Header Ads



"சுதந்திரக் கட்சி தலைவராக, மைத்திரிபாலவை ஏற்றுக்கொள்ள முடியாது"

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேனவை ஏற்றுக்கொள்ள முடியாது என இரத்தினபுரி மாவட்ட உள்ளுராட்சி மன்ற ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இன்று -29- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களின் வாக்குகளினால் தெரிவான தாம், சுதந்திரக் கட்சியின் வாக்குகளினால் தெரிவாகா தற்போதைய ஜனாதிபதியை கட்சியின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியின் ரத்தினபுரி மாவட்ட செயலாளர் சட்டத்தரணி பிரியந்த கருணாதிலக்க, இரத்தினபுரி மாவட்ட உள்ளுராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைவர் லக்ஸ்மன் பிரேமரட்ன, செயலாளர் ஜனக புஸ்பகுமார, உறுப்பினர்களான டீ. அத்தநாயக்க, கே.எம்.குணவர்தன, எம்.எம். ரட்னதிலக்க, ஆர்.சோமரட்ன ஆகியோர் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

கட்சியின் யாப்பின் அடிப்படையில் கட்சியின் யாரேனும் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சி கைப்பற்றியுள்ளது. ஜனநாயகத்தை புறந்தள்ளி மக்கள் விரோத ஆட்சியொன்றே நடைபெறுகின்றது.

உண்மையான சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான தாம் எவ்வாறான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

சுதந்திரக் கட்சியின் மஹிந்த தரப்பு ஆதரவாளர்களே இந்த செய்தியாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.