு முன் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது. எனவே 2016 செப்தெம்பர், நவம்பர் மாதங்களில் தேர்தலுக்கு சந்தர்ப்பம் இருந்து வருகின்றது. தற்போது மஹிந்த அணிக்கு அஞ்சி தேர்தலுக்கு மைத்திரி பின்னடித்தாலும் காலம் கடத்துவது அதனை விட ஆபத்தாக இருக்கும்.
எனவே தேர்தலில் மைத்திரி அணி மூன்றாம் நிலைக்கு வந்தாலும் தேர்தலைத் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்ற மஹிந்த தரப்பினரை ராஜபக்ஷக்களின் பாணியில் இந்த நாட்டு அரசியல் கலாச்சாரப்படி விலைக்கு- வரப்பிரசாதங்களுக்கு கொள்வனவு செய்ய முடியும். எனவே மைத்திரிக்கு இந்தத் தேர்தல் தேல்வி ஒரு கௌரவப் பிரச்சினை மட்டுமே அன்றி அவரது இருப்புக்கு இதனால் பெரிய பாதிப்புக்களுக்கு இடமிருக்காது என்று நாம் கருதுகின்றோம்.
இந்த அரசை வீழ்த்துவது என்பது ராஜபக்ஷக்களுக்கு ஒரு பெரிய காரியம் அல்ல அது சின்ன விடயம் என்று கடந்த சில தினங்களுக்கு முன் பசில் கூறி இருந்தார். அவரது கூற்று யதார்த்தமானது. கடந்த காலங்களில் அவர்கள் இந்தக் காரியத்தை செய்தும் காட்டி இருக்கின்றார்கள். பணம் என்றால் இந்த நாட்டில் எதையும் விலைக்கு வாங்கலாம் அதிலும் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பழகிப்போன எமது அரசியல்வாதிகளை சுலபமாகக் கொள்வனவு செய்ய முடியும்.
18 க்கு கைதூக்கியது பெறும் தவறு என்று இன்று சொல்கின்றவர்கள் ராஜபக்ஷக்கள் அதிகாரத்தில் இருந்தால் இப்படி எல்லாம் வார்த்தைகளை வெளியிடுவார்களா என்பது ஒரு சிறு பிள்ளை கூட தெரிந்து வைத்திருக்கின்து. எனவே பசில் சொன்ன படி இந்த அரசைக் ராஜபக்ஷக்களுக்கு கவிக்க முடியும் என்ற விடயத்தில் நாங்கள் உடன்படுகின்றோம். அதற்கான பின்னணியை இப்போது சமைக்கின்ற பணிகள் தான் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. இதற்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ராஜபக்ஷக்களுக்கு நல்லதொரு வாய்ப்பு. அதனையே அவர்கள் இந்த நேரத்தில் பயன் படுத்திக்கொள்ள முனைகின்றார்கள்.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற தீர்க்கமான நாடுகள் மஹிந்த தரப்பினருடன் கடுமையான கடுப்பில் இருக்கின்றன. மேலும் ஐ.நா. மனித உரிமைகள் விடயத்தில் மஹிந்த அரசாங்கத்தைப் போர்க்குற்றவாளிகள் என்ற கண்ணோட்டத்தில் இன்றும் பார்த்துக் கொண்டிருக்கின்றன. மைத்திரியின் வருகை மஹிந்த விடயத்தில் சர்வதேச சமூகம் இலங்கை மீதான தனது கவனத்தை மென்மைப்படுத்தி இருக்கின்றது. தெற்காசிய நாடுகள் கூட இப்படி இலங்கையில் ஒரு இராணுவப் புரட்சி ஏற்படுவதற்கு இடம் கொடுக்க மாட்டாது.
இந்தியா இந்த விடயத்தில் கடுமையாக நடந்து கொள்ள இடமிருக்கின்றது. ஒரு போதும் இலங்கையில் அப்படி ஒரு இராணுவப் புரட்சி ஏற்பட்டால் அதற்கு அங்கிகாரம் கொடுத்து மூக்குடைபட்டுக் கொள்ள சீனாவும் முனைய மாட்டாது எனவே இன்றைய நிலையில் இராணுவப் புரட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது எமது கருத்து. என்றாலும் கடந்த காலங்களில் மஹிந்த அரசங்கத்தில் நடந்த பாரிய ஊழல் மோசடிகள், கொலைகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து ரஜபக்ஷக்களின்; விடுதலை-விமோசனம் என்பது ஒரு ஆட்சி மாற்றத்தின் ஊடாகவே நிகழ முடியும் என்ற நிலை இருக்கின்றது. எனவே பசில் சொல்லும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஜனநாயக பாதையில் அதிகவாய்ப்புக்கள் இருந்து வருகினறது. அதற்கான முயற்சியில்தான் அவர்கள் தற்போது இறங்கி இருக்கின்றார்கள.
இப்போது பாய்வதும் பதுங்குவதும் பற்றிய கதை என்ன என்று பார்ப்போம். நாம் கடந்த கட்டுரைகளில் சொல்லி இருந்தது போன்று மைத்திரி எதிர்பார்த்த படி ஆட்சி மாற்றத்துடன் சுதந்திரக் கட்சி முற்றிலும் அவர் கட்டுப்பாட்டில் வரவில்லை. எப்படியும் முரண்டு பண்ணிக் கொண்டிருந்த சுதந்திரக் கட்சி மஹிந்த விசுவாசிகளை தன் பக்கம் உள்வாங்கிக் கொள்வதற்கும் பதவிகளைக் கொடுத்தோ, அவர்களுக்கு எதிரான கடந்த காலக் குற்றங்களுக்கு மன்னிப்பு என்று கொடுத்து மைத்திரிக்கு தனது அரசியல் பயணத்தை முன்னெடுக்க முடியாத அரசியல் கள நிலை. சிவில் அமைப்புக்களும் மைத்திரியைப் பதவிக்குக் கொண்டு வந்தவர்களும் இதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள.; குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குகிறோம் என்றுகூறி அதிகார ஆசனத்தில் நிற்கின்றவர் இப்படி வேலை பார்க்கவும் முடியாது.
தனக்கு தொந்தரவு கொடுக்கின்ற இந்த மஹிந்த விசுவாசிகளுக்கு விரும்பியோ விரும்பாமலோ நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் இப்போது வந்திருக்கின்றது. எனவே இதற்காக ஒரு வருடம் மைத்திரி பொறுமை காத்திருக்கின்றார் என்றும் சொல்ல வேண்டும். எனவே தான் அதிரடியாக எல்லை மீறி நடந்து கொள்கின்ற சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களை அதிரடியாக மைத்திரி களை பிடுங்கி இருக்கின்றார்.
இதன் மூலம் குறிப்பிட்ட தொகுதிகளில் இவர்களைச் செல்லாக்காசாக்கி புதிய அமைப்பாளர்களை வளப்படுத்தி சுதந்திரக் கட்சியிலுள்ள ஒரு குறிப்பிட்ட தொகையானவர்களையாவது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்பது மைத்திரி கணக்கு. அதில் இவர் எவ்வளவு தூரம் வெற்றிபெற முடியும் என்பது கேள்வியே! எனவே அமைப்பாளர்கள் விடயத்தில் மைத்திரியின் பாய்ச்சல் எவ்வளவு தூரம் சாத்தியம் என்று புரியவில்லை. உள்ளுராட்சி மன்றத் தேர்தலை வைத்தே மஹிந்ந தரப்பு மைத்திரிக்கு அதிக அச்சுறுத்தல்கள் தற்போது செய்து கொண்டிருக்கின்றது. இதனை வெற்றி கொள்வதில் அவருக்கும் கடினமான சவால்கள். இதற்கிடையில் மஹிந்தவின் இரட்டை வேடம் பற்றி மைத்தரி கூறி இருக்கின்றார் இந்த கதையில் ஏதோ மர்மங்கள் இருப்பது போல் தெரிகின்றது.
இந்த நெருக்கடிக்கு மத்தியில் நிதி அமைச்சர் ரவி கருணாரத்தன மஹிந்த காலத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் பாக்கி 1.4 ரில்லியன்கள் இருக்கின்றது. இதனை நாம் இப்போதுதான் கண்டு பிடித்திருக்கின்றேம். இதில் இந்த வருடம் கொடுக்க வேண்டிய பெரும் தொகைப் பணமும் அடங்குகின்றது என்று எச்சரிக்கை செய்திருக்கின்றார். இந்தக் கதையில் இருந்து அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதனை நாம் புரிந்து கொள்ள முடியும். எனவே அமைச்சர் இந்த வருடமே மற்றுமொரு பஜெட்டுக்குத் தயாராகின்றார் என்ற நிலை. இது அரசாங்கத்திக்ற்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கும்.
அத்துடன் கடந்த காலங்களில் மோசடிகளில் ஈடுபட்டுத் தற்போது ஆளும் தரப்பில் இருக்கின்ற அரசியல்வாதிகள் விடயத்தில் நிதிக் குற்றச்சாட்டுத் தொடர்பான விஷேட பொலிஸ் பிரிவு ஒற்றைக் கண்பார்வையில் தனது கடமைகளை முன்னெடுத்து வருகின்றது என்று மஹிந்த தரப்பினர் குற்றச்சாட்டு மக்களிடத்தில் அரசின் நடுநிலைத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி இருக்கின்றது. பிந்திய தகவல்படி தலைமைத்துவம், மற்றும் இந்திய விரோத கோஷம் ஆகியவற்றை மையமாக வைத்து மஹிந்த ஆதரவு அணிக்குள் தற்போது பனிப்போர் ஒன்று துவங்கி இருக்கின்றது.
எச்சரிக்கையா? அச்சுறுத்தலா?
சில தினங்களுக்கு முன்னர் அவர்களுக்கும் பிள்ளைகள் இருக்கின்றதுதானே என்று மஹிந்த கூறினார். குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகி இருக்கின்ற மஹிந்தானந்த அலுத்கமகே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிகாரிகளைக் கவனித்துக் கொள்கின்றோம் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் குறிப்பிட்டார். முன்னாள் பாதுகாப்புக் செயலாளர் இதனை விட 100 மடங்கு ஒரு ஆட்சி மாற்றம் வந்தால் கிடைக்கும் என்று பகிரங்கமாக எச்சரித்து வருகின்றார். அத்துடன் தனது அரசியல் பிரவேச விருப்பையும் அவர் அங்கு வெளியிட்டிருக்கின்றார். எனவே இவற்றை எல்லாம் அச்சுறுத்தலான வன்முறையான வார்த்தைகளாகத்தான் நோக்க வேண்டி இருக்கின்றது.
இவர்கள் உண்மையாகவே ஆபத்தான சண்டியர்கள். கிறீஸ் பூதங்களின் மூலகர்த்தாக்கள்.
ReplyDelete