பொன்சேகாவின் அமைச்சுப் பதவியை, பறிக்கக்கோரி வழக்கு தாக்கல்
சரத் பொன்சேகாவின் அமைச்சுப் பதவியை பறிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக முன்னாள் தென் மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன தெரிவித்தார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் தனது கன்னி உரையை நிகழ்த்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவையும் சாடுவதற்காக அதனை பயன்படுத்திக்கொண்டார்.
அதனால் அவரின் அமைச்சுப் பதவியை பறிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக முன்னாள் தென் மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன தெரிவித்தார். கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் அமைச்சுப்பதவியை ஏற்றுக்கொண்ட பின்னர் பாராளுமன்றத்தில் தனது கன்னி உரையை நிகழ்த்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கடுமையாக சாடினார்.
ஆனால் இதுவரையில் பாராளுமன்றத்தில் எவரும் இதுபோன்றதொரு கன்னி உரையை நிகழ்த்தியதில்லை. காரணம் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கமைய கன்னி உரையில் எந்த ஒரு அமைச்சரும் தமது எதிர்கால திட்டம் தொடர்பில் கூறுவதே வழமையாக இருக்கும். ஆனால் இவர் வழமைக்கு மாறாக தமக்கு எதிரானவர்களை சாடுவதற்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
அதேபோல் இவரை பீல்ட் மார்ஷல் என்று ஏற்றுக் கொள்ளவும் நாம் தயாரில்லை. உலக நாடுகள் பலவற்றிலும் பீல்ட் மார்ஷல் தர அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் எவரும் தமது தாய் நாட்டையும் இராணுவத்தினரையும் காட்டிக்கொடுத்தில்லை. ஆனால் இவர் அதனையே தொழிலாக கொண்டவர். அதனால் சரத் பொன்சேகாவை பீல்ட் மார்ஷல் என ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்நிலையில் இவர் அண்மையில் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பிலும் கூறியிருந்தார். இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற போது ஒருவார காலம் நாட்டில் இருக்கவில்லை என்றும் அந்த காலப்பகுதியில் கோத்தபாய ராஜபக்ச விடுத்த ஆணையின் பேரிலேயே யுத்த குற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இவர் தான் சர்வதேச விசாரணைகளுக்கு அஞ்சி இறுதி யுத்தத்திற்கு முகம்கொடுக்காமல் சீனாவிற்கு சென்று ஆயுதம் தொடர்பிலான மாநாடு ஒன்றில் பங்கேற்றிருந்தார். தற்போது அவரது பணியையும் தான் பொறுப்பேற்று செய்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவை சாடுவது வேடிக்கையாகவுள்ளது.
அத்துடன் ஒருவாரம் சீனாவில் இருந்த இவருக்கு எவ்வாறு யுத்தம் நிறைவடைந்தது என்பது தெரியும் என்ற கேள்விக்கும் அவர் பதில் வழங்க வேண்டும்.
கடந்த 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வியுற்ற கோபத்தில் தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பழிவாங்கும் முயற்சியே இதுவென்பது தெளிவாகின்றது. அதனால் அவரின் பதவியை பறிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன் என்றார்.
Post a Comment