ஈரானின் நிதி உதவியை, நிராகரித்த பலஸ்தீனர்கள்
கடந்த 5 மாதங்களாக நீடிக்கும் வன்முறைகளில் இஸ்ரேலிய படையினர் மற்றும் சிவிலியன்களால் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் ஈரானின் திட்டத்தை பலஸ்தீன அதிகார சபை நிராகரித்துள்ளது.
இந்த நிதியுதவிகளை நேரடியான முறையில் பலஸ்தீன குடும்பங்களுக்கு வழங்க ஈரான் கடந்த வாரம் அறிவிப்பொன்றை வெளியிட்டபோதும், அவ்வாறான உதவிகள் உத்தியோகபூர்வ வழியிலேயே வழங்கப்பட வேண்டும் என்று பலஸ்தீன நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இது பலஸ்தீன உள் விவகாரத்தில் தலையிடுவதாக இருக்கும் என்று பலஸ்தீன ஜனாதிபதியின் பேச்சாளர் நபில் அபூ ருதைனா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மதம் தொடக்கம் நீடித்துவரும் பலஸ்தீனர்களின் போராட்டம் ‘ஜெரூசலம் இன்திபாதா’ என்று அழைக்கப்படுகிறது. இதில் கொல்லப்பட்ட ஒவ்வொரு பலஸ்தீன குடும்பத்திற்கும் 7,000 டொலர் நிதியுதவி வழங்கும் திட்டத்தை ஈரான் அறிவித்திருந்தது.
அதேபோன்று இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இஸ்ரேலிய நிர்வாகத்தால் வீடுகள் இடிக்கப்பட்ட பலஸ்தீன குடும்பங்களுக்கு 30,000 டொலர்கள் வழங்கவும் ஈரான் முன்வந்துள்ளது.
ஈரான் 1987 ஆம் ஆண்டு தொடக்கம் பலஸ்தீன குடும்பங்களுக்கு வழங்கும் நிதி உதவிகளுக்கு மேலதிகமாகவே இந்த உதவிகள் வழங்கப்படுவதாக லெபனானுக்கான ஈரான் தூதுவர் முஹமது பதாலி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார். கடந்த ஒக்டோபர் தொடக்கம் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூடுகளில் 177 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு இதே காலத்தில் 28 இஸ்ரேலியர் கொல்லப்பட்டனர். இதில் இஸ்ரேலியர் மீது கத்திக்குத்து தாக்குதலுக்கு முயன்ற குற்றச்சாட்டிலேயே பெரும்பாலான பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Post a Comment