Header Ads



தொலைக்காட்சி நிலையத்திற்குள் புகுந்து, அமைச்சர் மீது தாக்குதல்

ஆர்ஜெண்டினாவில் மின் கட்டணங்கள் மிகப் பெரிய அளவில் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, அதுகுறித்து தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துக் கொண்டிருந்த அந்த நாட்டின் நிதியமைச்சரை ஆர்ப்பாட்டக் கும்பல் தாக்கியது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஆர்ஜெண்டினாவில் மாரிசியோ மாக்ரி தலைமையிலான புதிய ஆட்சி கடந்த பிப்ரவரி மாதம் அமைந்தது.

முந்தைய இடதுசாரி ஆட்சியில் அளிக்கப்பட்ட மானியங்கள் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகக் குற்றம் சாட்டிய அதிபர் மாரிசியோ மாக்ரி, மின் கட்டணங்களுக்கான மானியத்தைத் தள்ளுபடி செய்தார். இதனால் மின் கட்டணம் 7 மடங்கு அதிகரித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூழலில், நிதியமைச்சர் அடால்ஃப் சஃப்ரான் மின் கட்டண உயர்வு குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வாய்க்கிழமை இரவு பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது தொலைக்காட்சி நிலையத்துக்குள் புகுந்த ஆர்ப்பாட்டக் கும்பல், அமைச்சருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியது.

தொலைக்காட்சி ஊழியர்கள் அவரைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்குள் கும்பலில் இருந்த ஒருவர் அமைச்சரின் முதுகில் தாக்கினார். எனினும், நிலைமையைச் சமாளித்த தொலைக்காட்சி ஊழியர்கள் அமைச்சரைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து "விளம்பர இடைவேளை' என்று கூறி அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது என தகவல்கள் தெரிவித்தன.


No comments

Powered by Blogger.